‘இ மெயில் ‘ விமர்சனம்

எஸ்.ஆர்.பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தின் கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். நாயகியாக
கன்னட நடிகை ராகினி திவிவேதி நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீயும் இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜியும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் மறைந்த நடிகர் மனோபாலா , பில்லி முரளி, லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை (பாடல்கள்) ; அவினாஷ் கவாஸ்கர்,பின்னணி இசை ; ஜுபின்,ஒளிப்பதிவு ; செல்வம் முத்தப்பன்,படத்தொகுப்பு ; ராஜேஷ் குமார்,பாடல்கள் ; அன்புசெழியன்-விஷ்ணு ராம்,ஸ்டண்ட் ; மாஸ் மாதா என தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர்.

நாயகி ராகினி வேலைக்குப் போகும் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அவர் ஒரு ரியல் எஸ்டேட்டில் வேலை பார்க்கிறார். ஆனால் சரியான வாய்ப்புகள் இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார் .இந்நிலையில் அவருக்கு ஆன்லைன் விளையாட்டில் ஈடுபாடு வந்து, அதிலிருந்து பணம் வருகிறது. மகிழ்ச்சி அடைகிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு ஒரு  இ மெயில் வருகிறது. அதில் ஒரு ஹார்ட் டிஸ்கைத் தேடி தருமாறு மிரட்டலாகக் கட்டளை வருகிறது . அந்த வேலையைச் செய்யச் சொல்லி மிரட்டப்படுகிறார். அவருக்குத் தெரியாமல் காதலுடன் இருக்கும்படியான நெருக்கமான படங்கள் மற்றும் அவர் ஒரு கொலை முயற்சியில் இருப்பது போன்ற படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டு பிளாக்மெயில் செய்யப்படுகிறார்.

முதலில் பயந்து போனவர் பிறகு பிரச்சினையின் வேர் தேடி தனது தோழிகளுடன் சென்று இதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க முயல்கிறார். போகப் போக வெவ்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார். அனைத்தையும் சமாளித்து எப்படி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார்.யார் அந்தக் குற்றவாளி? என்பதுதான் இந்த இமெயில் படத்தின் கதை.

ஆன்லைன் விளையாட்டு விபரீதங்களைப் பற்றி விளக்கிடும் ஒரு படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார்கள்.ஆனால் அதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல்  படம் ஆக்கி இருக்கிறார்கள் .

படத்தில் கதாநாயகன் அசோக் தனது தோற்றம் உடல் மொழி நடிப்பு மூலம் குறைவான காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார். கதாநாயகி ராகினி ஆரம்பத்தில் பயந்து போனவராக இருந்தாலும் பிறகு துணிந்து களத்தில் இறங்கும் போது அவரது இன்னொரு முகம் வெளிப்பட்டு சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று நிரூபிக்கிறார்.முகத்தில் சோக நிழல் படிந்த தோற்றம் இருந்தாலும் அவர் தனது வேலையைச் சரியாக செய்துள்ளார்.துணைப் பாத்திரங்களில்  நடித்துள்ள நடிகர்களும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.

மனோபாலாவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்ப்பது ஓர் ஆறுதலாக இருந்தாலும் அவரது நீளமான காமெடி அலுப்பூட்டுகிறது.படத்தில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் நிறைய உள்ளன.அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தில் விறுவிறு கிளுகிளு காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இவை கமர்ஷியல் ரசிகர்களுக்குத் தீனி போடுபவை. ஒரு கிரைம் திரில்லராகச் சொல்லி இருக்க வேண்டிய படத்தைச் சாதாரணமாக படமாக்கி உள்ளார்கள்.படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்குப் பலம்.

இந்தக் காலத்துக்கு ஏற்ற ஒரு நல்ல விழிப்புணர்வுக் கருத்தை எடுத்துக் கொண்டு படமாக்க முயன்ற இயக்குநரைப் பாராட்டலாம். படத்தின் விறுவிறுப்பைத் தக்க வைக்க இயக்குநர் பாடுபட்டுள்ளார்.ஆனால் மேலும் நேர்த்தியாகச் சொல்லி இருந்தால் படம் முழு கமர்சியல் படமாக மாறி இருக்கும்.

படத்தில் அதிகம் பேசப்படுவது ஹார்ட் டிஸ்க் என்பதுதான். படத்தின் தலைப்பை ஹார்ட் டிஸ்க் என்றே வைத்து இருக்கலாம். இமெயில் என்று வைத்துள்ளார்கள் ஏனோ?
படத்தின் தயாரிப்பாளரே இயக்குநராக இருப்பதால் அவரால் முடிந்த உயரத்திற்கு பூப்பறிக்க முயன்று உள்ளார்.
.