ஆர்யா, சரத்குமார், கௌதம் ராம் கார்த்திக் ,மஞ்சு வாரியர் அனேகா, ரைசா வில்சன், அதுல்யா, ஜெயபிரகாஷ் காளி வெங்கட் நடித்துள்ளனர்.இப்படத்தை மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார்.திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டண்ட் சிவா சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பு ராஜீவன்.கலை இயக்கத்தை இந்துலால் கவித் மற்றும் சேகர் பி கவனித்துள்ளனர்.விஷூவல் எஃபெக்ட் இயக்குநர் சரத் வினு. இப்படத்தை வினீத் ஜெயின் மற்றும் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் சர்வதேச உளவாளி சம்பந்தப்பட்ட திரில்லராக உருவாகியுள்ளது.இந்திய ரா அமைப்பின் உளவாளியாக சரத்குமார் உள்ளார். அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றைச் சில காலமாகக் காப்பாற்றிவருகிறார். அதற்காக பல்வேறு இடம் மாற்றி மாற்றிக் கொண்டு சென்று ரகசியமாகப் பாதுகாத்து வருகிறார். அதன் தீவிரப் பயணத்தில் தனது வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்.ஆனால் ரஷ்ய இராணுவம் அவரைக் கைது செய்கிறது.அவர் பாதுகாத்து வந்த அரிய மூலப் பொருளையும் கைப்பற்றுகிறது.அதை நமது எதிரி நாடாகக் கருதப்படும் பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது.இந்தத் திட்டத்தை முறியடிக்கவும் சரத்குமாரையும் அந்த மூலப்பொருளையும் இந்தியாவுக்குக் கொண்டுவரவும் ரா அதிகாரி மஞ்சு வாரியர் மற்றும் குழு முயல்கிறது.ஆனால் அது நடைபெறாமல் தோல்வியில் முடிகிறது.அவரை இந்தியப் பாதுகாப்புத் துறை கைது செய்ய நினைக்கிறது.ஆனால் மஞ்சு வாரியர் தப்பித்து விடுகிறார்.அது மட்டுமல்லாமல் மற்றொரு ரகசிய உளவாளி ஆர்யா மூலம் வேறொரு செயல் திட்டத்திற்குள் இறங்குகிறார். அதன்படி சரத்குமாரையும் அந்தப் பொருளையும் கைப்பற்ற நினைக்கிறார்.அவர்கள் அந்த முயற்சியில் வெற்றி பெற்றார்களா ? இதற்குள் சிலர் புகுந்து நாட்டின் மீது விசுவாசமுள்ள இவர்களது நேர்நிலை நடவடிக்கைகளை எதிர்நிலையாக மாற்றிட வேறு ஒரு சதித் திட்டம் நிறைவேறத் திட்டம் போடுகிறார்கள்.இதற்கிடையில் சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறும் G20 மாநாட்டில் அணு ஆயுத தாக்குதல் நடக்க இருப்பதாக தகவல் வருகிறது. இந்திய வலிமையைக் கேள்விக்குள்ளாக்கவும் அணு ஆயுத ஆபத்தை உலகத்திற்கு உணர்த்தவும் என்று அந்த சதித் திட்டம் நடக்கிறது.இந்த பிரச்சினைகள் எல்லாம் எப்படி முறியடிக்கபட்டன? என்பதை 153 நிமிடங்கள் கொண்ட படமாகச் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X). 
தமிழ்த் திரைப்படங்களுக்கு என்று ஒரு வியாபார வட்டம் உள்ளது. இந்த வட்டத்துக்குள் இப்படி ஒரு பெரிய கேன்வாஸை வைத்து அதில் இப்படிப்பட்ட கதை திரைக்கதை அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்ததற்கே முதலில் இயக்குநர் மனு ஆனந்தைப் பாராட்டலாம்.
இந்தப் படத்தில் நாயகன் ஆர்யா கௌதம் என்கிற பாத்திரத்தில் வருகிறார். தனது புஜ வலிமை காட்டி ஆக்சன் காட்சிகளில் அசத்துகிறார்.அவர் ஒரு திறன் மிக்க உளவாளியாக வெளிப்படுகிறார். நுணுக்கமான நடிப்பைக் காட்டவில்லை என்றாலும் அவரது தோற்றமும் உடல் மொழியும் அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளன.முதல் பாதியில் வரும் ஆர்யா அனேகா காதல் காட்சிகள் குளுகுளு.
