இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி உருவாகியுள்ள படம் டார்லிங். இது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதாசித்ரம்’ படத்தின் ரீமேக்.
ஜி.வி.பிரகாஷுடன், சிருஷ்டி, நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன் நடித்துள்ளனர். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அல்லுஅரவிந்தின் கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.பொங்கலுக்கு ‘டார்லிங்’ வெளிவரவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பேசும் போது
“பெரிய படங்களாகத்தான் ஸ்டுடியோ க்ரீன் எடுக்கிறது என்று பேசப்பட்டபோது நல்ல சிறிய படங்களையும் வாங்கி வெளியிடுவது என்று முடிவெடுத்தோம். அப்படி நாங்கள் வெளியிட்ட படம்தான் ‘அட்டகத்தி’ .எங்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால் நண்பர்களில் சிலருக்குத்தான் பிடித்து இருந்தது- பலரும் பலமாதிரி பேசினார்கள். வாங்கியாகி விட்டது. என்ன செய்வது வெளியிட்டு விடு.. இனி இந்த விநியோகம் வேலை என்று செய்யாதே என்றார்கள். ஆனால் நாங்கள் விடவில்லை. படத்தை ரஜினி படம் அளவுக்கு முயற்சி செய்து விளம்பரங்கள் செய்தோம். இருந்தாலும் சிறு பயம் இருந்தது. தியேட்டர் விசிட் செய்தோம் ஆல்பர்ட், சங்கம், அபிராமி.. எங்கு பார்த்தாலும் ரசித்தார்கள். படம் பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் வசூல் செய்தது. அந்தப் படத்தில் பல திறமைசாலிகள் கொட்டிக் கிடந்தார்கள். அதே இயக்குநர் ரஞ்சித்தை வைத்து ‘மெட்ராஸ்’ எடுத்து அதுவும் வெற்றி பெற்றது.
‘டார்லிங்’ படம் தெலுங்கை விட 15 மடங்கு நன்றாக வந்துள்ளது. படத்துக்கு தலைப்பு கிடைப்பதே பெரிய சிரமமாக இருக்கிறது. கதை கூட பிடித்து விடலாம். போலிருக்கிறது. தலைப்பு கிடைப்பதில்லை. எந்த தலைப்பு எடுத்தாலும் யாராவது பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள் எதைக் கேட்டாலும் அது5 வருஷத்துக்கு முன்பே, 6 வருஷத்துக்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்திலோ, தயாரிப்பாளர் கில்டிலோ பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் .குறிப்பிட்ட ஆண்டு வரை பதிவு செய்துவிட்டு படமெடுக்கவில்லை என்றால் அதை ரத்து செய்ய வேண்டும்
மீண்டும் தெலுங்கிலிருந்து ‘ரன் ராஜா ரன்’ படத்தை தமிழில் எடுக்க இருக்கிறோம். தமிழிலும் கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ ,சூர்யா சாரின் ‘மாஸ்’ படங்களைத் தயாரிக்கிறோம்.ஸ்டுடியோ க்ரீன் சிறு பட்ஜெட் படங்களையும் தயாரிக்கும்.” என்றார்.
“பென்சில்’ படம் 3 மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சலித்து தாடி விட்டிருந்தேன். என் தாடியைப் பார்த்து இப்பட வாய்ப்பு வந்தது ” என்ற ஜி.வி.பிரகாஷிடம் இனி இசையமைக்க மாட்டீர்களா என்ற போது, ” இசையை என்றும் விடமாட்டேன் இப்போது கூட ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் 10 படங்கள் இசையமைக்கிறேன். டார்லிங் ட்ரெய்லரை ஏ.ஆர்.ரகுமான் சார் ட்வீட் செய்ததில் இந்திய அளவில் ட்ரண்டிங்கில் முன்னணியில் இருந்தது.” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் சாம் ஆண்டன். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் பாடலாசிரியர்கள் நா:முத்துக்குமார், அருண்ராஜா, நடிகர் கருணாஸ், நாயகி சிருஷ்டி நடன இயக்குநர் காதல் கந்தாஸ் ஆகியோரும் பேசினார்கள்.