‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்பட விமர்சனம்

செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி , ஆர் எஸ் சதீஷ், சிறுமி லிர்த்திகா,சேலம் தீபக் நடித்துள்ளனர். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்.ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. கே.ப்ரியன் இசை அமைத்துள்ளார் . விஜயா சதீஷ் தயாரித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பொன்வயல் என்கிற கிராமம் மலைப்பகுதியில் உள்ளது. அங்கே சாலை போக்குவரத்து அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். ஊரிலுள்ள ஒரு பெரியவர் அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுத்துக்கொண்டே போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை .குறைந்த மக்கள் தொகை இருப்பதால் அரசியல்வாதிகள் யாரும் கண்டு கொள்ளவே இல்லை.இப்படிப்பட்ட ஊரில் செல்வராகவன் வாழ்வில் பெரிய ஆர்வம் இன்றி இருக்கிறார். பனை நுங்கு வியாபாரம் செய்து அன்றாடங்களைக் கழிக்கிறார்.அவருக்குப் பெண் கிடைக்காமல் இருக்கிறது. ஒரு வழியாக அவரது குணத்தைப் பார்த்து குஷி ரவி அவரது தோற்ற அழகை விட குணத்தையே அழகாகப் பார்க்கிறார்.அவரை மணக்கச் சம்மதிக்கிறார் .
திருமணமும் நடக்கிறது.இப்படிப்பட்ட அழகும் பாசமும் கொண்ட மனைவி கிடைத்ததில்,தான் தான் உலகிலேயே மகிழ்ச்சியானவன் என்று செல்வராகவன் உணர்கிறார்.பெரிதாக ஏதாவது செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று குஷி ரவி ஊக்கப்படுத்தவே ஒரு சாப்பாட்டுக்கடை வைக்கத் திட்டமிடுகிறார்கள்.அதற்காகக் கடன் வாங்குகிறார்கள். அப்படியே ஒரு நெடுஞ்சாலைப் பக்கம் தாபா போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.அந்த ஊரில் ஒரு பெண் இறந்து விடுகிறார் .அதற்கு பிறகு செல்வராகவன் பாசத்துக்குரிய ஒரு சிறுமியும் இறந்து விடுகிறாள். பிறகு குஷிரவியும் தற்கொலை செய்து கொள்கிறார்.இதற்குப் பிறகு வாழ்வில் எல்லாமே அற்றுப் போய் விட்டதாக உணரும் செல்வராகவன், கொதித்து எழுகிறார் .இந்த இறப்புகளுக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்.அவர் செய்யும் காரியங்களால் அவர் ஒரு மனிதன் தெய்வமான இடத்தை அடைகிறார்.அவர் என்ன செய்கிறார் என்பதுதான் 138.28 நிமிடங்கள் கொண்ட’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் மீதிக் கதை. 

தான் உண்டு தன் வேலையுண்டு என்று அன்றாட நுங்கு வியாபாரமே வாழ்க்கை என்று வாழும் ராகவன் பாத்திரத்தில் வரும் செல்வராகவன் தாழ்வுணர்ச்சி கொண்ட மனிதராக இருக்கிறார்.அந்த பாத்திரத்தை உணர்ந்து அவர் சிறப்பாகவே வெளிபட்டுள்ளார்.மனைவியிடம் பாசம் காட்டும் போதும் கொடுமைகளைக் கண்டு பொங்கி எழும் போதும் நன்றாக நடிக்க முயன்றுள்ளார்.இருந்தாலும் மேலும் நடிப்பைப் பொருத்தமான வகையில் வெளிப்படுத்தி இருக்கலாம்.

செல்வராகவன் மனைவி செல்வியாக நடித்திருக்கும் அறிமுக நாயகி குஷி ரவி,குடும்பப் பாங்கான முகம், பாசத்தை வெளிப்படுத்தும் குணம் என்று தோற்றத்திலும் உடல் மொழியிலும் நடிப்பிலும் ஈர்த்து பார்ப்பவர் மனதில் அழுத்தமாகப் பதிகிறார்.

முன்னாள் கதாநாயகி நடிகை கெளசல்யா செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கிறார் . குறைந்த காட்சிகளில் வந்தாலும் சில காட்சிகளில் கவனம் பெறுகிறார்.அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ்,குறை சொல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.
கந்துவட்டி கொடுப்பவராக இன்பராஜ் பாத்திரத்தில் நடித்திருக்கும் மைம் கோபி,தனது கொடூரமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்கிறார். அரசியல்வாதியாக வருகிற ஒய்.ஜி.மகேந்திரன் பாத்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை.

சிறுமி லிர்த்திகா, சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் அந்த ஊர் மனிதர்களாகவே இடம் பெற்றுள்ளார்கள்.அந்த வகையில் அவர்களது நடிப்பு இயல்பாக இருக்கிறது.

சாலை வசதி இல்லாத அந்த மக்களின் உணர்வுகளையும் ஊரின் நிலைமையையும் எடுத்துச் செல்லும்படி அமைந்துள்ளது ரவி வர்மாவின் ஒளிப்பதிவிலான காட்சிகள்..

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் பதியும் ரகம்.பின்னணிசையிலும் பிழையில்லை.
கிராமத்துப் பின்னணி கொண்ட இந்தப் படத்தில் காட்சிகளை சில இடங்களில் அலுக்க வைத்தாலும் பல இடங்களில் தொய்வின்றித் தொகுத்துள்ளார் படத் தொகுப்பாளர் தீபக்.எஸ்.

எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் சொல்ல முயன்றுள்ளார்.அத்துடன் கந்து வட்டி பிரச்சினை,அதை எதிர்கொள்ளும் பெண்களின் அவலங்களையும் காட்சிகள் ஆக்கியுள்ளார்.ஆனால் வன்முறைகள் மூலம் மனிதன் தெய்வமாகி உள்ளதற்கான பின்னணி உறுத்தலாக உள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனையை வழங்கியிருக்கிறார்.

சாலை வசதியற்ற கிராம மக்களின் அவல வாழ்க்கை, அன்றாடம் கடக்க அவர்கள் படும் பாடு, சிறு வசதியாக வாழ்வதற்குக்கூட கடன் பெற வேண்டிய அவலம், கந்து வட்டிக்காரர்கள் கொடுமை, பணக்காரர்களின் இரக்கமற்ற தன்மை ,அரசியல்வாதிகளின் கபட நாடகம் என அனைத்தும் உள்ளடக்கிய ஒரு கதையாக இயக்கியுள்ளார் டென்னிஸ் மஞ்சுநாத்.ஆனாலும் ஏதோ படத்தில் ஒரு பழமைத்தனத்தை உணர வைக்கிறது.

மொத்தத்தில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ எளிய மக்களின் துயரம் பேசும் கதை.