என்னுடைய பட விழாக்களுக்கு என் அப்பாவை அழைக்க மாட்டேன்: ‘கொன்றால் பாவம்’ ’ பட நிகழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார் !

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவின் பிரபல இயக்குநரான தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொன்றால் பாவம்’ படத்தை ஐந்பேஃக் ஸ்டுடியோஸ் சார்பில் ப்ரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

வரும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கொன்றால் பாவம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் பேசுகையில், “வரலட்சுமி நடிக்க வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வெளிநாட்டில் படித்தவருக்கு எதற்கு நடிப்பு என்று நான் யோசித்தேன். ஆனால், அவர் தான் ஒரு படம் மட்டும் நடிக்கிறேன், என்று பிடிவாதமாக இருந்தார். பிறகு அனுபம்கேர் திரைப்பள்ளியில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். இன்று அவரை நல்ல நடிகையாகப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்னை அழைத்து ‘வீரசிம்மா ரெட்டி’ படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டினார். அதில் வரலட்சுமி நடிப்பை பார்த்துவிட்டு நான் கண் கலங்கிவிட்டேன். வெளியாகாத ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு படக்குழு காட்டுகிறது என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்று எனக்கு புரிந்தது.

வரலட்சுமி இந்த இடத்திற்கு வந்ததற்கு அவர் மட்டுமே காரணம். அவரது உழைப்பு, விடா முயற்சி தான் காரணம். நான் அவருக்கு சினிமாவில் எதையும் செய்யவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வந்திருக்கிறேன். அவர் பல படங்களில் நடித்திருக்கிறார், அந்த நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பார்கள். ஆனால், வரலட்சுமி போன் செய்து டாடி வராதீங்க என்று சொல்லிவிடுவார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அவர் என்னை அழைத்ததுடன் மட்டும் இல்லாமல் தினமும் போன் செய்து நினைவுப்படுத்தினார். இன்றும் காலை முதல் கிளம்பிட்டீங்களா, எங்கு இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டு இருந்தார். அப்படியான இந்த படம் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது.

அவரை விஜயசாந்தி என்று சொன்னார்கள். அவர் படத்தில் அப்படி நடிக்கவில்லை, நிஜ வாழ்க்கையிலும் அவர் விஜயசாந்தி தான். பெசண்ட் நகரில் வரலட்சுமி ஏதோ பிரச்சனை, போலீஸ் வந்திருக்கிறது என்று எனக்கு போன் வந்தது. அங்கிருக்கும் நண்பர்களை விசாரிக்க சொன்ன போது, வரலட்சுமி அடித்துவிட்டார் என்று சொன்னார்கள். அவருடைய போன் திருட்டு போனபோது கூட, விரட்டி சென்று பிடித்து அடிதடியில் ஈடுபட்டார். அதனால் வரலட்சுமி திரையில் மட்டும் அதிரடி காட்ட மாட்டார் நிஜத்திலும் காட்டுவார்.

இன்று சோசியல் மீடியாவின் வளர்ச்சி அதிகரித்து விட்டது. அதனால் படத்தை பார்க்காமல் சிலர் எங்கேயோ இருந்து கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுடைய விமர்சனங்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. மக்கள் சொல்வது தான் இறுதி தீர்ப்பு. ஒரு படம் சிலருக்கு பிடிக்காது, பலருக்கு பிடிக்கும். சூர்ய வம்சம் படத்தை பார்த்துவிட்டு, ஒருவர் என்னிடம் “என்ன இப்படிப்பட்ட படத்தை எடுத்திருக்கீங்களே” என்றார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது தான் மக்கள் தீர்ப்பு. அதே சமயம், விமர்சனம் செய்ய கூடாது என்று சொல்லவில்லை. இங்கு அனைவருக்கும் பேச, எழுத உரிமை இருக்கிறது. அதனால் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.

