பாலா தயாரிக்கும் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தில் பல புதுமைகள் உள்ளன.அவற்றில் தமிழச்சி பாடல் எழுதியதும் ஒன்று.எழுத்து ,கவிதை, பேச்சு, அரசியல் மேடை என வலம் வரும் தனித்த அடையாளமுள்ளவரான தமிழச்சி தங்கபாண்டியனை பாடல் எழுத வைத்தது எது?.
கவிஞர் பாடலாசிரியராக ஆகியிருக்கும் அனுபவம் பற்றி தமிழச்சி என்ன கூறுகிறார்?
” பிசாசு’ படத்தில் நான் ஒரு பாடல்தான் எழுதியிருக்கிறேன். .அதனால்தான் அன்றைய பிசாசு’ ஊடக விழாவில் கூட நான் பெரிதாகப் பேசவில்லை.
அந்தப்பட பாடல் அனுபவம் எனக்கு சௌகர்யமாக இலகுவாக இருந்தது. தன்னியல்பாக இயங்கும்படி அமைந்ததில் மகிழ்ச்சி.
அந்தப் படத்துக்கு உங்களுக்குத் தோன்றுவதை ஒரு கவிதைமாதிரி எழுதித்தாருங்கள் என்று மிஷ்கின் கேட்டார். அப்படி நான் எழுதிக் கொடுத்ததுதான் அந்தப்பாடல்.
அது ஒரு கதாபாத்திரத்தின் குரலோ, இருவர் பாடுவதோ அல்ல. பொதுவான பாடலாக இருக்கும்.
திரைப்படத்தில் நான் பாடல் எழுத வேண்டும் பலரும் கேட்டதுண்டு.பாலா எனக்குப் பிடித்த இயக்குநர். நீண்ட நாட்களாகவே பாடல் எழுத வேண்டும் என்று சொல்லி வந்தார். அவர் மீதுள்ள அன்பில் பிரியத்தில்தான் அவர் படத்தில் எழுதினேன் அதாவது அவர் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் எழுதியிருக்கிறேன்.
மிஷ்கின் நான் மதிக்கும் இயக்குநர். நிறைய வாசிப்பவர். கவிதை உணர்வுமிக்கவர். சிறந்த திரைப்படைப்பாளி.அவர் மீதும் எனக்கு மதிப்பண்டு.
பாலாவும் மிஷ்கினும் தமிழ்த்திரையுலகில் தேர்ந்த படைப்பாளிகள். .அவர்கள் வழக்கமான படைப்பாளிகள் அல்ல.தரமான வலிமையான கதை சொல்லிகள். அழுத்தமான காட்சிகளுடன் கதை சொல்பவர்கள். படைப்பு நேர்த்தி கொண்ட படைப்பாளிகள்.அவர்கள் தனக்கென தனியான திரைமொழி கொண்டவர்கள்.
அவர்கள் இணைந்துள்ள இப்படத்தில் நான் பாடல் எழுதியது தொடர்பயணத்தின் போது சாலையில் மரத்தின் நிழலில், நதிக்கரையில் அமர்ந்து இளைப்பாறிய அனுபவத்தை தந்தது.
இப்பாடல் பொதுத் தன்மையுடன் இருக்கும்.
எல்லா மணிதருக்குள்ளும் நல்ல கெட்ட எண்ணங்கள் இணைந்தே இருக்கும் அதே போல தேவதைக்குணமும் பிசாசுக் குணமும் இணைந்தே இருக்கும். சதவிகிதம் வேறுபடும் போதுதான் குழப்பம் ஏற்படுகிறது. பிசாசுத்தன்மை எல்லாருக்குள்ளும் இருக்கும். பிசாசுகள் வெறுத்து ஒதுக்க வேண்டியவை அல்ல.இப்படிப்பட்ட உணர்வில்தான் பாடல் போகும்.
நான் எழுதியதை ஓசை நயத்துக்காக இசைநயத்துக்காக சில குறில் நெடில் மாற்றங்களை மட்டும் மிஷ்கின் செய்தார்.
மற்றபடி எனக்கு நிறைய பாடல்கள் எழுத வேண்டும் என்கிற திட்டமோ கனவோ அதுகுறித்த தேடலோ எதுவுமில்லை. “இவ்வாறு தமிழச்சி கூறினார்.
-நமது நிருபர்