‘அயோத்தி ‘விமர்சனம்

சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி, அஞ்சு அஸ்ராணி, யஷ்பால் சர்மா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மந்திரமூர்த்தி இயக்கி உள்ளார் .என். ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ட்ரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஊர் விட்டு ஊர் வந்து இறந்து போன ஒரு பெண்ணின் உடலை அவளது குடும்பத்தின் விருப்பத்தின்படி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஒரு மனிதாபிமானமுள்ள மனிதனின் கதை தான் ‘அயோத்தி’.

தனது மனைவி,மகள், மகன் என குடும்பத்துடன் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருகிறார் யஷ்பால் வர்மா.அவர் ஒரு தீவிரமான ராம பக்தர்; முரட்டுத்தனமான பிடிவாதமான குணம் கொண்டவர். அவரது குணத்தால் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அவர்கள் செல்லும் வாடகைக் கார் விபத்துக்குள்ளாகிறது.விபத்தில் மனைவி பலத்த காயத்துடன் மரணம் அடைகிறார். ஊருக்கு திரும்பி செல்ல முடியாத சூழ்நிலை. அன்று இரவு மட்டுமே ஒரு விமானம் காசிக்கு செல்ல உள்ள நிலையில் தனது மனைவியை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று தகராறு செய்கிறார்.அது தங்களுக்கு கலாச்சாரத்திற்கு விரோதமானது என்று கூறுகிறார்.ஆனால் போஸ்ட்மார்ட்டம் செய்தாக வேண்டும் என்கிற நிலை வருகிறது. சசிகுமார் இறந்து போன பெண்மணியின் உடலை காசிக்கு அனுப்பி வைக்க செயலில் இறங்குகிறார். ஆனால் அது அவ்வளவு சுலபமாக நடைபெறவில்லை .அதற்காக பல பிரச்சினைகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கிறது. அதை எல்லாம் எதிர்கொண்டு இறந்த பெண்ணின் உடல் அயோத்திக்கு நல்ல முறையில் போய்ச் சேர்ந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு மரணத்திற்குப் பின் மனித மனம் எப்படி மாறுகிறது என்பதைக் காட்டி உள்ளார் இயக்குநர் . யஷ்பால் சர்மாவின் மனைவியின் இறப்பு அவரை பெரிதாக மாற்றுகிறது.ஒரு மனிதன் மதங்களைக் கடந்து ஒரு மனிதனாக எப்படி நடந்து கொண்டு பிறருக்கு உதவி செய்ய முடியும் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இன்று சமூகத்தில் ஜாதி மத பிளவுகள் செய்வதற்கு பல கும்பல்கள் தொழிலாக இறங்கி உள்ளன. இந்த நேரத்தில் இப்படி சமூகத்திற்குத் தேவையான நெகிழ்வூட்டும் ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர்.அதற்காக இயக்குநர் மந்திர மூர்த்தியைப் பாராட்டலாம்.

கதையின் நாயகனாக வரும் சசிகுமாருக்கு இந்தப் படத்தில் ஜோடி யாரும் இல்லை .சமீப காலமாக அவருக்கு சரியான படங்கள் அமையாமல் வெற்றிகள் தவறிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தைரியமாக ஒரு முடிவு எடுத்து தனி ஒரு நாயகனாக கதை நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த பாத்திரத்தில் மீது அவர் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இப்படம் நிச்சயம் அவருக்கு ஒரு பெயர் சொல்லும் படமாக உள்ளது.

இந்தப் படத்தில் நிறைய பாத்திரங்கள் இந்தி பேசுவது தான் சற்று ரசிகர்களை திணறடிக்கிறது. இருந்தாலும் மொழிகளைக் கடந்து அவர்கள் உடல் மொழிகள் மூலம் பாத்திரங்களை ரசிக்கிறோம்.

முரட்டுத்தனமான மூர்க்கமான குணம் கொண்ட யஷ்பால் சர்மாவின் நடிப்பும் , அவரது மகளான பிரீத்தி அஸ்ரானியின் உணர்வு பூர்வமான நடிப்பும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.மொழி கடந்து அவர்களை ரசிக்க வைப்பது அந்த குணச்சித்திரங்கள் செய்திருக்கும் வெற்றி.

சசிகுமாரின் நண்பனாக புகழ் வருகிறார் .அவருக்கு இதில் ஒரு முழு நீள வேடம் கொடுத்திருக்கிறார்கள். போஸ் வெங்கட், கல்லூரி வினோத், வின்னர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட சிறிய வேடங்கள் ஆனாலும் மனதில் பதிகிறார்கள்.
காசி முதல் ராமேஸ்வரம் என்கிற பயணத்தை ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் மிகவும் நேர்த்தியாகப் படமாக்கி இருக்கிறார்.நாமும் உடன் பயணிக்கும் உணர்வைத் தருகின்றன காட்சிகள்.

என். ஆர் .ரகுநந்தனின் பின்னணி இசை படத்தில் உயிர்ப்புடன் பயணிக்கிறது. இந்த படத்திற்கு பாடலே தேவையில்லை .அந்த அளவுக்கு உணர்ச்சிபூர்வமான கதை இருக்கும்போது வரும் பாடல்கள் வேகத்தடை தான்.

ஒரே நாளில் நடக்கும் கதையாக இதை விறுவிறுப்பாகவும் நெகிழ்வூட்டும் விதத்திலும் உருவாக்கி இருக்கிறார்கள். மதம் கடந்த மனிதத்தை பேசுகிறது இந்த ‘அயோத்தி’.இந்தப் படம் காலத்திற்கு தேவையான படைப்பாகும்.