‘இன்கார் ‘விமர்சனம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ரத்தமும் சதையுமாக வலியும் வேதனையுமாக சொல்கிற கதை.

ரித்திகா சிங், சந்திப் கோயட், மனிஷ் ஜஞ்சாலியா, கியான் பிரகாஷ் நடித்துள்ளனர். இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சஜித் குரேஷி தயாரித்துள்ளனர். இசை மத்தியாஸ் டுப்லஸ்ஸி, எடிட்டிங் மாணிக் தி வார். இப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈஞானவேல் ராஜா வெளியிட்டுள்ளார்.


ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.இந்தப் புள்ளி விவரத்தை எட்டாமல் மேலும் அநியாயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை ஆரம்பப் புள்ளியாக வைத்துத் தொடங்குகிறது கதை.

‘இன்கார்’ என்கிற இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் ஹர்ஷ் வர்தன்.

கூப்பிடு தூரத்தில், பெண் போலீஸ் உட்கார்ந்திருக்க, நொடிப்பொழுதில் ஓர் இளம் பெண் பஸ் ஸ்டாப்பில் கடத்தப்படுகிறாள்.அவள் பெயர் சாக்ஷி குலாட்டி . பட்டப் பகலில் அது கடத்தல் தான் என்று உணர்வில் பதியும் முன் கார் பறக்கிறது.அவள் செல்கிற காரும் கடத்தப்பட்டது தான்.

பின் இருக்கையில், அவள் இருக்க, அவளது இரு பக்கமும் கடத்தல்கார இளம்வயது சகோதரர்கள் இருவர், முன் இருக்கையில் அவரது மாமாவும் அமர்ந்துள்ளனர். படத்தின் கதை, அதன் பின் காருக்குள்ளேயே நிகழ்கிறது.

கடத்தப்படும் பெண்ணின் மன வேதனையைப் பிரதிபலிக்கவே முழுப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

‘கோழியோட கழுத்தை அதை சமைக்கிறதுக்கு முன்னாடி வெட்டி எறிஞ்சிடுவாங்க.ஆனா பொண்ணுக்கு வேலை முடிஞ்சதும் வெட்டுவோம்’ என்று அவர்கள் பேசிக் கொள்வது கொடூரத்தின் உச்சம்.அதுமட்டுமல்ல அவர்கள் பேசுவதும் பெண்ணை ஒரு போகப் பொருளாக பாவிக்கும் அந்த சிந்தனையும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் செயல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நொடியும் சாக்ஷிக்கு ஏற்படும் மன உளைச்சலும், பதற்றமும், பயமும் பார்ப்பவர்களை பதற வைப்பவை.

முழுப் படமும், காருக்குள்ளேயே ஒரே மாதிரியான வலியுடன் நகர்வது பார்வையாளர்களுக்கு இறுக்கத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
ஐயோ இது தமிழ்நாட்டின் நிகழவில்லை என்கிற மன நிம்மதி கிடைக்கிறது. ஏனென்றால், ஹரியானாவில் தான் கதை நிகழ்வதாக அறிய முடிகிறது.

சாக்‌ஷி குலாட்டியாக, இறுதிச்சுற்று படத்தில் நடித்த தேசிய விருது பெற்ற நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். கத்திக் கத்தி, ஓய்ந்து, அவஸ்தையுடன் காமக்கொடூரன்களின் நடுவில் அமர்ந்திருக்கும்போது வலியை அழகாக நடிப்பில் காட்டியுள்ளார்.

காருக்குள் முழுப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் என்கிற ஒரு விஷயத்தை சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் முழுப் படமாக அதை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது இந்தப் பட குழு. இயக்குநர் ஹர்ஷ் வர்தன் மற்றும் ஒளிப்பதிவாளர் மிதுன் கங்கோ பாத்தியாய் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப பணியை செய்திருப்பதாகச் சொல்லலாம். குறிப்பாக ஒளிப்பதிவாளர் பல காட்சிகள் காருக்குள் நடப்பது போல் இருந்தாலும், அவற்றை பல்வேறு கோணங்கள் மூலம் காட்சிப்படுத்தி போரடிக்காமல் காட்சிகளை நகர்த்தி செல்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக, இப்படியான பாலியல் துன்பத்துக்கும் சுரண்டலுக்கும் ஆளாகும் ஆணோ, பெண்ணோ அத்தனை சீக்கிரம் அந்த மன நெருக்கடியில் இருந்து வெளிவர முடியாது என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது இந்தப் படம்.

80 மற்றும் 90களில் பாலிவுட்டில் இது மாதிரி கற்பழிப்பு சம்பந்தப்பட்ட கதைகள் பல வந்துள்ளன.அப்படிப்பட்ட ஒரு பழைய கதையம்சத்தை எடுத்து ‘காருக்குள்’ என்கிற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு படமாக்கினால் இந்தப் படத்தை கவனப்படுத்த முடியும் என்று நினைத்துப் படமாக்கியுள்ளார்கள். அதனால் ஒரு சிறு நூல் இழை கதையாக படம் சுருங்கி விடுகிறது.கடத்தப்பட்டவர்களிடமிருந்து அவள் தப்பித்தாளா? இல்லையா? என்ற ஒரே ஒருவரிக் கதையாகப் படம் மாறிவிடுகிறது. காருக்குள் என்பதால் கதை சிறைப் பட்டு விடுகிறது.ஒரு கட்டத்தில் சலிப்பாக மாறிவிடுகிறது.

படம் சொல்லும் செய்தி உள்ளதா? எங்கோ ஒரு கூக்குரல் கேட்டால் அலறல் சத்தம் கேட்டால் ஒதுங்கிப் போகாமல் கவனித்து அவர்களும் இந்தச் சமுதாயத்தில் ஒருவர் தான் என்கிற சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும் என்று படம் சொல்லாமல் சொல்கிறது.