தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன . இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
நேற்று மாலை 6 மணியளவில் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர். முதலில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில், சரத்குமார் அணியினர் முன்னிலை பெற்றிருந்தனர். உணவு இடைவேளைக்குப் பின்னர், உறுப்பினர்கள் நேரடியாக அளித்த வாக்குகள் எண்ணப்பட்டன.
முதல் இரண்டு சுற்றுகளில் முன்னிலை பெற்ற சரத்குமார் அணியினர், பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கத் தொடங்கினர். பொதுச்செயலாளர் பதவிக்கு, முதன்முறையாக தேர்தலை சந்தித்த நடிகர் விஷால், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராதாரவியை வீழ்த்தி, வாகை சூடினார். நடிகர் விஷால், 1,445 வாக்குகள் பெற்றார். ராதாரவி 1,138 வாக்குகள் பெற்றார்.
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமார், நாசர் இடையே கடும் போட்டி நிலவியது. குறைவான வாக்குகள் வித்தியாசத்தில், இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால், பரபரப்பு கூடியது. இறுதியில், நடிகர் நாசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
நடிகர் நாசருக்கு 1,334 வாக்குகளும், நடிகர் சரத்குமாருக்கு 1,231 வாக்குகளும் கிடைத்தன. பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட, விஷால் அணியின் நடிகர் கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் கார்த்தி, 1,384 வாக்குகளும், இவரைத் எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர். கண்ணன் 1,031 வாக்குகளும் பெற்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலில், பாண்டவர் அணியினர், அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், காவல்துறைக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தவர்.” நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு அணியை உருவாக்கி போட்டியிட்டோம். எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மூத்த கலைஞர்கள் சக்கர நாற்காலியில் இயலாத நிலையிலும் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர். அவர்களில் நான் பலபேரை பார்த்தது கூட இல்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவோம்.” என்றார்.
நடிகர் சங்கத்தில் நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர் கூறினார்.அவர் பேசும் போது,”சொல்ல முடியாத நெகிழ்ச்சியான உணர்வில் இருக்கிறோம். யாரையும் தோற்கடிக்க நடந்ததல்ல இந்த நிகழ்வு. ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது. மூத்த கலைஞர்களின் அனுபவமும் இளைஞர்களின் ஒற்றுமையும் சேர்ந்து வேறு ஒரு திசை நோக்கி பயணிக்க உள்ளோம். நாங்கள் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி செல்வோம்.
முதலில் மாபெரும் திருவிழாவை நடத்திய, வாக்களித்த அனைவருக்கும் நன்றி. திடீர் சவால் இது. 4 பேர் சேர்ந்து ஆரம்பித்து இவ்வளவு பெரிய நிகழ்வாக செய்துள்ளோம். சங்கத்தை சிறப்பாக வழிநடத்துவோம். நாங்கள் ஒன்றாக இருப்போம். நானும் சரத்தும் உளமார கட்டிப்பிடித்து எங்கள் உணர்வுகளை பரிமாறி கொண்டோம். சரத்குமாரின் ஒத்துழைப்பை கேட்டுள்ளேன். அவரும் ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார். நான் சோர்ந்திருந்த போதெல்லாம் உற்சாகமூட்டி, எங்கள் குழுவின் போர்வாளாக திகழ்ந்த விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.