திரைப்படங்களில் சில முகங்கள் பெயர் தெரியாமலேயே மனதில் பதிந்து விடும்.யார் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் என்று ரசிகர்கள் தேடும் அளவிற்கு சிலரது நடிப்பு இருக்கும் .அப்படி ஒரு வித்தியாச முகத்துக்கு சொந்தக்காரர் தான்
‘அசுரன்’ ஜெகே.இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா.வெற்றிமாறனின் ‘அசுரன்’ தொடங்கி ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’, ‘லால்சலாம்’, ‘வா வாத்தியார்’, ‘கர’, ‘கருப்பு’ , ‘ப்ளாஸ்ட்’ என்று தொடர்ந்து அண்மையில் வெளிவந்த ‘லிங்கம்’ இணையத் தொடர் வரை தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் இந்த ‘அசுரன்’ ஜெகே.இயக்குநர் கனவோடு திரையுலகில் வந்தவர் விஜய் சேதுபதியை வைத்து ‘வன்மம்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிறகு நடிகராகி விட்டவர்.
தான் நடிகரான கதையைப் பற்றிக் கூறும் போது தனது முன் கதைச் சுருக்கத்தை விவரிக்க ஆரம்பித்தார்.
“எனக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் திங்கள் நகர் கிராமம்.சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று கனவோடு
எண்பதுகளில் சென்னை வந்தேன். நான் முதலில் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘இன்று நீ நாளை நான்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு அவர் ‘அந்த ஒரு நிமிடம்’ இயக்கினார். கமல் சார் நடித்த அந்தப் படத்தில் நான் பணியாற்றினேன். அப்படத்தின் மூலம் கமல் சாரிடம் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.அந்தப் படம் சரியாகப் போகாததால் மேஜர் படம் இயக்குவதை விட்டு விட்டார். இந்த நிலையில் கமல் சாரிடம் ஏற்பட்ட பழக்கத்தால் அவரிடம் நான் வாய்ப்பு கேட்டேன். அப்போது ‘விக்ரம்’ படம் தொடங்கியிருந்தது .நான் அதில் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன்.அப்போது ‘ ‘இயக்குநர் ராஜசேகரிடம் உதவி இயக்குநர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீ எனது ராஜ்கமல் பிலிம்ஸ் கம்பெனியில் வந்து சேர்ந்து விடு’ என்றார். அப்படி கம்பெனி உதவி இயக்குநராக ராஜ் கமல் பிலிம்ஸில் சேர்ந்து பணி புரிந்தேன்.
எனக்குக் கொஞ்சம் ஆங்கிலம் தெரியும்.அந்தப் படத்தில் டிம்பிள் கபாடியா, அம்ஜத் கான் போன்ற மும்பை நட்சத்திரங்கள் நடித்தார்கள்.எனவே பணியாற்றிய போது அவர்களுடன் தொடர்பு கொள்வது எனக்குச் சுலபமாக இருந்தது.
படப்பிடிப்பின் போது நிர்வாகப் பொறுப்புகளையும் தயாரிப்பு நிர்வாகி போல தயாரிப்பு சார்ந்த வேலைகளை அலுவல் ரீதியாக நான் கவனித்துக் கொண்டேன்.அது மட்டுமில்லாமல் மானசீகமாக மனதளவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். கமல் சார் கொடுத்த வாய்ப்பு பல விதமான சினிமாவின் உருவாக்கம் சார்ந்த பல அடுக்குகளைப் பற்றி எனக்குப் புரிய வைத்தது. திரைப்படத் தயாரிப்பு சார்ந்த முழுப் பாடமாகவும் அது இருந்தது. அப்போது கதை விவாதங்களில் கமல் சாருடன் பங்கேற்ற கலைமணி அவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்ததால் அவரிடம் சேர்ந்தேன்.அவர் கதை கொடுக்கும் இயக்குநர்களிடமும் அப்போது பாரதிராஜாவிடமிருந்து வந்து பிரபலமாகி இருந்த சில இயக்குநர்களிடமும் பணியாற்ற விரும்பினேன். அப்படித்தான் கலைமணி கதை எழுதிய ‘ என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்’ படத்தில் மனோபாலாவிடம் பணியாற்றினேன்.
கலைமணியிடம் சேர்ந்து அவர் இயக்கிய ‘மனித ஜாதி’ படத்தில் பணி புரிந்தேன். அது சரியாகப் போகவில்லை.தொடர்ந்து அவரும் படம் இயக்கவில்லை.
