லெஜெண்ட் சரவணன், ஷாம்,ஆண்ட்ரியா ஜெர்மையா சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புட், லால்,பாகுபலி பிரபாகரன், அமிர்தா ஐயர், வீ டிவி கணேஷ், இயல், ஐஸ்வர்யா பாஸ்கரன் ,ஜார்ஜ் மரியான், அறந்தாங்கி நிஷா, படவா கோபி, ஆதித்யா கதிர், ஜெயஸ்மித்ரா, ஷர்மிதா சாம், யோகிராம், ஓஏகே சுந்தர், மகாநதி சங்கர் ,வேல் அருணாச்சலம், நிரஞ்சன் மோசஸ் , ஷோபன் பாபு ,அசோக் பாண்டியன் நடித்துள்ளனர்.
ஆர் எஸ் துரை செந்தில் குமார் எழுதி இயக்கியுள்ளார். வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
தூத்துக்குடியில் வாழ்ந்து வருகிறார் சக்திவேல் என்கிற பெயர் கொண்ட லெஜென்ட் சரவணன். கார் பழுது பார்க்கும் மையத்தில் கார் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.அவருக்கு ஒரு மகள் உண்டு, மனைவி இல்லை .மகளே தனது உலகமாக நினைத்து வாழ்ந்து வருகிறார்.மெக்கானிக் சென்டரில் வேலை பார்ப்பது குழந்தையை பள்ளிக்கு அழைத்துக் கொண்டு செல்வது, அழைத்துக் கொண்டு வருவது என்று இருக்கிறார். தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் கார்களை பழுது பார்ப்பது இவருக்கு முக்கியமான வேலையாக இருக்கிறது. அப்படி அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு. துறைமுகத்தின் பரபரப்பு நெருக்கடியைப் பயன்படுத்தி அதன் உள்ளுலகமாக ஒரு நிழல் உலகம் இயங்கி வருகிறது. இதை அறிந்து கொண்ட காவல் அதிகாரி ஆண்ட்ரியா, அதனை அம்பலப்படுத்த நினைக்கிறார். குற்றக் கும்பலை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப் போராடுகிறார். அதற்காகத் துறைமுகத்தோடு உள்ளவர்களோடு அதிகமாகப் பழக்கம் வைத்துள்ள சக்திவேலிடம் உதவி கேட்கிறார்.ஆனால் அவருக்கு உதவி செய்ய மறுக்கிறார்.தனது வாடிக்கையாளருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இதன் பிறகு, சக்திவேல் ஒரு சாதாரண கார் மெக்கானிக் அல்ல என்று தெரிய வருகிறது. அவரையும் போலீஸ் சந்தேகப் படுகிறது. அவரது முன் கதை என்ன? அவர் ஏன் கார் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார் ?அவர் மனைவி எங்கே? அவருக்கு என்ன நடந்தது? சக்திவேல் தனிமையில் குழந்தையுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் கதை விரிகிறது.
இவ்வளவு கேள்விகளோடு சொல்லும் கதை செல்லும் பாதை என்ன? பயணம் என்ன? என்பதே துரை செந்தில்குமார் இயக்கியிருக்கும் 136.10 நிமிடங்கள் கொண்ட ‘லீடர்’ படத்தின் மீதிக்கதை.
தான் உண்டு தான் வேலை உண்டு என்று ஒரு சாதுவாக அறிமுகம் ஆகி மகள் மீது பாசம் கொண்டு மகளுக்காக எதையும் செய்யும் ஒரு பாசக்கார தந்தையாக வருகிறார் சரவணன். மகள் எழுப்ப கண்ணைக் கசக்கி கொண்டு தூங்கி எழும் காட்சியில் தான் தான் சாவதானமாக அவர் அறிமுகமாகிறார்.தாய் இல்லாமல் வாழும் மகளுக்கு ஒரு தந்தையாக இருக்கும் அவர், பார்க்க பரம சாதுவாக இருக்கிறார். எதிரிகளை அடித்துத் துவம்சம் செய்யும் இடத்தில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று ஒரு மக்கள் நாயகனாக அதாவது மாஸ் ஹீரோவாக வெளிப்படுகிறார், பின்பாதியில் அவர் நடத்தும் சாகச பயணங்களை நீங்கள் நினைத்தே பார்த்திருக்க முடியாது.அந்த அளவிற்கு சாகசங்கள் செய்கிறார்.சக்திவேல் கதாபாத்திரத்தில் நடத்துள்ள லெஜெண்ட் சரவணன்.தன்னை முன்னிலைப்படுத்தாமல் கதாபாத்திரத்திற்குத் தன்னை ஒப்படைத்த வகையில் தனது இந்த இரண்டாவது படத்தில் ஒரு நடிகராகப் பல படிகள் முன்னேறி இருக்கிறார் லெஜெண்ட் சரவணன்..
