‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘திரைப்பட விமர்சனம்

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், இளங்கோ குமரவேல், பக்ஸ், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன் நடித்துள்ளனர் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பில் பசிலியன் , மகேஷ்ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளனர்.

சசிகுமார் ஓர் ஈழத்தமிழர்.அவரது மனைவி சிம்ரன்.இரண்டு ஆண் பிள்ளைகளுடன் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலமாக தமிழ்நாடு வருகிறார். முதலில் ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து காரில் சென்னை வருகிறார்கள்.சென்னையில் சட்ட விரோதமாக குடியேறி கேரளாவில் இருந்து வந்தவர்கள் என்று கூறி வசித்து வருகிறார்கள்.விரைவில் அக்கம் பக்கத்தினர் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு ஓர் அசம்பாவிதம் நடக்கிறது அதாவது குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடக்கிறது. இதற்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கும் முடிச்சு போடுகிறது காவல்துறை.அந்தக் குடும்பத்தை தொடர்பு படுத்தி எப்படியாவது வழக்கை முடிக்க முயற்சி செய்கிறார்கள்.அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை  சொல்வது தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்.

கிராமத்து மண்ணின் மைந்தராக நிறைய படங்களில் நடித்து வந்த சசிகுமார் , இப் படத்திலும் தனது வழக்கமான நடிப்பு பாணியில் சிறப்பாகவே நடித்துள்ளார்.மொத்த படத்தின் எடையையும் அவர் தன் தோளில் சுமந்துள்ளார். அவர் ஈழத் தமிழ் பேசி நடித்திருப்பது அவரது பாத்திரத்திற்குப் புது நிறம் காட்டியுள்ளது.

சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ள சிம்ரனுக்கு பெரிய வேலை இல்லை. நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்தும் அவருக்கான நடிப்புத் தருணங்களை நிறைய அளித்து அவரைப் பயன்படுத்தி இருக்கலாம்.

சசிகுமார் – சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக மிதுன் ஜெய்சங்கர் வருகிறார். இளைய மகனாக கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இருவரது பணிகளிலும் குறை இல்லை.அவர்களை குறிப்பாக குறிப்பாகச் சிறுவன் கமலேஷ், தனது குறும்புத்தனங்களால் படத்திற்கு கலகலப்பூட்டுகிறார்.

இப்போதெல்லாம் யோகி பாபுவை படத்தின் கதையைச் சொல்லும் ஒரு தொகுப்பாளர் போல படத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் .இடை இடையே வந்து போவார். இப்படி இப்படத்தின் ஆரம்பத்தில் வரும் யோகி பாபு, அதன் பிறகு காணாமல் போய், முடியும் முன்பு தலை காட்டி மறைகிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி எனப் பிற துணைபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் இயக்குநர் சொன்னபடி நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு  ஒரு திரைப்படத்திற்கான காட்சி முழுமையைக் காட்டவில்லை.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், திரைக்கதையில் பலவீனங்கள் தெரியாத அளவிற்கு முடிந்தவரை காட்சிகளைக் கச்சிதமாக தொகுத்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் அவல நிலையை வைத்துக் கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். யுத்தங்கள் பாதிப்பு விளைவுகளை வைத்து அதை பின்னணியாக்கி இலங்கிலிருந்து தமிழகம் அகதிகளாக வரும் மக்களின் பிரச்சினைகளை உணர வைத்து ,அவர்களிடம் இருக்கும் அன்பையும் மனிதநேயத்தையும் எடுத்துக்காட்டி உள்ளார் இயக்குநர்.அதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருப்பது வணிகப்படத்திற்கான முயற்சி எனலாம்.ஆனால், திரைக்கதையிலும் காட்சி அமைப்பிலும் நேர்த்தி காட்டாததால் சில இடங்களில் சோர்வூட்டுகிறது.

முதல் பாதி முழுவதும் காட்சி அழுத்தம் இல்லாததால் தொலைக்காட்சித் தொடர் உணர்வை ஊட்டுகின்றது.படத்தின் இரண்டாம் பாதியில் சசிகுமாரின் மூத்த மகனின் காதல் தோல்வி, இளைய மகனின் குறும்புத்தனம் ஆகியவற்றை வைத்து பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.அது ஓரளவுக்குக் கைகொடுத்துள்ளது. அதைவிட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், இறுதியில் எதிர்பார்க்காத சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் மூலம் படத்தை முடித்திருப்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆறுதல்.

மொத்தத்தில், இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஜனதா சாப்பாடு.