‘மியூசிக் ஸ்கூல்’ விமர்சனம்

சர்மான் ஜோஷி, ஸ்ரேயா ஷரண், ஷான், கிரேசி கோஸ்வாமி, பிரகாஷ்ராஜ், லீமா சாம்சன்,பெஞ்சமின் கிலானி ,சுகாசினி முலாய், வினய் வர்மா மற்றும் பலர்நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருப்பவர் பப்பாராவ் பிய்யாலா.இளையராஜா இசையமைத்துள்ளார்.தயாரிப்பு யாமினி ஃபிலிம்ஸ்.

படிப்பு படிப்பு, தேர்வு ,அதற்கான தயாரிப்பு என்று மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் பெற்றோர்களுக்கு ஒரு பாடமாகக் கொடுக்க நினைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

படிப்பைப் பதற்றமாக்காமல் இருக்க இடையில் கலைகளுக்கு இடம் கொடுத்தால் மன அழுத்தம் குறையும் என்று சொல்ல நினைத்து உள்ளார்கள்.

அந்தப் பள்ளியில் படிப்புக்கென்று அழுத்தத்துக்கு ஆளாகும் மாணவர்களை நல்வழிப்படுத்தி, மன அழுத்தங்களுக்கு விடுதலை அழைத்து,மனதை இலகுவாக்கும் முயற்சியுடன் கலையாசிரியராக வந்து சேர்கிறார் சர்மான் ஜோஷி.கலை ஆசிரியர் தனது மனைவியை இழந்து தனது சிறு வயது மகளுடன் வாழ்கிறார்.ஆனால் அந்தப் பள்ளியில் அவருக்கு ஆதரவில்லை.நிர்வாகமும் படிப்பின் மீதுதான் அழுத்தம் கொடுக்கிறது.இதனால் பிள்ளைகள் மனநெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.கலை ஆசிரியர் சோர்ந்து போய் உள்ள நேரத்தில் அங்கே ஒரு இசை ஆசிரியையாக -மியூசிக் டீச்சராக ஸ்ரேயா வருகிறார்.அவரும் தன் பணியைச் செய்ய முடியாமல் புறக்கணிக்கப்படுகிறார்.

மனம் நொந்த இரு கலை உள்ளங்களும் கவலைப்படுகின்றன. தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் ஒரு மியூசிக் ஸ்கூல் தொடங்கலாம் என்று ஸ்ரேயாவுக்கு சர்மான் யோசனை சொல்கிறார். அதன்படி ஸ்கூல் தொடங்கப்படுகிறது. மெல்ல மெல்ல ஆதரவு வருகிறது.அந்த மியூசிக் ஸ்கூல் மாணவர்களைக் கொண்டு ஒரு நாடகம் நடத்தி அரங்கேற்றத் திட்டமிடுகிறார்கள் .அதன்படி வேலைகளும் நடைபெறுகின்றன. படிப்புக்கு இடையூறு என்று பெற்றோர்கள் கவலைப்பட்டாலும் பிள்ளைகளுக்காக அவர்களின் மனமாற்றத்தைக் கணக்கில் கொண்டு ஒரு வழியாகச் சம்மதிக்கிறார்கள்.தாங்கள் நடத்தும் நாடகத்திற்காக கோவா சென்று ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுவதாகத் திட்டமிடுகிறார் ஸ்ரேயா.உடன் சர்மான் ஜோஷியும் பக்கபலமாக இருக்கிறார். அதன்படி சிரமப்பட்டு அனுமதி வாங்கி ,நாடகத்தில் நடிக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவா செல்கிறார்கள்.அந்தக் குழந்தைகளில் போலீஸ் கமிஷனர் ஆக இருக்கும் பிரகாஷ்ராஜின் மகள் சம்யுக்தாவும் செல்கிறாள்.சம்யுக்தா சுதந்திரமாக வெளியே சுற்றித்திரிந்தவள் சக நேபால் மாணவன் ஒருவன் வசம் ஈர்க்கப்படுகிறாள்.இருவரும் வெளியே சுதந்திரப் பறவைகளாகத் திரிகிறார்கள்.மகளை விசாரிக்க பிரகாஷ்ராஜ் போன் செய்கிறார். மகள் காணாமல் போனது தெரிந்தது. போலீஸ் கேசாகி பரபரப்பாகிறது.அதன் பிறகு என்ன ஆகிறது? நாடகம் அரங்கேறியதா? என்பதுதான் மியூசிக் ஸ்கூலின் மீதிக்கதை.

படத்தில் கதை இசை சம்பந்தப்பட்டதாக இருப்பதால் படம் முழுக்க இசைமயமாக இருக்கிறது. ஏராளமான இளையராஜா பாடல்கள் வருகின்றன; அதுவும் மேற்கத்திய இசைப்பாணியில் வருகின்றன. பார்த்து ரசிக்கலாம். இப்படம் பரபரப்பு, திடீர் திருப்பங்கள், எதிர்பாராத முடிச்சுகள் போன்ற வழக்கமான சினிமாத்தனம் இல்லாத கதையாக பயணத்தில் ரசிக்கும் இசையைப் போல உள்ளது.மெல்ல அதன் போக்கில் சலசலத்து நகர்ந்து செல்லும் நீரோடையாகச் செல்கிறது கதை.

படம் முழுக்க இளையராஜா தன் பாணியிலிருந்து விலகி முற்றிலும் மேற்கத்திய பாணியில் இசையமைத்து, தன் ஹார்மோனியத்தில் மட்டுமல்ல ஹார்மோனிலும் இன்னும் இளமை ததும்புகிறது என்று காட்டியுள்ளார்.

பெற்றோரால் பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் கதையைச் சொல்ல நினைத்த இயக்குநர் முழுமையாகச் சொல்லாமல் படத்தை முடித்துள்ளார்.

படத்தின் மியூசிக் டீச்சர் ஆக வரும் ஸ்ரேயா தோற்றத்தாலும் துறுதுறுப்பான நடிப்பாலும் கவனம் பெறுகிறார்.குழந்தைகளைக் கவர அவர் செய்யும் இசை திறமையாலும் நடனங்களாலும் படம் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்கிறார்.ஸ்ரேயாவின் தோற்றத்திற்கும் நடிப்புக்குமே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
படத்தில் வரும் சர்மான் ஜோஷி, ஷான், கிரேசி கோஸ்வாமி, பிரகாஷ்ராஜ், லீமா சாம்சன் பெஞ்சமின் கிலானி ,சுகாசினி முலாய், வினய் வர்மா ஒவ்வொருவருமே தாங்கள் ஏற்ற பாத்திரமாக இயல்பாக மாறியுள்ளார்கள். நடித்திருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் ஒவ்வொன்றும் நடை, உடை,முகபாவனைகளில் ஈர்க்கின்றன.
மொத்தத்தில் இது பார்ப்பவரைக் குழந்தைகளாக மாற்றும் படம்.