‘தி ஒடிஸி’ திரைப்பட விமர்சனம்

மேட் டாமன்,டாம் ஹாலண்ட்,ஆன் ஹாத்வே,ராபர்ட் பேட்டர்சன்,லூபிடா நியாங்கோ,சம்ந்தா மார்டன்,ஜெண்டயா, சார்லிஸ் தெரோன்  நடித்துள்ளனர்.கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு – ஹாய்டே வான் ஹாய்டெமா ,இசை – லுட்விக் கோர்டான்சன் ,படத்தொகுப்பு – ஜெனிஃபர் லேம் ,ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் – ஸ்காட் ஃபிஷர் ,விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்- ஆண்ட்ரூ ஜாக்சன்,உடை வடிவமைப்பு – எலன் மிரோஜ்னிக் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணி சேர்ந்து உழைத்துள்ளனர். இது யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியீடு.

கிரேக்கத்தில் ஹோமர் எழுதிய மகா காவியமாகக் கருதப்படும் ஒடிஸி கிறிஸ்துவுக்கு முன்பு உருவான காவியமாகும்.அதன் அடிப்படையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இந்த ‘தி ஒடிஸி’ (The Odyssey)திரைக்காவியம்.கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.  முற்றிலும் புதிய IMAX® ஃபிலிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையாக IMAX® ஃபிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமை கொண்டது இந்தப் படம்.

நோலனின் 13 வது படைப்பாக வெளியாகியி ருக்கும் இது அவரது முந்தைய படைப்புகளான ‘தி டார்க் நைட்’ முத்தொகுப்பு, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து வந்துள்ளது.இதன் படப்பிடிப்பு இந்தப் பூமியில் உள்ள 6 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

எப்போதும் புராணங்கள் காவியங்கள் வீரம், காதல் ,அன்பு, அறம் ,கருணை போன்றவற்றிற்கு இடமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்.காவியத்தில் அதில் இயங்கும் கதை மாந்தர்கள் அவர்கள் வெளிப்படுத்தும் மனித உணர்வுகள் ஆங்காங்கே விரியும் கிளைக் கதைகள் என்று ஒரு பரந்து பட்ட அனுபவத்தைத் தரக்கூடியவை .

கிறிஸ்டோபர் நோலன் மிகவும் பிடிவாதக்கார திரைப்படைப்பாளி. ஒரு திரைப்படம் என்பது பல்வேறு கலை நுட்பங்கள் ஒன்று இணைந்து சேர்ந்திசையாக ஒலிக்கும் சிம்பொனி போன்றது .இந்த அனுபவத்தை எப்போதும் தர முயற்சி செய்பவர் கிறிஸ்டோபர் நோலன்.அதன் விளைவை இந்தப் படத்தில் காண முடிகிறது.

ஒடிஸி காவியத்தின் அடிநாதமாய் இயங்கும் பாத்திரங்களையும் அவர்களின் ஆதார உணர்வுகளையும் விட்டு விடாமலும் சமகால மனிதர்களின் எண்ண உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.கதை என்னவோ தொன்மம் சார்ந்ததாக இருந்தாலும் வளர்ந்த நவீனத் தொழில்நுட்ப சாத்தியங்களையும் கலந்து உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம் .

இந்தப் படத்தின் கதை என்பது நம்மூரில் பிரபலமாக விளங்கும் ராமாயணம், மகாபாரதம் போன்றது தான். நம்மூரில் இந்தக் காவியங்கள் எத்தனையோ வகையாக எத்தனையோ பார்வையில் சொல்லப்பட்டுள்ளன. அதேபோல் கிறிஸ்டோபர் நோலனின் பார்வையில் ஹோமரின் காவியம் கூறப்படுகிறது.

கிரேக்க மண்ணில் இத்தாகா என்பது பாறைகள் நிறைந்த தீவு. அப்பிரதேசத்தின்அரசன் ஒடிசியஸ் .அவரது புகழ் பெற்ற ‘ட்ரோஜன் குதிரை’ வியூத்தின் மூலம் அகமெம்னானுக்காகப் போரை வென்று தருகிறார். அவரது மகன் டெலிமக்கஸ், ஒடிசியஸ் போருக்குச் சென்றபோது ஒரு கைக்குழந்தையாக இருந்தான்.அவன் தற்போது வளர்ந்து இளைஞனாகி விட்டான். போர் முடிந்து ஒடிசியஸ் தாயகம் திரும்புகிறார். அவர் வரும் வழியில், அவரது பயணத்திற்குக் கடவுள்கள், அசுரர்கள், பெரும்புயல்கள், சூறாவளிகள், எதிர்பாராத பேரிடர் நிகழ்வுகள் என்று நிறைய இடையூறுகளைச் சந்திக்கிறார்.

