சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்,விஷ்ணு விஷால்,விக்ராந்த்,கபில்தேவ்(சிறப்புத் தோற்றம்),ஜீவிதா,அனந்திகா சனில்குமார்,செந்தில்,கே.எஸ்.ரவிக்குமார்,லிவிங்ஸ்டன்,நிரோஷா,தம்பி ராமையா,ஆதித்ய மேனன்,விவேக் பிரசன்னா,தன்யா பாலகிருஷ்ணா,தங்கதுரை நடித்துள்ளனர்.
திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு பி.பிரவின் பாஸ்கர்,கலை இயக்குநர் ராமு தங்கராஜ்,நடன இயக்குநர் தினேஷ்,சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ‘அனல்’ அரசு, ‘கிக்காஸ்’ காளி, ‘ஸ்டண்ட்’விக்கி,பாடலாசிரியர்கள் யுகபாரதி, சினேகன், கபிலன், விவேக், ஏ.ஆர்.ரஹ்மான், மஷூக் ரஹ்மான்,கதை மற்றும் வசனகர்த்தா விஷ்ணு ரங்கசாமி என்று பணியாற்றி உள்ளனர்.லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் ‘லால் சலாம்’ படத்தின் டிரைலர் வெளியான போதே சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் கிராமம். அங்கே இந்து முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு செல்கிற ரஜினி அங்கே மொய்தின்பாயாக பெரிய தொழில் அதிபர் ஆகிறார்.அவரது மகன் சம்சுதீன். அவரது நெருங்கிய நண்பரின் மகன் திரு.இருவருமே சிறு வயது முதலே எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரியபிரச்சனையாகி கலவரமாக வெடிக்கிறது. ஊருக்குள் பகை நுழைகிறது.இந்து – முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது.அவ்வூரில் தேர்த் திருவிழா ஏற்பாடு நடக்கிறது. அரசியல் உள்ளே நுழைந்து தடுக்கிறது.இறுதியாகத் தேர்த் திருவிழா நடந்ததா, அதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதைப் பேசுவதுதான் ‘லால் சலாம்’ படம்.
ரஜினிகாந்த் மீது பாஜக வின் மத நிழல் படிந்து பேசப்படும் இந்த நேரத்தில் தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து மத நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தை இயக்கி உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தைப் பாராட்டலாம்.
படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்கள்,அவர்களது வாழ்க்கை விஷ்ணு விஷால் – விக்ராந்த் இடையில் பகைமை, விளையாட்டில் தூவப்படும் வெறுப்புணர்வு என்று காட்சிகள் வருகின்றன.கலவரம் சிறை சென்று வரும் விஷ்ணு விஷால், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், என சற்றே தொய்வுடன் தொடங்கும் படம், ரஜினியின் வருகைக்குப் பிறகு வேகமெடுக்கிறது.ரஜினியின் அறிமுகம் காட்சி அமர்க்களம். கூடவே ரஹ்மான் குரலில் ‘ஜலாலி ஜலாலி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் செம ட்ரீட். ரஜினியின் கதாபாத்திரச்சித்தரிப்பும் சிறப்பு.சிறப்புத் தோற்றம் என்றுகூறப்பட்டாலும் படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம்தான்.அந்த பாத்திரத்தின் மன உணர்வுகளைக் காண்பிக்கும் காட்சிகளும் உண்டு.
மதநல்லிணக்கம் தொடர்பாக ரஜினி பேசும் வசனங்கள் காலத்துக்கு ஏற்ற அர்த்தமுள்ளவை.குறிப்பாக, கிரிக்கெட் மைதானத்தில் மைக்கில் பேசுபவரை அழைத்துப் பேசுவது, இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே அமைதியை ஏற்படுத்த நடக்கும் கூட்டத்தில் ரஜினி பேசுவது ஆகிய காட்சிகள் கைதட்டி வரவேற்க வைப்பவை.
இது விளையாட்டு சார்ந்த கதைக்களம் என்று பரவலாக அறியப்பட்டாலும் பிறகு கோயில் தேர்த் திருவிழா என்று திசை மாற்றம் நடந்ததன் காரணம் என்னவென்று தெரியவில்லை.அண்மையில் ப்ளூ ஸ்டார் என்ற படம் வந்ததாலோ என்னவோ சிறிய அளவே கிரிக்கெட் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன..
போரடிக்காத வகையில் காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்தாலும் இலக்கில்லாத வகையில் எங்கெங்கோ செல்வதால் எந்த இடத்திலும் படத்துடன் ஒன்றமுடியாத நிலை ஏற்படுகிறது. படத்தின் மையக்கரு தேர்த் திருவிழாவா அல்லது கிரிக்கெட்டா என்று தெளிவாகாத நிலை.காலம்மாற்றி காட்சிகளை மாற்றி மாற்றிக் காட்டுவதால் பல காட்சிகள் தொடர்பற்றவையாக உள்ளன.
ரஜினி தவிர விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, விவேக் பிரசன்னா, மூணாறு ரமேஷ் என அனைவரும்தங்கள் பாத்திரங்களைப் பதிய வைத்துள்ளனர்.விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வரும் அனந்திகா சனில்குமார் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வருகிறார்.தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் வாய்ப்பு பெரிதாக இல்லை.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் இதம்..
சமூக வலைதளங்களில் மதங்களை மையமாக வைத்து வெறுப்புப் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் இந்த காலச் சூழலில் மத நல்லிணக்கத்தை பற்றிப் பேசும் இந்த ’லால் சலாம்’ படத்தை தாராளமாக மெச்சலாம், பாராட்டலாம் , வரவேற்கலாம்.