அர்ஜுன், அபிராமி,ப்ரீத்தி முகுந்தன்,விவேக் பிரசன்னா, ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம் ,பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருக்கிறார் சுபாஷ் கே ராஜ்.
ஒளிப்பதிவு- அருண் ராதாகிருஷ்ணன், இசை- ரவி பஸ்ரூர், படத்தொகுப்பு -பிரதீப் ஈ ராகவ். ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் இந்தக் காலத்தில் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. பெரும்பாலான படங்களில் பெண்களை செண்டிமெண்ட் காட்சிகளுக்கான ஒரு கச்சா பொருளாகக் காட்டி அனுதாபத்தை அள்ளும் வகையில் காட்சிகள் இருக்கும்.ஆனால் பெண் என்பவள் ஆணுக்கு நிகரானவள். எப்படி நம் சமூகத்தை மன உறுதியோடு எதிர் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.பெண்களை வீரலட்சுமி தைரியலட்சுமி என்று கூறிக் கொண்டாலும் பெண்களை பயந்தாங்கொள்ளிகளாகவே படத்திற்குப்படம் காட்டுவார்கள்.அத்தனை தொலைக்காட்சிகளிலும் பெண்கள் அலறும் சத்தமும் அவர்கள் துன்புறுத்தப்படும் ஒலியும தான் கேட்கின்றன.இப்படிப்பட்ட சூழலில் ஒரு நம்பிக்கை முயற்சியாக இந்தப் படம் வந்துள்ளது.
அர்ஜுன் ஒரு கராத்தே மாஸ்டர். தன்னைப் போலவே தனது மகளையும் தைரியமாக வளர்க்கிறார். அதற்கான பயிற்சியையும் அளிக்கிறார். எங்கு தவறு நடந்தாலும் சிறுமைகண்டு பொங்குவாய் ,தவறினை தட்டிக் கேள் என்று அவருக்குப் பாடம் எடுத்து வளர்த்து வருகிறார் .அப்படியே அவரது மகள் பிரீத்தி முகுந்தனும் வளர்கிறார்.அப்படிப்பட்ட பிரீத்தி முகுந்தனிடம் ஒருவன் தங்கச்சங்கலியைப் பறிக்க முயற்சி செய்ய வழக்கம் போல் அவனிடம் அதிரடி காட்டி அவனைப் போலீசில் பிடித்துக் கொடுக்கிறார்.தாங்கள் செய்தது சிறிய சாகசம் என்று அவர்கள் நினைத்தாலும் அது பெரிய விபரீதத்தின் தொடக்கமாக அமைகிறது. அதன் தொடர்ச்சியாக அர்ஜுன் குடும்பத்தினருக்கு பல அபாய அச்சுறுத்தல்கள் நேர்கின்றன. இது தனி ஒரு குடும்பத்தின் பிரச்சினை அல்ல சமூகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்து கொண்டு அந்தக் குடும்பம் என்ன முடிவெடுக்கிறது? எப்படிப் போராடுகிறது?பகைவர்களை எப்படி எதிர் கொள்கிறது ?அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை அதிரடி காட்சிகள் மூலம் உருவாகி இருப்பது தான் ’பிளாஸ்ட்’ இதுவரை படங்களில் ஆண்கள் தான் ஆண்மை மிக்கவகள் வீரன் என்று ஹீரோயிசம் பேசும் படங்களில் இருந்து மாறுபட்டு பெண்ணின் வீர உணர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள படமாக இது அமைந்துள்ளது.பெண்கள் பலவீனர்கள் அல்ல என்பதற்கான சாட்சியாக அழுத்தம் கொண்ட காட்சிகள் உள்ளன.
அர்ஜுன் கராத்தே ஆசிரியராக வருகிறார். அவர் எப்போதுமே உடல் நலனில், உடல் வலுவூட்டுவதில் கவனமாக இருப்பவர். அதனால்தான் வயதுக்கு மீறிய உடற்கட்டோடு இருந்து அந்த ராஜா ராமன் பாத்திரத்தில் அசலாகப் பொருந்தி உள்ளார். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டி ஆக்சன் கிங்காக மட்டுமல்லாமல்ட ஒரு பொறுப்புள்ள தந்தையாகவும் அந்த பாத்திரத்தில் மிளிர்ந்திருக்கிறார். அர்ஜுனின் மனைவி நீலவேணியாக வரும் அபிராமி ஒரு பொறுப்புள்ள தாயாக மட்டுமல்ல வீரமுள்ள பெண்ணாகவும் அதிரடியில் இறங்குவது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.கதை நாயகியாக நிலா பாத்திரத்தில் வரும் பிரீத்தி முகுந்தன் அதிரடி காட்சிகள் நடித்து ஒரு அசல் கராத்தே வீரராகவே எண்ண வைக்கிறார்.சண்டைக் காட்சிகளில் வீரியம் குறையாமல் நடித்துள்ளார்.
அர்ஜுன் தம்பியாக வரும் விவேக்பிரசன்னா,வில்லன்களாக வரும் ஜான் கொகேன், அர்ஜுன் சிதம்பரம் ,பவன் ஹாசன், வினோத் சாகர் என அனைவருமே தங்கள் பாத்திரத்தின் மூலம் கதை ஓட்டத்திற்கு உதவி பலம் சேர்த்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் சண்டைக் காட்சிகளின் வீரியம் குறையாமல் விதவிதமான கோணங்களில் படப்பதிவு செய்து பார்வையாளர்களை ஈர்க்கிறார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு வேகம் கூட்டி உள்ளது.அதிக ஓசை இல்லாமல் கூட சண்டை காட்சிகளை ரசிக்க வைக்க முடியும் என்று ஏற்ற ஒலிகளைப் பயன்படுத்தி உள்ளார்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு இயக்குநரின் கதையின் தன்மைப் புரிந்து கொண்டு சண்டைக் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.
குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோரையும் சண்டைக்காட்சிகளில் நடிக்க வைத்து காட்சிகளை உருவாக்கி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. படத்தின் வேகத்தை உணர்ந்து சற்றும் தொய்வுக்கு இடமில்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் பிரதீப் ஈ ராகவ்.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே ராஜ் , இப்படம் ஒரு வணிக ரீதியான படமாக இருந்தாலும் பெண்களுக்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுக்கும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார். பெண்களின் தற்சார்பு மனநிலைக்கு துணிவு தேவை என்பதையும் இந்தப் படத்தின் மூலம் காட்டியுள்ளார் . சரளமான திரைக்கதை விறுவிறுப்பான காட்சிகள் என்று ஒரு முழு நீள வணிகப்படத்து திருப்தி உணர்வையும் தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி உள்ளது. அதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.தற்காப்பு கலை வாழ்வில் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர் கொள்ள எப்படி உதவுகிறது என்பதையும் படத்தில் காட்டியுள்ளார்கள்.தற்காலத்தில் பெண்களுக்கு இந்தத் தைரிய உணர்வு ஊட்டப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்பதற்காகவே இந்தப் படத்தை வரவேற்கலாம்.


