‘லவ்வர் ‘விமர்சனம்

மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சித்தப்பு சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் நிகிலா சங்கர், ரிணி, அருணாச்சலேஸ்வரன் நடித்துள்ளனர்.

எழுதி இயக்கி உள்ளார் பிரபுராம் வியாஸ், ஒளிப்பதிவு ஸ்ரேயஸ் கிருஷ்ணா, இசை ஷான் ரோல்டன், படத்தொகுப்பு பரத் விக்ரமன். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ளது.

கால மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு கருத்தைப் பற்றிய பார்வையும் மாறி வருகின்றது. அப்படித்தான் காதல் ,காதலர்கள் பற்றிய பார்வையும் போக்கும் நடப்புக் காலத்தில் மாறி வருகிறது. அப்படி மாறிவரும் சூழ்நிலையில் நிகழும் ஒரு காதலின் போக்கும் காதலர்களிடம் தோன்றும் மன உணர்வுகளும் பற்றிய கதை. ஆரம்பத்தில் மனம் நெருங்கி, கருத்தொருமித்த காதலர்களாக உள்ள அவர்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் அதன் விளைவுகளும் தான் ‘லவ்வர்’ படத்தின் கதை.

திவ்யாவும் அருணும் ஆறு ஆண்டுகள் காதலிக்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒருவரை ஒருவர் குறை காண ஆரம்பிக்கிறார்கள்.அருண் மனம் கொஞ்சம் பழையதாக இருக்கிறது. தன் காதலி தன்னுடன் மட்டும் தான் பேச வேண்டும் பழக வேண்டும் என்று நினைக்கிறான். திவ்யாவோ அருணைக் காதலிப்பது ஒரு புறம் இருந்தாலும் பிற நண்பர்களுடன் சகஜமாகப் பழகுகிறாள். இது அருணுக்குப் பிடிக்கவில்லை.திவ்யா மீது அருண் கொண்ட அதீத காதலே அவள் மீது அதிக சந்தேகத்திற்கும் இடமாகிறது.
ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வதும் பழி சொல்வதும் சந்தேகப்படுவதும் தொடர்கிறது.

இந்த சந்தேகப் பார்வையில் அருண் தன்னை நோக்குவதை திவ்யாக வெறுக்கிறாள் .ஒருவர் சுதந்திரத்தில் ஒருவர் தலையிடுவதாக உணர்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஆறாண்டு காதல் முடிவுக்கு வருகிறது .ஆனாலும் அருண் விடுவதாக இல்லை. விளைவு என்ன என்பது தான் ‘லவ்வர்’ படத்தின் கதை செல்லும் பாதை

காதல் தெய்வீகமானது ,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது , மனமொத்த காதல் என்கிற பழைய டெம்ப்லேட் சிந்தனையிலிருந்து மாறுபட்ட விதத்தில் இந்தக் கதையை உருவாக்கி நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ் . படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் இயல்பாகவும் சுவாரசியமாகவும் அது செல்லும் பாதையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன் இயல்பாக நகர்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இப்படியான கதை கூறும் முறை திரை ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.

படத்தில் அருண் கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார்.சரியான வேலை இல்லை குடும்ப அமைதியின்மை காதலியின் மீதுள்ள அதீத காதலால் வரும் சந்தேகம் என்று தனக்குள் நொறுங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தில் தான் தோல்வியுற்றவனாக குறுகிக் கொண்டிருக்கும் அந்த மன இயல்புகளை மிக அழகாக வெளிப்படுத்தி இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார் மணிகண்டன்.

பொதுவாக இப்போது வரும் கதாநாயகிகள் ஷோகேஸ் பொம்மை போல தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு சினிமாவில் நிலைக்க எண்ணுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் நாயகியாகி இருக்கும் ஸ்ரீகௌரி பிரியா திரைக்குப் புதியவர் என்றாலும் நடிப்பில் பிரமாதப்படுத்தி உள்ளார். தனக்கான நடிப்பு சந்தர்ப்பங்களை அருமையாகப் பயன்படுத்தி நடிப்புத் திறனை வெளிப்படுத்தி நிறைவான மதிப்பெண் பெற்று விடுகிறார்.சபாஷ்!மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா இருவருமே சொல்ல முடியாத தனது மன நெருக்கடிகளை முகத்தில் பிரதிபலித்து நடிப்பில் போட்டி போட்டு உள்ளார்கள்.

அதேபோல் கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்களும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களும் கூட அவர்களது குணச்சித்திரங்களை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர். அவை எதார்த்தமாகவும் உள்ளன. அந்த வகையில் நாயகனுக்கு அடுத்தபடியாக பிரதான வேடமேற்று இருக்கும் கண்ணா ரவி அந்த மதன் பாத்திரத்தில் தனது  நடிப்பில் கவனிக்க வைக்கிறார். நாயகன் மணிகண்டனின் தந்தையாக வரும் சரவணனும், தாயாக வரும் கீதா கைலாசமும் கூட குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளனர்.
மேலும் ஹரிஷ் குமார், ரிணி, நிகிலா ஷங்கர், அருணாச்சலேஸ்வரன் என வரும் பிற நடிகர்களும் அவரவர் குணச்சித்திரங்களில் கொடி பிடித்துள்ளனர்.
படத்தில் வரும் அத்தனை குணச்சித்திரங்களுக்கும் தனித்தனி அகஇயல்பைச் சித்தரித்துள்ள இயக்குநரின் சித்தரிப்பு பாராட்டுக்குரியது.

காதல் பற்றி ஜேம்ஸ் பால்ட்வின் கூறிய Love does not begin and end the way we seem to think it does. Love is a battle, love is a war; love is a growing up. கருத்தை முன்வைத்துக் தொடங்குகிற படத்தில்,சினிமாத்தனம் இல்லாமல்  கதையை உருவாக்கி ஒரு நிகர்நிலை வாழ்க்கையைக் கண்முன் பார்க்கிற ஒரு திரை அனுபவத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர்.

படத்திற்கான ஒளிப்பதிவு செய்துள்ள ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைத்துள்ள ஷான் ரோல்டன் இருவரும் படத்தின் கதையின் தன்மையை அழுத்தமாக ரசிகர்கள் முன் கடத்தி உள்ளனர். உணர்வுகளைக் கடத்தும் பின்னணி இசை மட்டுமல்ல அர்த்தமுள்ள பல வரிகள் கொண்ட பாடல்களும் படத்தில் வருகின்றன. 

செயற்கைத் தனமோ அலங்காரச் சொற்களோ இல்லாத வசனங்கள் படத்திற்கு புது அழகைத் தருகின்றன.காதலர்கள் ஒருவர் மற்றவரிடம் சில விஷயங்களைச் சொல்லாமல் மறைப்பது அடுத்தவர் மனம் புண்படக் கூடாது என்பதால் தான் என்றும், மறைப்பது தான் மனம் புண்பட காரணம் என்றும் சொல்லப்படும் கருத்து எளிமையான வசனங்கள் மூலம் அழுத்தம் பெறுகின்றன.

மொத்தத்தில் புதிய பார்வையில் ஒரு காதல் பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது எனலாம்.தற்கால காதலைப் பற்றி ஒரு விவாதத்தை முன்வைத்து,சில பரிசீலனைகளைச் செய்யச் சொல்லி பல்வேறு சிந்தனைகளைக் தூண்டுகிறது இந்தப் படம்.