பாரம்பரியம் மிக்க தமிழ் நாடக உலகம், சினிமாவின் வருகைக்குப் பிறகு தனது பொலிவை இழந்து விட்டது. ஆனால் சினிமாவை கண்டுபிடித்த ஹாலிவுட் படவுலகில் இன்றளவும் நாடகங்களுக்கு என தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. தமிழ் நாடக உலகில் விழுந்து விட்ட இடைவெளியை நிரப்பும் நோக்கிலும், சர்வதேச தரத்தில் நாடகங்களை மேடையேற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் புனித பிரிட்டோ நாடக அகாடெமி.
சென்னை ஆதம்பாக்கத்தில் இயங்கி வரும் இந்த அகாடெமி இத்தகையை சீரிய நோக்கத்தோடு நடத்தி வருபவர் இதன் நிர்வாக இயக்குநர் விமலா பிரிட்டோ. 5 ஆயிரம் வருடங்கள் பாரம்பரியம் மிக்க இந்தியாவின் நாடகக் கலையை இளைய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே தங்களின் தலையாய நோக்கம் என்று கூறுகிறார் விமலா பிரிட்டோ. இந்திய கலைகள் மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து பேணி பாதுகாக்க வேண்டும் என்பதும் இன்றைய காலகட்டத்தின் தேவை என்கிறார் இவர்..
17 ஆண்டுகளுக்கு முன்னர் 30 மாணவர்களுடன் துவங்கிய இந்த புனித பிரிட்டோ நாடக அகாடெமி கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்து 600 மாணவர்களை பயிற்றுவித்துள்ளது என்பது எத்தகைய ஒரு இமாலய சாதனை.. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்போடு நாடக கலைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது புனித பிரிட்டோ நாடக அகாடெமி..
ஒரு நாடக அகாடெமிக்கு என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமோ அத்தகைய அம்சங்கள் அனைத்தும் இங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒலிப்பதிவு கூடம், பின்னணி குரல் சேர்ப்புக் கூடம், படத்தொகுப்பு, ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரம், நாடகங்களுக்கு தேவையான அரங்க பொருட்கள் இவை அனைத்திற்கும் மேலாக 750 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய குளிர்சாதன வசதியுடன் கூடிய மாபெரும் ஆடிட்டோரியம் இதன் தனிச்சிறப்புகள்..
இந்த ஆண்டு 2 நாடகங்களை மேடையேற்றி உள்ளார் புனித பிரிட்டோ நாடக அகாடெமியின் நிர்வாக இயக்குநர் விமலா பிரிட்டோ. ஒன்று வரலாற்று எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ராஜ பேரிகை நாவலை தழுவி தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் நாடகம் அரங்கேறுகிறது. மற்றொன்று அன்பின் சிறகுகள் என்ற ஆங்கில நாடகம்.. 8 முதல் 20 வயது வரையிலான மாணவர்கள் 600 பேர் இந்த இரண்டு நாடகங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 29-ந் தேதி வியாழக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் புனித பிரிட்டோ நாடக அகாடெமி அரங்கேற்றிய ராஜபேரிகை நாடகத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஷால் துவக்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற நாடகத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யுடிவி தனஞ்செயன் ஆகியோர் கண்டு களித்தனர். 30-ந் தேதி வெள்ளியன்றும், 31-ந் தேதி சனிக்கிழமையன்றும் பிற்பகல் மற்றும் மாலையில் நாடகங்கள் நடைபெற உள்ளன.