‘மூன்றாம் கண்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

ட்ரெண்டிங் என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில்  க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம்  “மூன்றாம் கண்”.

வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம்  திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…,

தயாரிப்பாளர் கே. சசிகுமார் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அந்த ஆதரவே மேலும் தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையைக் கேட்டவுடன் இதை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். குறிப்பாகப் படப்பிடிப்புக் குழுவினர் நேர்த்தியாகவும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினரான சு.கிதா, சதீஷ், சூர்யா, தினேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பாடலை உருவாக்கிய இசைக் கலைஞர் அஜீஷுக்கும், பாடலின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. படத்தில் ஒரே ஒரு பாடல் இருந்தாலும் அது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பாடலுக்கான பணிகளில் எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல் அனைவரும் உழைத்தனர்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இந்தப் படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார். எப்போதும் இசை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், இந்தப் படத்தின் அனைத்து பணிகளிலும் உறுதுணையாக இருந்த ராமருக்கு எனது சிறப்பு நன்றிகள். அவர் எப்போதும் குழுவுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நடன இயக்குநர் ராதிகா மாஸ்டர் பேசியதாவது…

”  இயக்குநர் சகோ கணேசனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரது கடின உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த உழைப்பின் மொத்த வெளிப்பாடாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு முன்னணி நடிகர்களின் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் போன்ற திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கதையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்தையும் எந்த தயக்கமும் இல்லாமல் வழங்கி, படத்தை சிறப்பாக உருவாக்க முழு ஆதரவையும் அளித்தார். விதார்த் சார் எப்போதும் நல்ல கதைகளைத் தேர்வு செய்பவர். கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். கதாநாயகிகள் தேஜு மற்றும் அப்துல்யா இருவரும் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் பணியாற்றினர். குறிப்பாக கடினமான சூழ்நிலைகளிலும் நேரத்தை வீணடிக்காமல் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

ஒட்டுமொத்தமாக அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ‘மூன்றாம் கண்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியை அடையும் என்று நம்புகிறேன். நன்றி.

கலை இயக்குநர் மைக்கேல் பேசியதாவது…,

” இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை மிகத் தெளிவாகவும் வித்தியாசமாகவும் வடிவமைத்துள்ளார். இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே இது ஒரு சிறப்பான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. படத்தில் நடித்துள்ள விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட அனைவரும் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கினார்.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான இந்த ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்களின் ஆதரவிற்கும் நன்றி.”

எடிட்டர் ராமர் பேசியதாவது…

“இந்தக் கதையை நான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தேன். அப்போது இந்தக் கதை மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. பின்னர் இயக்குநர் சகோ கணேசன் அழைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.

இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாகவும், பார்வையாளர்களைக் கடைசி வரை ஈர்க்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. சாதாரணமாக ஒரு படத்தின் எடிட்டிங் பணிகளுக்கு அதிக நேரம் கிடைக்கும். ஆனால் இந்தப் படம் மிகக் குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. இருந்தாலும் முழுக் குழுவினரும் கடினமாக உழைத்து சிறப்பாக பணியை நிறைவு செய்தோம்.

குறிப்பாக இயக்குநர் சகோ கணேசனின் உழைப்பும், கதையின் மீது இருந்த நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் வடிவமைப்பிலும், காட்சிகளின் அமைப்பிலும் அவர் மிகத் தெளிவான பார்வையுடன் செயல்பட்டார்.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் இந்தப் படத்தை சரியான நேரத்தில், சரியான முறையில் வெளியிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அவருடைய பொறுமையும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பல ஆச்சரியங்களும் வித்தியாசமான அம்சங்களும் உள்ளன. படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதை நிச்சயம் உணர்வார்கள். இந்தப் படத்திற்கு ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் பேசியதாவது…

“ இதற்கு முன்பு வணிக ரீதியிலான பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், வலுவான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருந்தது. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியது.