ஒரு தயாரிப்பாளர் கதாநாயகனாக நடிக்கும் போது இயக்குநருக்குச் சில சங்கடங்கள் நேர்வதுண்டு. பிற பாத்திரங்கள் அவரிடம் பேசும் வசனங்களைக் கூட தணிக்கை செய்து எழுத வேண்டிய நிர்ப்பந்தம் வருவதுண்டு.அதனால் அந்தக் கதாபாத்திர நேர்மைக்கு பங்கம் ஏற்படுவது உண்டு.ஆனால் இதில் அப்படி இல்லாமல் அந்த சக்திவேல் கதாபாத்திரமாகவே கொண்டு வர வேண்டும் என்று இயக்குநர் முயன்று இருக்கிறார். அதற்காக அந்தப் பாத்திரத்தைக் கேலி செய்து கிண்டல் செய்து இழிவுபடுத்தும் வசனங்களும் உள்ளன.அதற்கு இடம் கொடுத்து ஏற்பளித்த வகையிலேயே லெஜெண்ட் சரவணன் நடிகராக இதில் வெற்றி பெற்று இருக்கிறார் என்று கூற வேண்டும்.
வில்லத்தனம் கொண்ட கார்ப்பரேட் தோற்றத்தில் வரும் சந்தோஷ் பிரதாப் பல்வேறு முகம் காட்டித் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஷாமுக்கு காக்கி சட்டை எப்போதுமே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்திலும் பக்தவச்சலம் பாத்திரத்தில் அவர் வருகிறார். அவரது குணச்சித்திரம் நேர் நிலை எதிர்மறை என்று இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது .
நேர்மைக்காகப் போராடும் காவல் அதிகாரியாக வரும் ஆண்ட்ரியா,தனது துறை ரீதியிலான பயணத்தில் மன நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் அடிதடி காட்சிகளில் மனதில் பதிகிறார் .நாயகியாக வரும் பாயல் ராஜ்புட் தோற்றத்திலும் நடிப்பிலும் ஆக்சன் காட்சிகளிலும் தன்னால் முடிந்த அளவிற்கு செய்துள்ளார்.அதற்குப் பின்னே உள்ள பாசக்கார தாயையும் வெளிப்படுத்தியுள்ளார்.இயல்பான நடிப்பில் ஈர்த்துள்ளார் குழந்தை நட்சத்திரம் இயல்.
லெஜெண்ட் சரவணனின் கார் ஷெட் முதலாளியாக வரும் வீ டிவி கணேஷ் சந்தர்ப்ப சூழ்நிலையில் சங்கடப்பட்டுப் பேசும் வசனங்கள் கூட சிரிப்பு மூட்டுகின்றன. எனவே நகைச்சுவைப் பகுதி என்று தனியே தேவைப்பட்டிருக்கவில்லை.
துறைமுக தாதா சால்ட் ஆக பாகுபலி பிரபாகரன் நடித்துள்ளார். வழக்கம்போல தனது முரட்டுத்தன வில்லன் பாத்திரத்தில் வருகிறார்.
இவர்களைத் தாண்டி லால், அமிர்தா ஐயர், ஜார்ஜ் மரியன், ஐஸ்வர்யா பாஸ்கரன் அறந்தாங்கி நிஷா, படவா கோபி, ஆதித்யா கதிர், ஜெயஸ்மித்ரா, ஷர்மிதா சாம், யோகிராம், ஓஏகே சுந்தர், மகாநதி சங்கர் ,வேல் அருணாச்சலம், நிரஞ்சன் மோசஸ் , ஷோபன் பாபு ,அசோக் பாண்டியன் என ஏராளமான நடிப்புக் கலைஞர்கள் வருகிறார்கள். அவரவர்களுக்கான துணைக் கதாபாத்திரங்களில் பதிகிறார்கள் .
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் எஸ், கண்களை விரிய வைக்கும் பெரிய கேன்வாஸில் இந்த ஆக்சன் படத்தை வரைந்து இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.காட்சிகளை அதன் பின்புலத்தை சமகாலத் தமிழ் சினிமாவில் பட்ஜெட்டைத் தாண்டி வெளிப்படுத்தியுள்ளார்.