இத்தாகாவில், டெலிமக்கஸ்க்கும், அவனது தாய் பெனிலோப்பிற்கும் மரண அபாயம் தரும் பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது.தந்தை உயிரோடு தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் மகன் டெலிமக்கஸ் தேடுகிறான்.மன்னர் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வஞ்சகமும் குரூரமும் கொண்ட இளவரசர்களும் பிரபுக்களும், டெலிமக்கஸின் அரண்மனையை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். அதிகாரத்திற்குப் போட்டி போடுகிறார்கள்.ஒடிசியஸ் திரும்ப மாட்டார் என்று தங்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய அரசனாக்குமாறு ராணி பெனிலோப்பை நெருக்குதல் செய்கிறார்கள்.முடிவு என்ன என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக்கதை.

கதை என்பது இதுதான்.ஆனால் திரைப்படமாக மறு உருவாக்கம் செய்யப்படும்போது அந்தத் தொழில்நுட்ப சாத்தியம் வெளிப்படுத்தும் பிரம்மாண்டம் என்பது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு ஆச்சரிய விளைவைத் தரும் ஒன்றாக மாறியிருக்கிறது.
அப்படி ஒரு பிரமாண்ட முயற்சியாக உருவாகி வெளியாகி இருக்கிறதுஇந்த ’தி  ஒடிஸி’.

தொன்மத்தின் கதையை எடுத்துக் கொண்டாலும் அதை நவீன ஐமாக்ஸ் தொழில் நுட்பம் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார், கிறிஸ்டோபர் நோலன்.

இந்தப் படத்தின் தலைமைத் தளபதி கிறிஸ்டோபர் நோலன் தான் என்றாலும் கதை மாந்தர்கள் ஒளிப்பதிவாளர் இசை அமைப்பாளர் நடிகர்கள் அனைவரையும் அவரவர் பகுதிகளில் சுதந்திரமாக இயங்க விட்டு இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்.

ஒடிஸியஸாக வரும் மாட் டேமன், தனது முதிர்ந்த  நடிப்பால் அப்பாத்திரத்திற்கு  உயிரூட்டியிருக்கிறார். போர் வீரனாகவும், குடும்பப்பாசம் கொண்ட சாமான்யனாகவும் அவரது நடிப்பு மனதை ஈர்க்கிறது.

டெலிமக்கஸாக வரும் டாம் ஹாலண்ட்,  தந்தையைத் தேடும் மகனின் மன உணர்வுகளை யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.  அன் ஹாதவே பெனலோப்பாக வருகிறார், சாந்தமானவராகவும் ஆக்ரோஷவராகவும் அந்த மனைவியின் வேடத்தில் நடித்துள்ளா.மேலும் சமந்தா மோர்டன், லுபிடா நியோங்கோ, ராபர்ட் பாட்டின்சன், ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட நடிப்புக்கலைஞர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பான நடிப்புப் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக படம் மிக உயர் தரத்தில் உருவாகியுள்ளது. பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, கண்கவர் அரங்குகள், இயற்கைவெளிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள், கடல் பயணங்கள் மற்றும் போர்க்களக் காட்சிகள் அனைத்தும் உலகத் தரத்தில் அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் ஹோய்டே வான் ஹோய்டெமா ,இசையமைப்பாளர் லுட்விக் கோரன்சன் இருவரும் இரு பெரும் தூண்களாகப் படத்தைத் தாங்கி நிற்கிறார்கள்.

திரையில் ஒரு பிரளயம் என்று கூறும் வகையில் காட்சிகளில் பிரம்மாண்டம் இருக்கிறது. அதற்கான கதை நிகழ்விடங்கள் கூடுமானவரை செயற்கை உருவாக்கம் இல்லாமல் இயற்கையான பின்புலங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில் இந்தத் திரைப்படம் திரையில் ஆச்சரியம் தரும் அனுபவத்தை அனைவருக்கும் தரும்.