அப்படியே கலைமணி அவர்கள் மூலம் பிறகு இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடம் ‘செம்பருத்தி’, ‘மக்களாட்சி’ படங்களில் பணியாற்றினேன். இது ஒரு பக்கம் உதவி இயக்குநராக என் பணி தொடர்ந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இயக்குநராக வேண்டும் என்று நான் தேடுதல் வேட்டையில் இறங்கிக் கொண்டிருந்தேன்.
எனது முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். இடையில் வாய்ப்புகள் கூடி வரும் போது தள்ளிப் போகும்.நான் சொன்ன கதை பிடித்துப் போனாலும் சில இடையூறுகளால் கடைசி நேரத்தில் ஏதாவது தடங்கல் வந்து அது முடியாமல் போகும். இப்படிக் கடைசி நேரத்தில் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அப்படி போய்க்கொண்டிருக்கும் போது ஒருநாள் ‘மன்மதனி’ன் இறுதிக் கட்டத்தில் சிம்பு சாரிடம் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது .அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் ‘மன்மதன்’ படத்தில் இணைந்து பணியாற்றக் கூறினார். பிறகு ‘வல்லவன்’ படத்தில் பணியாற்றினேன்.அடிக்கடி சந்திப்போம், ஆனாலும் ஏனோ படமுயற்சி கைகூடவில்லை.
பிறகு சரத்குமார் ,பர்ஜானா ,நமீதா கபூர் போன்றவர்கள் நடித்த ‘1977’ படத்தில் பணியாற்றினேன். அதன் இயக்குநர் ஜி.என்.தினேஷ் குமார்.அவர் நல்ல திறமைசாலி.
அதற்கு பிறகு ஒரு வழியாக 2014 இல் நான் ‘வன்மம்’படம் தொடங்கி இயக்கினேன் .விஜய் சேதுபதி சார் தான் கதா நாயகன்.அதுவரை அவர் குணச்சித்திரம் போன்ற வித்தியாச வேடங்களில் நடித்து வந்தார். அவரை முதன் முதலில் முழு ஆக்சன் ஹீரோவாக அதில் நான் காட்டிஇருந்தேன்.தவறான காலத்தில் அது வெளியிடப்பட்டது. அதாவது தீபாவளிக்கு 10 நாள் கழித்து அது வெளியானது. அப்போது மக்கள் கையில் பணம் இருக்காது. எனவே அந்தப் படம் சரியாகப் போகவில்லை. ஆனால் பார்த்தவர்கள் பாராட்டினார்கள்.
அந்தப் படத்தைப் பலரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினாலும் சினிமாவில் வெற்றி தான் முக்கியம் என்பதால் மீண்டும் எனக்கு இடைவெளி ஏற்பட்டது. என் படம் வெளியாகிச் சில ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ‘றெக்க’ படத்தின் விழாவின் போது அதன் இயக்குநர் ரத்தின சிவா ‘வன்மம் ‘படத்தைப் பார்த்த பிறகு தான் எனக்கு விஜய் சேதுபதியை எப்படி ஆக்ஷன் ஹீரோவாக அணுகுவது என்கிற நம்பிக்கையும் தைரியமும் வந்தது என்றெல்லாம் பேசினார் .அந்த ‘வன்மம்’ படம் திரையரங்கில் பெரிதாக ஓட வாய்ப்பு இல்லாமல் போனாலும் அமேசான் பிரைமில் வெற்றிகரமாக பார்க்கப்பட்டது; இன்றும் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.ஒரு படத்தை இயக்கிய இயக்குநராக மாறிவிட்டு மீண்டும் யாரிடமும் உதவி இயக்குநராகச் சேர முடியாது. ஓரளவுக்கு மேல் குனிய முடியாது. இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன் .அப்போது எனது வயது ஐம்பதைத் தாண்டி இருந்தது. உடல் அலைச்சல்கள் ,மன உளைச்சல்கள் என்று கவலை கூடியிருந்தது.தலைமுடி எல்லாம் நரைத்து விட்டது. தலைக்குத் தலைச்சாயம் போடும்போது மீசைக்கும் போட்டேன்.அது ஒவ்வாமையாகிவிட்டது.