‘கொன்றால் பாவம்’ டிரைலர் பார்த்தேன் ஈர்ப்பாக இருந்தது. நடிகர்களின் நடிப்பு, செழியனின் ஒளிப்பதிவு, சாம் சிஎஸ் இசை என அனைத்துமே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. நிச்சயம் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த படத்தை நான் சிறப்பு காட்சியில் பார்க்க மாட்டேன். திரையரங்கில் மக்களோடு மக்களாக சேர்ந்து பார்த்துவிட்டு, என் இணைய பக்கத்தில் படம் எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன். நன்றி” என்றார்.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், ”இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன், சாம் சிஎஸ் இசை மிரட்டலாக இருந்ததோடு, பிரமிக்க வைத்தது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சி மிக சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குநர் தயாள் பத்மநாபனுக்கும் எனக்கும் நீண்ட வருட நட்பு இருக்கிறது. எனுடைய திருடா திருடி படத்தை கன்னடத்தில் அவர் தான் இயக்கினார். அவருடைய இந்த படத்தை கன்னடத்தில் பார்த்தவுடன் நான் தமிழில் இயக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது முடியாமல் போய்விட்டாது. இப்போது அவரே இந்த படத்தை இயக்கி விட்டார். அவர் கடுமையான உழைப்பாளி மட்டும் அல்ல வேகமாக செயல்பட கூடியவர். இந்த படத்தை மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

மனிதர்களின் ஆசையை பற்றிய படம் தான் ‘கொன்றால் பாவம்’. ஆசை என்றால் என்ன? ஒன்றின் மீது நாம் அசைப்பாடு, அது கிடைத்தவுடன் அதை பயன்படுத்திவிட்டு வேறு ஒன்றின் மீது நம் ஆர்வத்தை தூண்டும் அல்லவா, அது தான் ஆசை என்று புலவர் கீரா சொல்கிறார். புத்தரும் அப்படித்தான் ஆசைகளை திறந்தார். மற்ற சாமியார்கள் அவர்களுக்காக சாமியார் ஆனார்கள், ஆனால் புத்தர் மட்டும் தான் மக்களுக்காக சாமியார் ஆனார். இதுபோன்ற கருத்துக்களை சுற்றி இந்த படத்தின் கதை, திரைக்கதை அமைந்திருந்தாலும் மக்களை வியக்க வைக்கும் ஒரு படமாக இருக்கும்.

ஒரு படத்தை பார்த்துவிட்டு கைதட்டிவிட்டு போவது தாக்கம் அல்ல, அந்த படம் நம்மை சில மணி நேரங்கள் யோசிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு படம் தான் ‘கொன்றால் பாவம்’. இந்த படத்தை பார்த்த பிறகு இயக்குநர்கள் எப்படி இப்படி ஒரு திரைக்கதை எழுத முடிந்தது? என்று யோசிப்பார்கள். படம் பார்க்கும் ரசிகர்களும் படம் முடிந்த பிறகு சில நிமிடங்கள் யோசிப்பார்கள், அப்படி ஒரு படமாக இந்த படம் இருக்கும். இந்த படம் நிச்சயம் ஒரு வித்தியாசமான படமாக மட்டும் இன்றி மக்களை வியக்க வைக்க படமாக இருக்கும். வரலட்சுமி சரத்குமாரை தவிர வேறு யாராலும் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு அவர் நடித்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பிற மொழிகளிலும் வரலட்சுமிக்கு பெரிய கதவை திறக்கும். சந்தோஷ் பிரதாப்பின் அமைதி, அவருக்கு பெரிய பலம். சார்லி சார், ஈஸ்வரி ராவ் மேடம் என அனைவரும் மிரட்டியிருக்கிறார்கள். நடிகர்களின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், “என்னுடைய பட விழாக்களுக்கு என் அப்பாவை அழைக்க மாட்டேன், ஆனால் இந்த படத்துக்கு அழைத்திருக்கிறேன் என்றால் இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்பதால் தான். இந்த படம் எனக்கு ரீ எண்ட்ரி என்று சொல்ல முடியாது, ஆனால் என் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் படமாகவும், ஒரு நடிகையாக எனக்கு முழு திருப்தி கொடுத்த படமாகவும் இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்ட போதும், நடிக்கும் போதும், டப்பிங் பேசிய போதும் நான் உற்சாகமாக இருந்தேன், காரணம் படத்தின் கதை. இதில் நான், சந்தோஷ், சார்லி சார், ஈஸ்வரி மேடம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறோம், எங்க நான்கு பேருக்கு இடையில் கதை நடக்கும், எங்களுடைய நடிப்பு தான் இந்த படத்தின் கதை என்றும் சொல்லலாம்.

