கமல்ஹாசன், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர் , அபிராமி, அசோக் செல்வன், வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, மகேஷ் மஞ்சுரேக்கர், வடிவுக்கரசி, பகவதி பெருமாள், பாபுராஜ், ரோஹித் ஷராஃப், ,அர்ஜுன் சிதம்பரம்,சின்னி ஜெயந்த், சேத்தன், நடித்துள்ளனர்.மணிரத்னம் இயக்கியுள்ளார்.இசை: ஏ ஆர் ரகுமான்,ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்,படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத் .ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளன.படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1987 -ல் வெளிவந்த ‘நாயகன்’ மணிரத்னம் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கிய காவியமாக இன்றும் பேசப்படுகிறது .அந்த’நாயகனி’ன் தாக்கம் இன்றும் உள்ளதையும் அது ஒரு மைல் கல் போன்ற ஒரு படமாக குறிப்பிடப்படுவதையும் காண முடிகிறது.அதற்குப் பிறகு அவர்களது கூட்டணியில் அதுபோல் ஒரு படம் வராதா என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நிலையில் உருவாகி உள்ளது தான் இந்த ‘தக் லைஃப்’.
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் இன்னொரு இளைய முகமாக எஸ் டி ஆர் என்கிற சிலம்பரசன் இணைந்துள்ளார். படத்தின் கதை என்ன என்று கேட்டால் படம் சட்டவிரோத செயல்களை செய்து இயங்கி வரும் நிழல் உலகத்தைப் பற்றிப் பேசுகிறது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு கேங்ஸ்டர் கதை தான். இந்தத் திரைப்படம் 165.42 நிமிடங்கள் கொண்டது.’இது எமனுக்கும் எனக்கும் நடக்கிற கதை’ என்று கமல் சொல்வதில் இருந்து படம் தொடங்குகிறது. தாதாக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியுமே மரணத்தின் நுனியில் நிற்கும் தருணமே என்பதை ஆரம்பத்திலேயே கதை உணர்த்துகிறது.
சக்திவேல் என்கிற பெயர் கொண்ட கமல்ஹாசன் ஒரு தாதா .அவர் தலைமையில் ஒரு கூட்டம் இயங்குகிறது. அதற்கு எதிர்க் கூட்டம் ஒன்றும் உண்டு.இந்த இரண்டு கூட்ட மும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன.ஒரு மோதலில் தனது தந்தையை சின்னஞ்சிறு வயதிலேயே இழக்கிறார் அமரன் என்கிற சிலம்பரசன் டி.ஆர் .அமரனைக் காப்பாற்றுகிறார் சக்திவேல்.தன்னுடன் வைத்துக் கொள்கிறார் தனது பிள்ளையைப் போல பார்த்துக் கொள்கிறார்.
ஒரு சம்பவம் தொடர்பாக சக்திவேல் சிறை செல்ல நேர்கிறது. பொறுப்பை அமரனிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறார்.தன் தந்தையைக் கொன்ற சக்திவேல் தான் தனக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது அமரனுக்குத் தெரிகிறது. அதைப் பயன்படுத்தி உடன் உள்ளவர்கள் பகைமைத்தீ மூட்டுகிறார்கள்.சக்திவேலை தீர்த்துக்கட்ட அமரன் முடிவு செய்கிறான்.இந்த மோதலில் சக்திவேல் வீழ்ந்து விட்டதாக ஒரு தோற்றம் வருகிறது.ஆனால் அதற்குப் பிறகு எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன.முடிவு என்ன என்பதுதான் ‘தக் லைஃப் ‘படத்தின் மீதிக் கதை.
‘நாயகன்’ வெளிவந்த கால கட்டம் வேறு. இந்த ‘தக் லைஃப்’ படம் வெளிவந்துள்ள காலகட்டம் வேறு .அந்தக் கால மாற்றத்தைப் புரிந்து கொண்டு திரையின் அசாத்தியத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது.அதைப் பயன்படுத்தி கமலஹாசனும் தன தோற்றத்தில் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்து உலக நாயகனிலிருந்து பிரபஞ்ச நாயகனாக உயர்ந்துள்ளார். படத்தில் வரும் விண்வெளி நாயகா பாடல் அவருக்குப் பொருத்தமே.அலட்டிக் கொள்ளாமலேயே தனது நடிப்பில் மூலம் அசத்தியுள்ளார்.ஆக்சன் காட்சிகளில் காட்டியிருக்கும் அதிரடியில் பார்வையாளர்களைப் பதற்றம் கொள்ள வைக்கிறார்.குறிப்பாக உச்சகட்டம் நோக்கி செல்லும் காட்சிகளில் கமலுக்கும் எஸ் டி ஆர் க்கும் நடக்கும் மோதல் பர பர ரகம்.அந்தக் கண்மூடித்தனமான மோதலைப் பார்ப்பவர் கண்கள் கலவரத்தில் சிவக்கும்.
