‘பீப்’ திரைப்பட விமர்சனம்

ராகவ்,யாமினி லட்சுமணன், பிரேர்னா கண்ணா, ஐடிஐ. ஆச்சார்யா, அருண் மோகன், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, நிதிஷ், பாலாஜி, ராஜவேல், அதுல், ஜி. சிவகுமார்,வெங்கட் ரமேஷ், கல் ஆர் .கணேசன், எல் . சண்முகசுந்தர் நடித்துள்ளனர். எல்.சண்முக சுந்தர் இயக்கியுள்ளார்.பிரதீப் பத்ம குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் விகாரி இசையமைத்துள்ளார். அபிஷேக் மற்றும் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

ராகவ் ரங்கநாதன் மிகுந்த புத்திசாலி. அவர் எதையும் உற்றுநோக்கி உள்ளார்ந்து கவனிக்கும் பழக்கம் கொண்டவர்.ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலே கூட அதன் பின்னணி பற்றிக் கூறி விடுபவர்.அதை நண்பர்கள் அதை தெய்வ சக்தி என்றாலும் அவர் அறிவியல் சார்ந்தது என்று நம்புகிறார்.ராகவ் நடிகை ஒருவரது தீவிர ரசிகராக இருக்கிறார்.அவரைச் சந்திக்கும் முயற்சியில் இருக்கிறார்.
அப்போது அவருக்குப் பாலியல் தொழிலாளி யாமினியின் நட்பு கிடைத்து சற்று நெருக்கமாகப் பழகி வருகிறார்.இப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நாள் யாமினி இறந்து விடுகிறார் .அதுவும் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறக்கிறார்.அந்த மரணம் கொலைதான் என்றாலும் நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிறது.போலீஸ் ஆர்வம் காட்டாமல் மந்தகதியில் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.தனது அறிவைப் பயன்படுத்தி ராகவ் அதை நிரூபிக்க முயல்கிறார்.ஆனால் அதில் வெற்றி பெற முடியாமல் திணறுகிறார்.ஒரு கட்டத்தில் காவல்துறை தீவிரமாக இதில் இறங்குகிறது.காவல்துறையே வியக்கும் வண்ணம் இன்னொரு பக்கம் ராகவ் இதில் தீவிரமாகப் போராடுகிறார்.ஒரே சமயத்தில் இரண்டு தரப்பும் போட்டி போட்டுக் கொண்டு துப்பு துலக்குகிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றார்கள்? கடமைக்குச் செய்பவர்களா ? கடமையே கண்ணாகச் செய்பவர்களா ? யார் வெற்றி பெற்றார்கள்? கொலையாளி யார் ? என்பதுதான் 135.22 நிமிடங்கள் கொண்ட ‘பீப்’ படத்தின் மீதிக்கதை.   

இந்தப் படம் அறிவியல் குற்றவியல் சார்ந்த திரில்லராக அமைந்திருக்கிறது.கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராகவ், அதீத ஆற்றல் பெற்ற ஒரு புத்திசாலியாக இருக்கிறார்.அந்தப் பாத்திரத்தில் அவர் சரியாகவே பொருந்தி நம்ப வைக்கிறார்.காவல்துறையே வியக்கும் அளவில் அவர்களை மிஞ்சும் அளவிற்குச் செல்லும் அவரது புலனாய்வுப் பயணம் படம் பார்ப்பவர்களை ஈர்க்க வைக்கும்.அவர் கேட்கும் கேள்விகளும் யூகங்களும் சுவாரசியமானவை.அடுக்குமாடிக் கட்டடங்களில் ஏறி துப்பு துலக்கும் போது கதாநாயகன் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் .அக்காட்சிகள் நமக்குள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன.சபாஷ் ராகவ்!

பாலியல் தொழிலாளி சுனைனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாமினி லக்‌ஷ்மணன், கவர்ச்சி உடைகளில் மட்டுமல்ல கண்கவர் உடைகளிலும் கவர்ச்சியாகத் தோன்றுகிறார்.வெறும் கவர்ச்சியாக மட்டுமல்லாமல் முக வசீகரத்துடனும் இருக்கிறார்.கொஞ்சம் நடிக்கவும் செய்துள்ளார்.

படத்தின் இயக்குநர் எல். சண்முக சுந்தர் பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.மழ மழ முகத்தை வைத்துக்கொண்டு அதிர வைக்கும் காரியங்களைச் செய்கிறார்.நடிகை நயனா கபூராக நடித்திருக்கும் ஐடிஐ ஆச்சார்யா, நாயகனின் நண்பர்களாக வரும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நித்திஷ், சப் இன்ஸ்பெக்டராக வரும் பாலாஜி என மற்ற துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் பலரும் பழகிப்போகாத முகங்கள் போல் தோன்றினாலும் பாத்திரங்களில் குறை வைக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி, படத்தொகுப்பாளர்கள் அபிஷேக் மற்றும் விக்னேஷ் இயக்குநரின் தன்மை நோக்கு அறிந்து பயணம் செய்துள்ளார்கள்.

மிகக் குறைந்த அளவிலான கதை நிகழ்விடங்களை அந்த குறை தெரியாத அளவிற்கு காட்சிப் படுத்தி திரில்லர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாவது பாதியில் திரில்லர் கிளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை முடித்துள்ளார் இயக்குநர்.இரண்டாவது பாதியில் கொலையாளியைத் தேடும் பயணம் விறுவிறுப்பாக இருக்கிறது.

பொதுவாக இது மாதிரி திரில்லர் படங்களில் வசனங்கள் அதிகம் இருக்காது ஆனால் தனது விசாரணைப் பயணத்தில் கதாநாயகன் நிறையவே பேசுகிறார்.அது சற்று அலுப்பூட்டுகிறது.இருந்தாலும் குற்றவாளியை நெருங்கும்போது கதை இறுக்கமாகி வேகம் எடுக்கிறது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று படம் பார்க்க அமர்பவர்களுக்கு இந்த ’பீப்’ ஏமாற்றம் தராது.

மொத்தத்தில், ‘பீப்’ இதயத்தில் ’ லப் டப்’ ஒலி எழுப்பி அதிர வைக்கவில்லை என்றாலும் மோசம் போகவில்லை.