விஜித் பச்சான், ஷேலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், என்.பி .கே. எஸ் .லோகு, சாய் வினோத், வலினா, ஹரிதா பவா செல்லத்துரை நடித்துள்ளனர்.சிவ பிரகாஷ் இயக்கியுள்ளார் .இளையராஜா இசை அமைத்துள்ளார்.தயாரிப்பு ES எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் காமாட்சி காமாட்சி ஜெயகிருஷ்ணன்.
எழுத்தாளர் பவா செல்லத்துரை கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது.கதாநாயகன் ரயிலிலிருந்து முதல் காட்சியில் இறங்குகிறார்.நாயகன் விஜித் பிச்சான் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராகப் பணியாற்றுகிறார்.அவர் மீது குழந்தைக் கடத்தல் வழக்கு வருகிறது. அதற்காகக் கைது செய்யப்படுகிறார். விசாரிக்கும் போது, குற்றத்தை ஒப்புக்கொள்கிறார். அத்தோடு, போலீசாரிடம் சில தகவல்களைக்கூறுகிறார். அவை அதிர்ச்சிகரமானவை.. இதையடுத்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துகிறார்கள். விஜித் பற்றி விசாரிக்கும் போது, சிறைக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டுமென்றே அனைத்தையும் செய்தார், என்ற உண்மை தெரிகிறது.விஜித் செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி சிறை சென்றது ஏன்?, போலீசாரிடம் அவர் தெரிவித்த ரகசியமான அதிர்ச்சிகரமான தகவல்கள் என்னென்ன ? ஆகிய கேள்விகளுக்கான பதில்களைச் சில திருப்பங்களோடு 125.43 நிமிடங்களில் சொல்வதே ‘பேரன்பும் பெருங்கோபமும்.
நாயகனாக நடித்திருக்கும் விஜித் பச்சான், கல்லூரி மாணவர், இளைஞர், வயதான தோற்றம் என்று மூன்று விதமான தோற்றங்களில் வருகிறார். கச்சிதமாக பொருந்துகிறது. அத்துடன் பொருத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.ஒரு புதுமுக நடிகர் என்ற நிலையில் இவ்வளவு தோற்ற மாற்றங்களுக்கு அவர் ஒப்புக்கொண்டு நடித்து அவற்றில் பரிமளித்துள்ளார். எந்த இடத்திலும் மிகை நடிப்பு வராமல் அளவாக நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஷாலி , குடும்பப் பாங்கான முகம் , கண்களால் பேசி பாவனைகளை வெளிப்படுத்தும் திறன் என்று கவனம் ஈர்க்கிறார்.வில்லன்களாக நடித்திருக்கும் மைம் கோபி, அருள்தாஸ் இருவரும் பழக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் , சுய சாதி பெருமை, கௌரவம் என்று அவர் நடந்து கொள்ளும் விதமும் எடுக்கும் முடிவும் அதிர்ச்சிகரமானது. கீதா கைலாசம், தீபா, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சாய் வினோத், வலீனா, ஹரிதா, என்.பி.கே.எஸ்.லோகு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை..ரொம்ப துடிக்கார அம்மா முத்தாளம்மா, நண்பன் இல்லா வாழ்க்கை பாடல்கள் கேட்கும் ரகம். வரிகளில் மேலும் அடர்த்தி கூட்டியிருக்கலாம்.பின்னணி இசை காட்சிகளின் தன்மையைப் பார்வையாளர்களிடம் கடத்தி உள்ளது.
ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமாரின் கேமரா காட்சிகளை அழகாக மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் மன உணர்வுகளையும், உள்மன வன்மத்தையும் திரையில் தெரிய வைத்திருக்கிறது.
ஆணவக் கொலை ,கௌரவக் கொலை என்று சொல்லப்படுகிற கொலைக்கு பழிவாங்கும் கதைதான் இது.என்றாலும் அதை பல திருப்பங்களோடு சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு ஏற்ப காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.
எழுதி இயக்கியிருக்கும் சிவபிரகாஷ், பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த சாதி வன்கொடுமை சம்பவங்களைத் திரைக்கதையில் வெளிப்படுத்தி உள்ளார் .
சாதி ரீதியிலான எண்ணங்களும் ஒடுக்கு முறைகளும் பிறப்பினால் வருவது அல்ல. வளர்ப்பினால் மட்டுமே வருகிறது, என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சிவபிரகாஷ்.
மொத்தத்தில், ‘பேரன்பும் பெருங்கோபமும்’ சாதியத்திற்கு எதிரான படம்.