கலைஞானி கமலுடன் நடிக்கும் போது எந்த பதற்றமும் இல்லாமல் நடித்து ஈடு கொடுத்துள்ளார் எஸ்டிஆர் .அவரது தோற்றமும் நடிப்பும் வசன உச்சரிப்பும் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளன.தான் மட்டுமே மேலோங்கி தெரிய வேண்டும் என்று நினைக்காமல் இதற்கு வாய்ப்பளித்த கமல்ஹாசனின் பெருந்தன்மையையும் பாராட்ட வேண்டும்.
நடிப்பு ராட்சசர்கள் பலர் இந்தப் படத்தில் உள்ளனர். எனவே,த்ரிஷா நடிக்கவே வேண்டாம் வந்தாலே போதும், அவரது திரைத்தோற்றம் நிறைவு செய்து விடும்.வழக்கம்போலவே இந்தப் படத்திலும் நடிக்காமலேயே தோன்றி கவர்கிறார்.த்ரிஷா ஆதரவற்ற பெண்ணாக வருகிறார் .முதலில் கமலுக்கு ஜோடி போல் தோன்றுகிறார். பிறகு எஸ் டி ஆர் உடன் சேர்கிறார்.இந்தக் கதாபாத்திரத்தின் மர்மம் என்ன படம் பார்த்தால்தான் தெரியும்.சக்திவேலின் அண்ணன் மாணிக்கமாக எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் நாசர் தனது வர்ணஜால நடிப்பைக் காட்டியுள்ளார்.
கமல் , எஸ் டி ஆர், த்ரிஷா ஆகிய முக்கியமான மூவருடன் அபிராமி, அசோக் செல்வன், வையாபுரி, ,ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அலி ஃபாசல், சஞ்சனா, மகேஷ் மஞ்சு ரேக்கர், வடிவுக்கரசி, பகவதி பெருமாள், பாபுராஜ், ரோஹித் ஷராஃப், ,அர்ஜுன் சிதம்பரம், சின்னி ஜெயந்த், சேத்தன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் தங்களது குணச்சித்திரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இது வெறும் தாதா கதை அல்ல; வெறும் வெட்டு குத்து கதை என்று கூறி விட முடியாது .மனிதனின் ஆதார உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்வு பூர்வமான தருணங்களும் படத்தில் உள்ளன. அண்ணன் -தங்கை பாசம், கணவன் -மனைவி அன்பு,காதல், அன்பு, பொறாமை பகைமை, தாழ்வுணர்ச்சி என்று உணர்வுகளுடன் குடும்ப உறவையும் இணைத்துள்ளார் இயக்குநர்.இது ரசிகர்களை ஈர்க்கும். ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்களில் மிரட்டி இருக்கிறார். ஜிங்குஜா ஒரு பாடல் கமர்சியல் கலக்கலுக்கு என்றால் அஞ்சு வண்ண பூவே மயிலிறகால் வருடும் தன்மை கொண்டது.என்ன வேணும் உனக்கு இன்னொரு ரகம். இப்படி ஒவ்வொன்றும் ஒரு நிறம் ,தரம்.
ரவி கே சந்திரன் கேமரா விழிகளை விரிய வைக்கும் காட்சிகளைப் படப்பதிவு செய்து நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.புதுடில்லி, காட்மாண்டு, கோவா என்று படப்பிடிப்பு இடங்களுக்கான தேர்வுகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டத்தை முன்னிறுத்துகின்றன. குறிப்பாக இமயமலை முகடுகளில்,பள்ளத்தாக்குகளில் சுழன்று சுழன்று கேமரா ஒளிப்பதிவு செய்துள்ளது.
ஒரு நிமிடம் கூட நம்மைக் கவனம் நழுவ விடாமல் மிக நேர்த்தியாக படத்தொகுப்பு செய்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத் .
மணிரத்னத்தின் இனி நீயும் நானும் கடைசி வரைக்கும், சந்தேகம் வந்தால் சாவுதான் முடிவு போன்ற போன்ற சுளீர் வசனங்கள் ஆங்காங்கே தீப்பொறியாய் உள்ளன .
மொத்தத்தில் இந்த ‘தக் லைஃப்’ திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய முழு நீள பிரம்மாண்ட ஆக்ஷன் படம்.