‘தண்டேல் ‘ திரைப்பட விமர்சனம்

நாக சைதன்யா ,சாய் பல்லவி ,பிரகாஷ் பெலவாடி ,திவ்யா பிள்ளை ,ராவ் ரமேஷ் ,கருணாகரன் ,’ஆடுகளம்’ நரேன் ,பப்லு பிருத்விராஜ் ,மைம் கோபி ,கல்ப லதா,கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா நடித்துள்ளனர்.எழுதி இயக்கி உள்ளார் சந்து மொண்டேட்டி. ஒளிப்பதிவு : ஷ்யாம் தத், இசை : தேவி ஸ்ரீ பிரசாத் , படத்தொகுப்பு : நவீன் நூலி,கதை : கார்த்திக் தீடா ,தயாரிப்பு நிறுவனம் : கீதா ஆர்ட்ஸ் ,படத்தை வழங்குபவர்: அல்லு அரவிந்த், தயாரிப்பாளர்: பன்னி வாஸ்.

இப்படம் 2019ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மீனவர் வாழ்வின் கண்ணீர்க் கதை.
‘தரை மேல் பிறக்க வைத்தாய் எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தாய்,கரைமேல் இருக்க வைத்தாய் பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய் ‘என்கிற பாடலின் கருத்தைச் சொல்கிற மீனவரின் வாழ்வியல்.

அது ஆந்திராவில் உள்ள மீனவர் கிராமம்.மீன்பிடித் தொழில் செய்து வருகிறார் நாக சைதன்யா . அவரை அதே ஊரைச் சேர்ந்த சாய் பல்லவி சிறு வயது முதல் நெருங்கிப் பழகி காதலித்து வருகிறார். வழக்கமாக அப்பகுதி மீனவர்கள் குஜராத் அருகே உள்ள அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர்.நடுக்கடலில் அப்படி நீண்ட தூரம் செல்வதால் அவர்கள் திரும்பி வர சில மாதங்கள் ஆகும். இதனால் நாக சைதன்யாவைக் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனக் கூறி சாய் பல்லவி எச்சரிக்கிறார். மீறிச் சென்றால் நமது காதல் நிலைக்காது என்றும் சொல்கிறார். ஆனால் ஊர் மக்களுக்காகவும், தன்னை நம்பி உள்ள 22 மீனவர்களுக்காகவும் கடலுக்குள் செல்கிறார் நாக சைதன்யா.

ஆனால் கடலுக்குள் சென்றவருக்கு விபரீதம் காத்திருக்கிறது.நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் வீசுகிறது.படகு நிலை தடுமாறியதால் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சென்று விடுகின்றனர். பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.இதனிடையே சாய் பல்லவிக்கும், கருணாகரனுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. அதனைத் தொடர்ந்து நடந்தது என்ன?சிறையில் இருந்து நாக சைதன்யா வெளியே வந்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.

இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதால் சினிமாத்தனத்திலிருந்து விலகி படம் தனியே தெரிகிறது.

படத்தில் மீனவ இளைஞன் ராஜு என்கிற பாத்திரத்தில் நடித்துள்ள நாக சைதன்யா உண்மையான மீனவர் போல் வாழ்ந்து காட்டியுள்ளார்.அந்த அளவிற்கு அவரது உடல் மொழியும் நடை உடை பாவனைகளும் அமைந்துள்ளன.

மீனவப் பெண்களின் பிரதிநிதியாக ,அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் அப்படி ஒரு பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து அசத்தியுள்ளார்.
காதலனிடம் அன்பு காட்டும் போதும் தனது வாழ்வின் இருத்தல் நிலைக்காகப் போராடும் போதும் தனது நடிப்பின் மூலம் அந்த சத்யா பாத்திரத்துக்கு உயிரூட்டி உள்ளார். அவரது தோற்றமும் திரையை ஆக்கிரமித்து ரசிகர்களைக் கவரும்.
மேலும் இந்தப் படத்தில் கருணாகரன், ஆடுகளம் நரேன் மற்றும் மீனவர்களாக நடித்துள்ளவர்கள் என அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளனர்.

மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதைப் பற்றியும் இலங்கை பாகிஸ்தான் என்று பிற நாடுகளில் அவர்கள் கைது செய்வது பற்றியும் நாம் செய்திகளாகப் படித்துச் கடந்து போய் விடுகிறோம். அப்படி ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். யதார்த்தமான வாழ்வியல் படத்தை இயக்குநர் சந்து மொண்டேட்டி கொடுத்துள்ளார்.

தொய்வில்லாத திரைக்கதை மூலம் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் தத்துவப் பாடல் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறது. பின்னணி இசையும் பிரமாதமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஷயாம் தத் அற்புதமாக கேமராவைக் கையாண்டு உள்ளார். அரபிக்கடலும் மீனவ கிராமங்களும் அழகு காட்சிகள்.
காலம் காலமாக உள்ள மீனவப் பிரச்சினையை அழகாக கையாண்டு அதோடு சமகால அரசியல் நிகழ்வைப் பதிய வைத்து ஒன்றிணைத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் தண்டேல் உண்மைச் சம்பவத்தை நினைவூட்டி நல்ல திரைக்கதையுடன் புதிய திரை அனுபவத்தைத் தருகிறது.