முன்னாள் மிஸ்டர் மெட்ராஸ் ஆன நடிகர் சரத்குமார் தான் மிஸ்டர் எக்ஸ்.அவர் பரமேஸ்வர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.ஆங்கிலப் படத்தில் வரும் ஆக்சன் ஹீரோவை நினைவூட்டுகிறார்.சரத்குமாரின் தோற்றம் அந்தப் பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இதுவரை படங்களில் சாக்லேட் பாய் போல் வலம் வந்த கௌதம் கார்த்திக் இப்படத்தில் ஏற்றுள்ள அமரன் பாத்திரம் அவரது வயது தாங்காத எடை கொண்டது என்றாலும் முடிந்ததைச் செய்துள்ளார்.
ரா அமைப்பு உயர் அதிகாரியாக இந்திரா வர்மா பாத்திரத்தில் வரும் மஞ்சு வாரியருக்கு சவாலான வேடம்தான் என்றாலும் அதில் அவர் ஈடு கொடுத்து ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார்.
இவர்கள் தவிர ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வருகிறார்கள்.அவர்கள் ஒரு நடிப்புக் கலைஞராகக் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.
திரையை நிறைக்கும்படியான விழிகளை விரிய வைக்கும் பிரம்மாண்ட காட்சிகளைத் தனது ஒளிப்பதிவில் அசத்தலாகக் காட்டி மிரட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்.
பின்னணி இசை மூலம் காட்சிகளையும் பாத்திர உணர்வுகளையும் பார்வையாளர்களுக்குக் கடத்த திபு நினன் தாமஸ் கடுமையாக உழைத்திருக்கிறார்.
விஷுவல் எபெக்ட் காட்சிகளில் ஹாலிவுட் படத்தின் தரத்தை காட்டியுள்ளார் விஷுவல் இயக்குநர் சரத் வினு.
படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, சண்டைப்பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் எனத் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டுறவும் படத்திற்காக அவர்கள் உழைத்த பணிகளும் காட்சிகளில் தெரிகின்றன.
ரகசியமாகச் செயல்படும் இயக்கங்களில் யார் விசுவாசி யார் துரோகி என்று இனம் காண முடியாத அளவிற்கு நடவடிக்கைகள் இருக்கும். அந்த சந்தேக ஊசலாட்டங்களை வைத்து சஸ்பென்ஸ் அமைத்துள்ளார்.அப்படி உளவாளிகளுக்குள் நடக்கும் பூசல்கள் விறுவிறு காட்சிகளாக உள்ளன.
நம் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் காட்சிகளை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த். ஆனாலும் முழுக்க வணிகப் பாதையிலேயே கதையை நகர்த்தியிருப்பதும் சில காட்சிகளில் நம்பகத்தன்மை குறைவாகத் தெரிவதும் ஒரு சிறு குறையாகத் தெரியலாம்.
மொத்தத்தில் உலகத் தரதொழில்நுட்ப சாத்தியங்களை இந்த பட்ஜெட்டுக்குள் கொண்டு வந்து ஒரு முழுமையான பரபரப்பான திரில்லர் அனுபவத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் மனு ஆனந்த் .ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டுகின்ற விவரணைகள் இந்தப் படத்திற்காக அவர் நிறைய மெனக்கெட்டுள்ளதைக் காட்டுகிறது.குறிப்பாக ரா அமைப்பு அது செயல்படும் விதம் போன்றவற்றை இப்படத்தில் காட்சிகள் மூலம் சாமானிய திரை ரசிகனுக்கும் கடத்தி இருக்கிறார்.மொத்தத்தில் தமிழில் ஒரு ஹாலிவுட் பட முயற்சி என்றே கூற வேண்டும்.
திரையில் விரியும் பிரம்மாண்டம் ,காட்சிகளில் தென்படும் எந்தத் தர்க்க மீறல் கேள்விகளையும் எழுப்பாத அளவிற்கு சமன் செய்கிறது.அந்த வகையில் ஒரு திரில்லர் திரையனுபவத்தைத் தரும் படமாக இருக்கிறது. முன் அனுமானம் இல்லாமல் இந்தப் படத்தைக் காண வரும் ரசிகனுக்கு நிச்சயமாக இப்படம் திருப்தி அளிக்கும் திரையரங்க அனுபவமாக இருக்கும்.


