‘பாரிஸ் கஃபே’.  திரைப்பட விமர்சனம்

குரு சோமசுந்தரம் அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா குமார், சாய் விக்கி , நயனா சாய், பிபின் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர்சராஜ் சீலன் இயக்கியுள்ளார்
கே இசையமைத்துள்ளார். சதேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்பையும், தாமு MFA கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

எல்.வி. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கண்மணி ரங்கநாதன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்

குரு சோமசுந்தரம் அரசு மருத்துவர் மிகவும் நியாயமானவர், எளிமையானவர்.அவரது மனைவி அனுமோல் சமூக சிந்தனை கொண்டவர்.இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.’காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட தே இன்பம்’ என்று  வாழ்கிறார்கள்.

மருத்துவக் கருத்தரங்கம் ஒன்றுக்காக பிரான்ஸ் செல்கிறார் குரு சோமசுந்தரம். அங்கே ஒரு ஓட்டலில் ஒரு மகிழ்ச்சியான காதல் ஜோடியின் படத்தைப் பார்க்கிறார் .ஆனால் அதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.தமிழகம் வந்து அவர்களைப் பற்றி அறிந்து கொண்டவர், அதை மனைவியிடம் அது பற்றிக் கூறுகிறார். அதனால் இருவரிடையே பிணக்கு வந்து விடுகிறது. இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
குரு சோமசுந்தரம் அரசு மருத்துவராக இருந்தபோது மேலதிகாரிகளின் அழுத்தத்தால் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது அந்தக்   காதல் ஜோடியின் ஆணவக் கொலையை மறைத்து அறிக்கையை எழுதி விடுகிறார். இதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். அதிகார வர்க்கத்துக்கு உடந்தையாக இருந்ததால் பிரிந்து போகிற அனுமோல் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று களத்தில் இறங்குகிறார் .அதில் அவர் வெற்றி பெற்றாரா? குரு சோம சுந்தரத்துடன் மறுபடியும் சேர்ந்தாரா என்பதுதான் 116.43 நிமிடங்கள் கொண்ட ‘பாரிஸ் கஃபே’ படத்தின் மீதிக் கதை.
 
குரு சோமசுந்தரத்தின் மகள் அர்ச்சனாவும் காதலன் விஜய் விஷ்வாவும் படிப்பு சார்ந்து தங்கி இருக்கிறார்கள். அப்போது அச்ச்சனாவுக்குத் தன் பெற்றோர் பிரிந்து இருப்பது தெரிகிறது.ஏன் என்று கேட்டபோது முன் கதை சொல்லப்படுகிறது.இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று  மகள் முயற்சி செய்கிறார். அதற்கான  வழிகளில் இறங்குகிறார் இப்படித்தான் படம் தொடங்குகிறது.
‘பாரிஸ் கஃபே’ என்று படத்தின் பெயராக இருக்கிறது. வெளிநாட்டுப் பின்னணியில் ஏதாவது வித்தியாசமான கதை கூறுவார்கள் என்றால் தமிழ் சினிமாவின் தேய் வழக்காகிப் போன ஒன்றான ஆணவக் கொலை என்பதை எடுத்துக்கொண்டு பாரிஸ் முலாம் பூசி பெயிண்ட் அடித்துக் கொடுத்துள்ளார்கள்.அதையும் அழுத்தமில்லாத நம்ப முடியாத காட்சிகளின் மூலம் கூறி இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.
படத்தில் பிரதானமான மபாத்திரங்களில், கணவன் – மனைவியாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இருவரும் எளிய தோற்றம் இயல்பான நடிப்பு என்று திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். மனிதரின் அந்தந்த நேரத்தில் நியாயங்களை பிரதிபலிக்கும் குரு சோமசுந்தரம் பாத்திரம் இயல்பாக இருந்தாலும் அனுமோல்  பாத்திரத்தில் பிரச்சாரத் திணிப்பு தெரிகிறது.
இளம் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் விஜய் விஷ்வா , அர்ச்சனா இருவரும் இளமையான தோற்றத்தின் மூலம் புத்துணர்ச்சியூட்டும் காட்சிகளில் வருகிறார்கள்.அமரத்துவம் கொண்ட ஜோடியாக வரும் சாய் விக்கி மற்றும் நயனா சாய் இருவரும் குறைந்த காட்சிகளில் வந்தாலும் மனம் கனக்க வைக்கிறார்கள்.
வெளிநாட்டுப் பின்னணி கொண்ட இந்தக் கதையை வெளிநாடு செல்லாமலேயே உருவாக்க முடியும் அதற்குத் தொழில்நுட்பச் சாத்தியங்கள் உண்டு என்று இந்தப் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி, அமெரிக்கா மற்றும் பாரிஸ் போன்ற வெளிநாட்டுப் பின்புலங்களை கிராபிக்ஸ் மூலம் பொருந்தும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
கே இசையில் பாடல்கள் சோடை போகாமல் கேட்கும் வகையில் உள்ளன.பின்னணி இசையும்  பிசகவில்லை.
ஆணவப் படுகொலைகள் சார்ந்த ஒரு கதையையும் அதற்கான நீதியையும் வெளிநாட்டுப் பின்புலம் கொண்ட பின்னணியில் கூற முயன்றுள்ளார்  இயக்குநர் சரஜ் சீலன்.மொத்தத்தில், ‘பாரிஸ் கஃபே’ வண்ணமயமான பின்னணியில் ஒரு கருத்து சொல்லும் படம்.