தடதடக்கும் தோட்டாக்கள் தெறிக்கும் பரபரப்பாள ஆக்ஷன் களத்தை எப்படி கேமராவின் பிரேமுக்குள் அடக்கினார் என்பது ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது .இவரது காட்சிகளை விஷூவல் எஃபெக்ட்ஸ் குழுவினர் பல இடங்களில் மேம்படுத்தி அதைப் பிரமாண்டமாக்கி இருக்கிறார்கள்.முதல் பாதியில் சற்றும் தொய்வில்லாமல் படத்தைத் தொகுத்து இருக்கும் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், இரண்டாம் பாதியில் சற்று ஆசுவாசமாகி இருக்கிறார்.எனவே காட்சியின் நீளங்களை உணர முடிகிறது.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒலிக்கின்றன .காட்சிகளின் பிரம்மாண்டம் பாடல்களைப் பின் தள்ளிவிடுகின்றன.இருந்தாலும் ‘முத்தைத்தரு’ முருகன் பாடல் ஒலிக்கும்போது சிலிர்ப்பு வருகிறது.பின்னணி இசையிலும் படத்தின் உயரத்துக்கு உதவியுள்ளார்.
கதை சோன்புரி துறைமுகம் தாய்லாந்து தூத்துக்குடி எலார்ஜியா என்று வட்டமடிக்கிறது,அது சார்ந்த பின்புலங்கள் தனி அனுபவங்கள். வந்தே பாரத் ரயில் தொடங்கி வெளிநாடு வரை பறக்கும் சண்டைக் காட்சிகளைச் சிறப்பாகவே வடிவமைத்திருக்கிறார் ஆக்ஷன் இயக்குநர் மகேஷ் மேத்யூ. சில இடங்களில் நாம் பார்ப்பது தமிழ்ப் படம்தானா என்கிற உணர்வை ஏற்படுத்துகின்றன மிரட்டலான காட்சிகள்
மகளுக்கான தந்தையின் போராட்டம், தனக்கு இடப்பட்ட மிஷனை முடிக்க நினைக்கும் லீடரின் வீரதீரம் என இந்த ஆக்ஷன் படத்தை அட்டகாசமாக விரித்துக் களப்படுத்தியுள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார்.
அமைதியாக இருக்கும் ஒரு நாயகனின் பின்புலம் கூறும் கதை என்பது பழைய சட்டகம் என்றாலும்கதை நிகழும் பின்புலம் சுற்றி இயங்கும் சுவாரசியமான பாத்திர வடிவமைப்புகள் என்று வேறு திசையில் கதை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.இது படம் பார்ப்பவர்களுக்கு எதிர்பாராத விருந்தாக அமைந்துள்ளது..
இரண்டாவது பாதியில் ஆக்சன் காட்சிகள் சற்று நீளமாக இருந்தாலும் அதைப் புறந்தள்ளி விட்டு ரசிக்க வைக்கும் வகையில் பிரம்மாண்டம் அமைந்துள்ளது.
முதல் பாதியில் சரவணன் ஏற்றுள்ள சக்திவேல் பாத்திரம் ஒரு சாதாரண கார் மெக்கானிக் போல் இருந்தாலும்
இரண்டாவது பாதியில் அவர் யார் ? அவர் எப்படிப்பட்ட லீடர் ?, அவரின் பின் புலக்கதை என்ன? போன்ற கேள்விகளுக்கு ஆக்சன் திருவிழாவில் உட்கார வைத்துப் பதில் கூறுகிறார் இயக்குநர்.சரவணன் நடத்தும் சாகசப் பயணங்கள் லாஜிக்கை மறந்து அடடே போட வைக்கின்றன.
’12 மேன் ஸ்குவாட்’, அதிரடி உளவாளிக்குழு என இயக்குநர் கூறியிருக்கும் விஷயங்கள் என நாம் தர்க்கங்களை யோசிப்பதற்கு முன் காட்சிகள் பரபரப்பாகி ஈர்த்து விடுகின்றன .
ஒரே நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் பல்வேறு திருப்பங்களுடன் இரண்டாவது பாதியில் பல்வேறு முடிச்சுகளைப்போட்டுப் பின்னர் அவற்றை அவிழ்த்து ஒரு வணிகப்படத்தில் முழு திரையரங்கு அனுபவத்தை க. கொடுத்துள்ளார் இயக்குநர் செந்தில் குமார்.
அந்த வகையில் புதுமையும் சஸ்பென்சும் ஆக்சன் காட்சிகளும் கொண்ட ஆக்சன் விருந்தாக மாற்றி உள்ளார் இயக்குநர் .ஓர் வணிகப் படத்திற்கு அதன் பிரம்மாண்டத்திற்கான அனைத்து சாத்தியங்களுக்கும் தனது பட்ஜெட்டில் சுதந்திர இடம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்த வகையில் ஒரு தயாரிப்பாளராகவும் லெஜெண்ட் சரவணன் உயர்ந்து நிற்கிறார்.
மொத்தத்தில் இந்த ’லீடர்’ வெற்றி மைதானத்தில் களமாடுவார்.
ரேட்டிங் : 4/5