இப்படி ஒரு சிறந்த படத்தை எனக்கு கொடுத்ததற்காக இயக்குநர் தயாள் சாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். சாம் சிஎஸின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம் கொடுத்த சிறப்பான இசை இது தான் என்று சொல்வேன். இந்த படத்தின் இசையை கேட்கும் போதெல்லாம் எனக்கு மெய்சிலிர்க்கிறது. செழியன் சாரும் நானும் தாரை தப்பட்டை படத்தில் சுமார் 7 மாதங்கள் பணியாற்றியிருக்கிறோம். அவரும் நானும் நிறைய பேசி இருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்தவர், அவருடைய ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

ஒரு நடிகை எப்படிப்பட்ட படத்தை எதிர்பார்ப்பாரோ அப்படி ஒரு படம் தான் ‘கொன்றால் பாவம்’. இயக்குநர் தயாள் சாருக்கு தமிழில் இது முதல் படம் என்றாலும், கனனத்தில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்பார். 14 நாட்களில் இந்த படத்தை முடித்தாலும், அதற்காக அவர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் தயாள் பதம்நாபன் பேசுகையில், “கன்னட சினிமாவில் பல வெற்றி படங்களை எடுத்தாலும், என் தாய் மொழியான தமிழில் இயக்குநராக அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் சிறந்த படத்துடன் தான் அறிமுகமாக வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு படம் தான் ‘கொன்றால் பாவம்’. சர்வதேச அளவிலான ஒரு நாவலை தழுவி எழுதபட்ட நாடகத்தின் உரிமையை பெற்று தான் இந்த படத்தை கன்னடத்தில் இயக்கினேன். அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, மாநில விருதும் எனக்கு கிடைத்தது. அப்போதே இந்த படத்தை தமிழில் இயக்க பலர் விருப்பம் தெரிவித்தார்கள். பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு எடுக்கும் வேலை நடந்தது, ஆனால் அது முடியாமல் போனதால் தெலுங்கில் மட்டும் இயக்கினேன், அங்கும் பெரிய வெற்றி பெற்றது.

பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழில் இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார்கள். ஆனால், அவர்களால் கதையில் எதாவது மாற்றம் நிகழ்ந்திடுமோ என்ற பயத்தால் தான் நான் அவர்களுடன் இணையாமல் இருந்தேன். அப்போது தன் என் உறவினர்களான ப்ரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமாரிடம் இந்த படம் பற்றி சொன்னேன். அவர்கள் உடனே என்னுடைய திட்டத்தை கேட்டு படம் தயாரிக்க முன் வந்தார்கள். இந்த படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிதாக பேசப்படும். அவர் கதைக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். சந்தோஷ், சார்லி, ஈஸ்வரி ராவ் மட்டும் இன்றி படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்திருக்கும் மனோ பாலா, செண்ட்ராயன் போன்றவர்களும் கவனம் பெறுவார்கள்.

நீதிக்கதைகள் அல்லது மெசஜ் சொன்னால் கூட அதை கமர்ஷியலாக ரசிகர்களுக்கு பித்தது போல் சொல்ல வேண்டும். அப்படி ஒரு படமகத்தான் ‘கொன்றால் பாவம்’ இருக்கும். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் ரசிர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அதுவெல்லாம் இந்த படத்தில் இருக்காது. ஆனால், நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் உங்களை வியக்க வைக்கும் வகையில் இந்த படத்தில் இருக்கும். எ‘கொன்றால் பாவம்’ படத்தை மக்களும் ஊடங்களும் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.