இயக்குநர் சகோ கணேசன் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை சந்தித்த பிறகுதான் இந்தப் படத்தில் இணைந்தேன். அப்போது படம் ஏற்கனவே எடிட்டிங் கட்டத்தை எட்டியிருந்தது. முதலில் டிரைலரைப் பார்த்தபோது படத்தின் மேக்கிங், காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் கதையை ஒரே முறை பார்த்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இதில் உள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதையும் கதாபாத்திரங்களுமே. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக எனக்கு இந்தப் படம் ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்தாமல், அதே நேரத்தில் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்க்கும் வகையில் இசையை வடிவமைக்க வேண்டியிருந்தது. இயக்குநர் சகோ கணேசன் தெளிவான பார்வையுடன் இருந்ததால் அந்தப் பணி எளிதாக அமைந்தது.ஒளிப்பதிவாளர் உதய்குமார், சவுண்ட் டிசைனர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து, சவுண்ட் மற்றும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியுள்ளோம். மேலும், இந்தப் படத்தில் நிறைய லைவ் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.”

நடிகை அதுல்யா சந்திரா பேசியதாவது…

“ இந்தப் படத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். விதார்த், சந்தோஷ் பிரதாப், தேஜு, கலையரசன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சசிகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகள்.
எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

நடிகை தேஜு அஸ்வினி பேசியதாவது…

“ உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான். அதனால் நீங்கள் அனைவரும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மூன்றாம் கண்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்தோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையும், அதில் நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவை.

இயக்குநர் சகோ கணேசன், தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, எனக்கு ஊக்கமளித்து வந்த சசிகுமார் சாருக்கு என் நன்றிகள். விதார்த் சார், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. கலையரசன் எனக்கு குடும்ப உறுப்பினர் போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் நட்பாகவும், உற்சாகமாகவும் இருந்தனர்.

ப்ரோமோ பாடலில் என்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் உதய், இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், கலை இயக்குநர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.”

நடிகர் KPY  சரத் பேசியதாவது…

“ இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சசிகுமார் அண்ணாவுக்கும், இயக்குநர் சகோ கணேசனுக்கும் என் நன்றிகள். வழக்கமாக நான் நடிக்கும் நகைச்சுவை வேடம் இல்லாமல், வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அன்பாக பழகி, நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இயக்குநர் இந்தக் கதையை மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.”

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…

“இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது. படப்பிடிப்பு முடிந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும், அனைவருடனும் அதே பாசமும் நட்பும் தொடர்கிறது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர்களை ஒரே மாதிரியான வேடங்களில் மட்டுமே பார்க்கும் பார்வையை உடைக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் படம் எனக்கு அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையை என் மீது வைத்த இயக்குநர் சகோ கணேசனுக்கு நன்றி ‘மூன்றாம் கண்’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படத்தின் முடிவு பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். இது ஒரு வித்தியாசமான, பரிசோதனை முயற்சியாக உருவாகியுள்ளது.”

நடிகர் த்ரிகுண் பேசியதாவது…

“ இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் எனது குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்தது. அப்போது படக்குழுவினர் எனக்காக படப்பிடிப்பு அட்டவணையை மாற்றி அமைத்து முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். அதற்காக சசிகுமார் சாருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். மேலும், ஒரு நடிகராக நான் கேட்டுக் கொள்ளும் முன்பே சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையாக வழங்கிய தயாரிப்பாளர் அவர். இது திரையுலகில் மிகவும் அரிதான விஷயம்.

இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை முதன்முறையாக கூறியபோதே மிகவும் ஈர்த்துவிட்டார். கதை கேட்டவுடன் உடனே படத்தில் நடிக்க சம்மதித்தேன். அந்தளவுக்கு வலுவான திரைக்கதை இது. தேஜு, அதுல்யா  நடிகைகள் இருவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக தேஜுவின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சரத் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.”

இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார்.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.

அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார்.

ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், ஒளிப்பதிவாளர் உதய்குமார், எடிட்டர் ராமர், சவுண்ட் டிசைனர் சதீஷ், கலரிஸ்ட் பிரசாந்த், டிசைனர் சந்துரு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை உருவாக்கியதில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் முழு படக்குழுவினரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகர் கலையரசன் பேசியதாவது…

“ இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.

இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன.

‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”