அதற்கு மருந்து போட்டால் அப்போது ஆறும். மீண்டும் புண்போல வந்து விடும் .எனவே மீசையை எடுத்து விட்டேன்.முதலில் என் முகத்தைப் பார்த்தபோது எனக்கு வித்தியாசமாகவும் சில நேரம் பயமாகவும் இருந்தது. ஆனால் என் முகத்தைப் பார்த்து விட்டு பலரும் வித்தியாசமான முகமாக இருக்கிறது என்றார்கள். சிலர் சினிமாவில் நடிக்கலாம் என்று சொன்னார்கள் .பலரும் இப்படிச் சொல்லவே நடிக்கலாமோ என்று நினைத்தேன்.அதற்கு ஒரு நல்ல அறிமுகம் வேண்டும் அல்லவா?ஆனால் யாரிடம் சென்று கேட்பது?
இயக்குநராகிவிட்டு நடிக்க வாய்ப்பு உதவி கேட்பது எப்படி என்ற தயக்கத்திலேயே காலம் கடந்தது. அந்த நிலையில் எனது நண்பரும் நலம் விரும்பியுமான பிரபல திரைப்பட எடிட்டர் வி. டி. விஜயனிடம் எனது நடிப்பு ஆசையை வெளிப்படுத்தி இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு அறிமுகம் செய்து வைக்க முடியுமா என்று கேட்டேன். இது சாதாரண விஷயம் என்று சொன்னவர்,இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினார்.நண்பர் விஜயனிடம் முதல் நாள் காலையில் பேசினேன். அவர் பரிந்துரைத்தபடி மறுநாளே வெற்றிமாறன் சார் அலுவலகம் சென்றேன்.முதல் நாள் பேசியது மறுநாளே இப்படி ஒரு சந்திப்பு சாத்தியப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.என்னைப் பார்த்து விட்டு ஒரு ஆடிஷன் வைக்க வேண்டும் என்றார்கள். ஆடிஷனில் இப்படிச் செய் அப்படிச் செய் என்று அவர்கள் கேட்கவில்லை .என் இயல்பில் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியபடிக் கேட்டுச் சோதிக்கப்பட்டது.என் இஷ்டத்துக்கு முக பாவனை காட்டச் சொல்லி நடிக்கச் சொன்னார்கள். அப்படியே நடித்துக் காட்டினேன்.
வெற்றிமாறன் சார் தனது உதவி இயக்குநரிடம் எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு அவர்களது தொலைபேசி எண்ணைக் கொடுக்கச் சொன்னார்.பொதுவாக சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களின் எண்களை மட்டும்தான் வாங்கிக் கொள்வார்களே தவிர அவர்களது எண்களைத் தர மாட்டார்கள். எனவே இது எனக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிந்தது.
இதற்கு பிறகு நான் ஊருக்கு, நாகர்கோவில் சென்று ஒருநாள் குலதெய்வம் மாடசாமி கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு அசுரன் படப்பிடிப்பு தளத்திலிருந்து போன் வந்தது. சென்னையில் இருக்கிறீர்களா என்று பேசினார்கள். நீங்கள் உடனே கோவில்பட்டி வர வேண்டும் சென்னையில் இருந்து டிக்கெட் போடவா என்றார்கள். நான் கன்னியாகுமரியில் தான் இருக்கிறேன் கோவில்பட்டி எனக்குப் பக்கம் தான் வந்து விடுகிறேன் என்றேன்.
அப்படித்தான் நான் சென்றுபடப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். அந்தப் படத்தில் இயக்குநர் தமிழின் அப்பாவாக கரியனின் தந்தையாக மாடசாமி பாத்திரத்தில் நடித்திருப்பேன்.
எனது வாழ்க்கையைப் போலவே முதல் காட்சியிலும் ஒரு இருட்டான அத்துவான காட்டில் படப்பிடிப்பு நடந்தது.நமது வாழ்க்கை
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது என்று நான் நினைத்தபடி அந்தக் காட்சியும் இருந்தது. அதில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அது போல வாழ்க்கையில் ஒரு தொடக்க வெளிச்சம் கிடைத்தது என்பதை உணர்ந்தேன். எனது நடிப்பைப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறதோ என்று என்ன சொல்வார்களோ என்று நினைத்தேன். இதை உதவி இயக்குநரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.அவர் நடிப்பது அளவு சரியாகத்தான் இருக்கிறது அப்படியே இருக்கட்டும் அதற்கு மேல் நடிக்க வைத்துக் கெடுத்து விட வேண்டாம் என்று தங்களிடம் இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாக உதவி இயக்குநர்கள் கூறியது எனக்கு விருது கிடைத்தது போல் இருந்தது
அதற்குப் பிறகு மெல்ல மெல்ல படங்கள் வர ஆரம்பித்தன.இதுவரை சிறியதும் பெரியதுமாக 25 படங்கள் முடித்து விட்டேன்.என் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘லிங்கம் ‘இணையத் தொடர் வரை வந்துள்ளது .லிங்கம் தொடரில் எனது பாத்திரம் பரவலாகப் பேசப்படுகிறது.
