ஹரிஷ்,தனலட்சுமி, கல்கி ராஜா, மொட்டை ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி நடித்துள்ளனர். பிரபுராம் சி இயக்கியிருக்கிறார் .இனியன் ஜெ. ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சஹிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார்.
‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற பெயரில் குடிகாரர்கள் ஒரு கூட்டமாக இயங்குகிறார்கள் .அதற்கு ஒரு தலைவர் இருக்கிறார்.அவர்தான் படத்தின் கதாநாயகன். குடிகாரர்கள் தங்களுக்குள் சுகத்துக்கங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களது பெரிய பிரச்சினையே மது தட்டுப்பாட்டை எப்படிச் சமாளிப்பது என்பதுதான். இப்படித் தொடங்குகிற கதை மதுவின் மகிமை பற்றி விவரித்து மதுவின் கொடுமையைப்பற்றிக் கூறி எச்சரிக்கிறது. அதற்கான கதையின் பயணம் எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த ‘நல்ல படம்’ படத்தின் கதை.
முள்ளை முள்ளால் எடுப்பது போல் மதுவின் கொடுமைகளைப் பேச, மதுவைப் பற்றிப் பேசியிருக்கிறது படம்.
இந்தப் படத்தின் கதை நாயகன் ஹரிஷ், டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.குடிகாரர்கள் வசதியாக சொகுசாகக் குடிப்பதற்கு அடைக்கலம் தருகிறார்.
அது மட்டுமல்ல ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பையும் தொடங்கி ,தலைவராக இருந்து நடத்தி வருகிறார்.எந்த நேரத்திலும் மது மயக்கத்தில் இருக்கும் அவரை டாக்டருக்குப் படிக்கும் நாயகி தனலட்சுமி காதலிக்கிறாராம்.
நாயகன் ஹரிஷ் மட்டுமல்ல அவரது அல்லக்கை நண்பர்களும் எந்த நேரமும் மது போதையில் இருக்கிறார்கள் இந்தக் கொடிய பழக்கத்தால் ஒவ்வொருவரும் மானம் இழந்து மதி கெட்டுப் பாதிக்கப்படுகிறார்கள்.அவர்களை மீட்க குடும்பம் அல்லாடுகிறது.செய்வதறியாது மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வருகிறது. மது அடிமைகள் செய்வது அறியாமல் தவிக்கிறார்கள்.மதுவுக்குத்தடை இருப்பதால் ஒரு கட்டத்தில் மது அருந்த முடியாது என்று தெரிகிறது.வேறு வழி இல்லாமல் மது அருந்தாமல் குடும்பத்தில் கவனம் செல்கிறது. இழந்து போன மகிழ்ச்சியை குடும்பத்தில் காண்கிறார்கள்.இப்படி அவர்கள் மனம் திருந்தி வாழும் போது மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன.அப்போது நாயகனும் மற்றவர்களும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தான் ‘நல்ல படம்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் டாக்டர்.ஏ.ஹரிஷ், கல்லூரி மாணவர் போல் இளமையாக இருக்கிறார். அந்தக் குடிகாரர் கதாபாத்திரத்தில் ஒட்டாமல் பயணிக்கிறார். ஆனால் நகைச்சுவை, காதல் , பாடல் காட்சிகளில் கவனம் ஈர்த்திருக்கிறார். நாயகியாக வரும் தனலட்சுமி, நாயகனைத் துரத்தி விரட்டிக் காதலிக்கிறார்.பாடல் காட்சிகளில் கூடுதல் அழகு காட்டியிருக்கிறார்.நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கல்கி ராஜா,கலகலப்பாக நகைச்சுவைக் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.
படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் வரும் மொட்டை ராஜேந்திரன், ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தங்கள் வேலையைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷ், கதைக்கு தேவையான விதத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பணியாற்றியிருக்கிறார்.பாடல் காட்சிகளில் இளமைக்கொடி பறக்கிறது.சஹிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பிரமாதம் இல்லை என்றாலும் ஓகே ரகம்.
பட உருவாக்கம் மிகவும் மலிவாக உள்ளது. எனவே காட்சிகள் மனதில் ஒட்டாமல் விலகி விலகிச் செல்கின்றன.தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கும் பிரபுராம்.சி, தற்போதைய காலக்கட்டத்தில் மக்களிடம் அதிகரித்திருக்கும் மதுப்பழக்கத்தை மறக்கடிப்பதற்கான தீர்வை எளிமையான காட்சிகள் மூலம் மலிவான உருவாக்கத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். ‘நல்ல படம்’ மதுக் கொடுமையைப் பற்றி பேச வந்து மது மகிமையைப் பற்றிப் பேசி ஒரு வழியாக மதுவின் தீமைகளைக் கூறி எச்சரிக்கிறது.
இந்தப் படத்திற்கு வரிவிலக்கு பெறுவதை விட நாட்டுக்கு மதுவிலக்கு என்பதே தங்களது லட்சியம் என்று படக்குழு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
படத்திற்குள் பல்வேறு திரைக்கலைப் போதாமைகள் இருந்தாலும் ’நல்ல படம்’ கூறியுள்ளது நல்ல பாடம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


