‘ ஃபர்ஹானா’  விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், அனுமோல்,ஐஸ்வர்யா தத்தா , கிட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.கவிஞர் மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார். கோகுல் பென்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு, பிரகாஷ் பாபு தயாரித்திருக்கின்றனர்.

ஆச்சாரமான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பா ,அம்மா,சகோதரிகள் கணவர்,கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகள் என்று குடும்பத்துடன் இருக்கிறார். அவரது அப்பா கிட்டி ஒரு செருப்புக் கடை வைத்துள்ளார். உள்ளதைக் கொண்டு நல்லது செய்யும் சிக்கன மனிதர்.மருமகன் ஜித்தன் ரமேஷ் படிக்காதவர்.குடும்பம் சிரமத்தில் இருப்பதால் ஐஸ்வர்யா தான்  வேலைக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார். இதில் கிட்டிக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. கணவரின் சம்மதத்துடன் அப்படி ஒரு வேலைக்குச் செல்கிறார். முதலில் கிரெடிட் கார்டுகளுக்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் கால் சென்டர் வேலைக்கு செல்கிறார்.அந்தப் பணியில் சேர்ந்து, அதில் வெற்றியும் பெறுகிறார்.அங்கு நற்பெயரும் சம்பளமும் கிடைக்கிறது.  இருந்தாலும் இவருடன் வேலை பார்த்த அனுமோல் வேறொரு வேலைக்குச் சென்று அதிகம் சம்பாதிக்கிறார் .தன்னையும் அந்த வேலையில் சேர்த்து விட ஐஸ்வர்யா வேண்டுகிறார். அதன்படி தானும் கூடுதல் சம்பாத்தியத்துக்காக ஆண்களுடன் சாட் செய்யும் பிரிவுக்கு மாறி அதில் சேர்ந்தும் விடுகிறார் .ஆனால் அது பிரண்ட்ஷிப் கால் எனப்படும் போனில் அந்தரங்கமாகப் பேசும் ’போன் சாட்’ வேலை.வேலையின் தன்மை பற்றி அறிந்தபோது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் மெல்ல மெல்ல தயக்கத்துடன்  அந்த வேலையில் சேர்கிறார்.

அப்படிக் குரல் வழியே பழகியவர் ஒருவரின் நட்பு கிடைக்கிறது. அது நெருக்கமான உரையாடல்களால் இறுக்கமாகிறது.குரலால் பழகியவர் போகப் போக உரிமை எடுத்துக் கொண்டு மிரட்டுகிறார்.தங்களுடைய நெருக்கத்தை வீட்டில் சொல்லிவிடுவேன் என, பிளாக்மெயில் செய்கிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா உடன் வேலை பார்த்த ஐஸ்வர்யா தத்தா கொலை செய்யப்படுகிறார் அவர் பையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ஆதார் கார்டு இருந்ததால் போலீஸ் இவரைத் தேடிக் கொண்டு வீட்டில் வந்து விசாரணை செய்கிறது .விசாரணை செய்ததால் குடும்பம் மிகவும் சங்கடப்பட்டு அவமானப்படுகிறது. இந்நிலையில் குரலிலேயே பழகியவர் பின் தொடர்ந்து வந்து ,பிளாக்மெயில் செய்கிறார். அதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் ஃபர்ஹானா படத்தின் கதை.

தான் ஏற்ற ஃபர்ஹானா பாத்திரத்தின் மூலம் அடக்கத்துடன் ஒடுக்கத்துடன் நடுக்கத்துடன் பதற்றத்துடன் தவிப்புடன் பயத்துடன் என்று பலவிதமான முகபாவங்களைக் காட்டும் வகையில் நடிப்பு வாய்ப்புகள் உள்ளதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மிளிர்ந்துள்ளார்.

அவரது கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் தோற்றத்தில் மட்டுமல்ல  பேசுகிற பேச்சாலும் உடல் மொழியாலும் அச்சு அசலாக இஸ்லாமிய மனிதராக மாறி இருக்கிறார்.

படிக்காத தன்னால் பயனில்லை என்று வரும் அந்தக் கணவர் பாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தியுள்ளார். ஐஸ்வர்யாவின் அப்பா பாத்திரத்தில் கிட்டி 100% பொருந்தி மனதில் பதிகிறார் .குரல் வழியே நட்பாகி அந்தரங்கத்தில் நுழைந்து மிரட்டும் வில்லனாக செல்வராகவன் வருகிறார். ஜாலிப் பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா வருகிறார்.ஐஸ்வர்யா ராஜேஷின் உடன் பணியாற்றும் உற்ற தோழியாக அனுமோல் வருகிறார்.அவரது நடிப்பு இயல்பாக உள்ளது.

டெலிபோன் வழியே நட்பை வளர்க்கும் அந்த அந்தரங்க உலகத்தை இப்படத்தில் இயக்குநர் சரியாகக் காட்டியிருக்கிறார்.

மறுமுனையில் இருந்து வரும் குரல்கள் ஆபாசமாக பேசுவதைக் கேட்டு குமுறுவதும் ஒரு கட்டத்தில் மறுமுனை குரல் அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குவதைக் கேட்டு அந்த நபரிடம் ஐஸ்வர்யா ஈர்க்கப்படுவதும் சுவாரசியம் கூட்டும் காட்சிகள்.

மானசீகமாக நாகரிகமாகச் சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் உரையாடல் திடீரென்று திசை மாறும் போது கதை வேகம் எடுக்கிறது.

குரல் வழி உரையாடி நெருங்கும் அந்த மர்மநபர் யார் என்பதைக் கடைசிக் காட்சி வரை சஸ்பென்சாகக் கொண்டு சென்ற விதம் விறுவிறு .

இயக்குநர் சொல்ல வந்த மையக் கதையை விட்டு விலகாத திரைக்கதையுடனும் உரிய காட்சிகளுடனும் படம் நகர்கிறது. படத்தில் அடுத்ததாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மனுஷய புத்திரன் எழுதியிருக்கும் வசனங்கள். எழுத்தாளர் வசனகர்த்தாவாக மாறும்போது பல படங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் ஒரு கவிஞர் வசனம் எழுதும் போது வசனங்களில் என்ன செழுமை சேர்க்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் உணர முடிகிறது.இயல்பான அழகான அழுத்தமான வசனங்கள் படத்தில் கவனம் பெறுகின்றன.

கோகுல் பென்னியின் கேமரா சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் குறுகலான சந்து பொந்துகளிலும் நுழைந்து படப் பதிவு செய்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் பின்னணியும் அவரை வேறு ஒரு தளத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.

மொத்தத்தில் ’ஃபர்ஹானா’ நெல்சன் வெங்கடேசனின் மற்றொரு வித்தியாசமான படைப்பு என்று கூறலாம்.