‘போட்டோகிராபர்’ திரைப்பட விமர்சனம்

அஷ்ரஃப்,ஜனனி சாமிநாதன்,கருணாகரன், ,ஆடுகளம் நரேன் ,உறியடி சிவா,தேவி மகேஷ் நடித்துள்ளனர்.

அஷ்ரஃப் எழுதி இயக்கியுள்ளார்.ரயீஸ் அஹ்மத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ராஜ்குமார் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.
RC பிரணவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.சண்டைப் பயிற்சி : தினேஷ் சுப்பராயன்,கலை : பி. சரவணன்,வசனம் & பாடல்கள் : பிரேமன்.அப்துல் பாசித் சையத் தயாரித்துள்ளார்.

ஆடுகளம் நரேனின் அதாவது தொழிலதிபர் செங்குட்டுவனின் மகன் அஷ்ரப் அதாவது வீரா.தனது மகனைத் தனது கட்டுமானத் தொழிலில் ஈடுபடுத்த அவருக்கு விருப்பம். ஆனால் வீராவுக்கு போட்டோகிராபியில் தனி ஆர்வம். எங்காவது தனியாக வனப்பகுதிக்குச் சென்று வைல்டு லைஃப் படங்கள் எடுப்பது அவருக்குப் பிடிக்கும். அப்படிக் கொடைக்கானல் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் உள்ள மர்மமான காட்டிற்குச் செல்ல விரும்புகிறார். காரணம் அங்கே தங்க மரம் ஒன்று இருப்பதாகவும் அது மிகவும் ஆபத்தான காட்டுப் பகுதிக்குள் இருப்பதாகவும் கேள்விப்படுகிறார். ஒரு சாகச அனுபவமாக அங்கே சென்று படம் பிடித்து வர நினைக்கிறார் .ஆனால் உள்ளே சென்றதும் திசை மறந்து மாறிப் போகிறது. எங்கே செல்வது என்று தெரியாமல் இரவும் பகலும் காட்டுக்குள் சிக்கிக்கொண்டு சிரமப்படுகிறார். அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நினைக்கிற போது துப்பாக்கியுடன் ஒருவர் வீராவைப் பார்த்து சுட முயற்சி செய்கிறார்.அதிலிருந்து தப்பித்து ஓடுகிறார். அங்கே அவரைத் தேடி அவரது காதலி தர்ஷினி வருகிறார்.அவர் வீட்டுக்கு அழைக்கிறார். இம்மானுஸ் என்ற அந்த தங்க மரத்தைப் படம் எடுக்காமல் தான் வரமாட்டேன் என்கிறார் வீரா.கோபமாக தர்ஷினி மர்மமான காட்டுப் பகுதிக்குள் சென்று காணாமல் போய்விடுகிறார்.அந்த நபர் ஏன் வீராவை நோக்கிச் சுட வேண்டும்? வீரா விரும்பிய தங்க மரத்தைப் படம் எடுத்தாரா? காணாமல் போன தர்ஷினி கிடைத்தாரா? போன்ற கேள்விகளுடன் செல்லும் கதையின் முடிவு என்ன என்பதுதான் 130.54 நிமிடங்கள் கொண்ட ‘போட்டோகிராபர்’ படத்தின் மீதிக் கதை கதை நாயகன் வீராவாக அஷ்ரஃப் நடித்துள்ளார். படத்தில் சுமார் முக்கால்மணி நேரம் வனாந்தரத்தில் அவர் தவிப்பதையும் தனியாக நின்று அவர் போராடுவதையும் காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட காட்சிகளில் ஒரு தனி நபராகத் திரையில் தோன்றி அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளைக் கடத்தி விடுகிறார்.

வீராவின் காதலி தர்ஷினியாக வரும் நடிகை ஜனனி சாமிநாதன் சில காட்சிகளில் வந்து போகிறார்.
வீராவின் அம்மாவாக நடித்திருப்பவர் பாசமுள்ள தாயாக பார்ப்போர் மனதில் பதிகிறார். தந்தையாக ஆடுகளம் நரேன் வழக்கம் போலத் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.வீராவின் நண்பன் நண்பன் கதிரவனாக கருணாகரன் சில காட்சிகளில் வந்த போகிறார்.மருத்துவராக வருகிறார் நிழல்கள் ரவி.

பிற நடிப்புக் கலைஞர்கள் கதைக்கு ஏற்றபடி குறைவில்லாத நடிப்பினை வழங்கி உள்ளார்கள். கதையில் வீராவின் அம்மாவாக வருகிறவர் பற்றியும் அவருக்கு விரைவில் இளம் வயதிலேயே முதுமை அடையும் அடல்ட் புரோஜீரியா நோய்க்காளாவது பற்றியும் காட்சிகள் வருகின்றன.இது இளமைப் பருவத்தின் தொடக்கத்திலோ அல்லது இளம் வயதிலோ ஆரம்பித்து, விரைவான முதுமையை ஏற்படுத்தும்.வீராவின் அம்மாவை எடை உயரம் குறைந்து முடி மெலிந்து நரைத்து சரும மாற்றங்கள், மெலிந்த கைகள்  கால்கள், குரல் மாற்றங்கள், வழக்கத்திற்கு மாறான முகத்தோற்றம் என்று காட்டியிருப்பது வலிந்து திணிக்கப்பட்டவையாகத் தெரிகின்றன.
இப்படிப்பட்ட நோய் வந்தவராக அந்தத் தாயார் பாத்திரத்தை காட்டி இருப்பது ஏன்?அது படத்தில் கதை ஓட்டத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை .அது செண்டிமெண்டாக வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

படத்தின் பெரும்பகுதி நடுக்காட்டில் திசை தெரியாத மதி கெட்டான் சோலை என்கிற காட்டுப் பகுதியில் நடக்கிறது. வேறு பாத்திரங்கள் இல்லாமல் தனி பாத்திரமாகவே அந்தக்ஃ காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து படமாக்கி நம்மை பார்க்க வைத்துள்ளார்கள்.அந்த வகையில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு அந்தக்காட்சிகளின் வழியே கண் முன் தெரிகிறது.பின்னணி இசையும் அதற்காக ஓங்கார கூச்சலிடாமல் அளவான ஒலி அமைப்பில் ஒலிப்பது ஆறுதலாக இருக்கிறது.தொய்வில்லாமல் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. படத்தொகுப்பாளருக்கு பாராட்டுக்கள்.

அந்த தங்கமரம் பற்றிப் படத்தில் பேசப்படுகிறது. அது கற்பனையா மாயையா என்கிற தெளிவில்லாமல் இருக்கிறது .மற்றபடி வழக்கமான சினிமா மசாலாப் படங்களிலிருந்து மாறுபட்டு நம்மை நடுக்காட்டுக்கு அழைத்துச் சென்று காட்டுகிற அனுபவத்தை இந்தப் படம் வழங்குகிறது.எனவே குறைகளை மறந்து இந்தப் படத்தை ரசிக்கலாம்.

மொத்தத்தில் எடுத்துக் கொண்ட காட்டு வழிப் பயணம் என்கிற அனுபவத்தை நமக்குப் படம் அளிக்கிறது.எளிய முயற்சியில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள்.