எனது முகத்தை பார்த்துப் புதியவர்கள் கேட்கிறார்கள் இவர் மலையாள நடிகரா? மலையாள நடிகர் போல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். மலையாளத்தில் இயல்பாக நடிப்பார்கள் அப்படி நான் இயல்பாக நடிப்பதாகவும் கூறுகிறார்கள். அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் புதிய பாதையில் நான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இரண்டு புதிய படங்களில் இப்போது நடித்து வருகிறேன். அவை பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிற படங்கள்.
நான் ஒரு கதாநாயக நடிகன் கிடையாது. எனது வயதிற்கும் தோற்றத்திற்கும் நான் குணச்சித்திரத்தில் தான் நடிக்க முடியும். அதை நோக்கியே எனது அவதானிப்புகளும் பாதிப்புகளும் இருக்கும்.அந்த வகையில் நான் அந்தக் காலத்து எஸ் .வி. ரங்காராவ் தொடங்கி எம் .ஆர். ராதா ,வி.கே .ராமசாமி வரை கலவையாகக் குணச்சித்திரங்களைப் பார்த்து வருகிறேன் .அவர்களது பாதிப்பு எனது நடிப்பில் இருக்கலாம்.நேரடியாக இருக்காது அதன் தாக்கம் இருக்கும் என்று சொல்வேன். இந்தப் புதிய பாதையில் என் பயணம் தொடர்கிறது .
என் வாழ்க்கையில் கமல் சார் ரஜினி சார் என்கிற இரண்டு லெஜெண்ட்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். நான் கமல் சாரிடம் இருந்து விலகி வெளியே சென்று விட்டு மீண்டும் அவரிடம் வாய்ப்பு கேட்டபோது நான் அவரிடம் அவர் சொன்னதைக் கேட்காமல் வெளியே சென்றதற்காக மன்னிப்பு கேட்டேன்.அவரும் என்னைப் புரிந்து கொண்டு மன்னித்து ஏற்றுக் கொண்டார்.அந்தப் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் அவர். அப்படித் தான் ‘மருதநாயகம்’ படத்தில் இணைந்தேன். சில காலம் அது ஓடியது. அதற்கு பிறகு அந்தப் படம் வளரவில்லை.
‘லால் சலாம் ‘படத்தில் ரஜினி சாருடன் படம் முழுக்க வந்தேன். அதற்குப் பிறகு நீண்ட நாள் கழித்துப் பார்த்தால் கூட அவர் அன்பாக விசாரிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்தப் பண்புதான் அவரை இவ்வளவு உயரம் கொண்டு சென்றிருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.இப்படி பெரிய இரண்டு ஜாம்பவான்களுடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்தது .அதை நான் என்றும் மறக்க மாட்டேன் .இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்துவிடாது.
வாழ்க்கை அடுத்தடுத்த கணங்களின் மர்மங்களை மட்டுமல்ல அதற்கான விடைகளையும் ஒளித்து வைத்திருக்கும். முடிச்சு போட்டுக் கொண்டே செல்கிற வாழ்க்கை அதை அவிழ்ப்பதற்கான வழிகளையும் வைத்திருக்கும். இப்படித்தான் எனது வாழ்க்கையைப் பார்க்கத் தோன்றுகிறது. நான் அன்று மாடசாமி கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்தபோது வாய்ப்பாக வந்த ‘அசுரன்’ திரைப்படத்தில் நான் நடித்த அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் மாடசாமி என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா? இந்த வாழ்க்கையின் விசித்திரத்தை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?
இப்போது ஒரு நடிகனாக புதிய பாதையில் என் பயணம் தொடர்கிறது” இவ்வாறு நடிகர் ‘அசுரன்’ ஜெகே கூறினார்


