‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4

film-news-anandanrs‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-4

எம்.ஜி.ஆர்.தன்னை பி.ஆர்.ஒ ஆக்கிய அனுபவம் பற்றி இங்கே  கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்.

 

என்னை பி.ஆர்.ஓ.ஆக்கியவர் எம்.ஜி.ஆர்.தான்!

அப்போதெல்லாம் பி.ஆர்.ஒ. என்கிற தொழிலே இல்லை. பப்ளிசிட்டி டிபார்ட்மெண்ட் என்கிற விளம்பர நிறுவனம்தான் படம் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளுக்குக் கொடுக்கும்.

படம்  பற்றி எதுவாக இருந்தாலும் இப்படிப்பட்ட விளம்பர ஏஜென்சி மூலம்தான் செய்தியே வெளியே வரும். வழக்கமாக எம்.ஜி.ஆர்.நடிக்கும் படங்களின் பப்ளிசிடி பொறுப்பையும் ஒரு விளம்பர ஏஜென்சி நிறுவனம்தான் கவனித்து வந்தது.

ஏனென்றால் மக்கள் தொடர்பு , பி.ஆர்.ஓ.என்கிற வேலை, தொழிலே அப்போது கிடையாது. அவர்கள் விளம்பரங்கள் தருகிற பத்திரிகைகளுக்கு மட்டுமே படங்கள் பற்றிய செய்திகள் படங்கள் தருவார்கள். பிற பத்திரிகைகளுக்கு தரமாட்டார்கள்.

எனக்கு எல்லாப் பத்திரிகையாளர்களிடமும் பழக்கம் இருந்தது.
எல்லா பத்திரிகையாளர்களும் என் நண்பர்கள்தான்.

நான் இதை மாற்ற விரும்பினேன்.எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்திற்கு இதை கொண்டுவர விரும்பினேன்.

முதல் நாள் விளம்பர ஏஜென்சி தரும் செய்திகள் படங்களை நான் தரட்டுமா என்று ஆர்.எம்.வீயிடம் கேட்டேன். யார் தந்தால் என்ன செய்யுங்களேன் என்றார் அவர்.எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்திற்கு எனக்கு இந்த வேலையைச் செய்யும் பொறுப்பு கிடைத்தது..

வழக்கத்துக்கு மாறாக எல்லா சினிமா பத்திரிகைகள், விமர்சனம் எழுதுகிறவர்கள், தமிழ் மட்டுமல்ல தெலுங்கு பத்திரிகைகள் என்று கணக்கில் சேர்த்து 25 செட் படங்கள் செய்திகள் தயார்செய்து எல்லாருக்கும் போய் கொடுத்தேன். வழக்கம் போலல்லாமல் சிறப்புத்தகவல், உபரித் தகவல் எல்லாமும் சேர்த்துக் கொடுத்தேன்.
படங்கள் பற்றிய செய்திகள், படங்களை பத்திரிகைகளுக்கு கொடுத்துது போன்ற வேலைகளை விருப்பமாகச் செய்து வந்தேன்.  முழுமூச்சுடன் அதில் எந்த அளவுக்கு முழுமையாக நேர்த்தியாக செய்யமுடியுமோ அந்த அளவுக்குச் செய்தேன்.

அடுத்த வெள்ளிக் கிழமை எல்லாவற்றிலும் வந்திருந்தது. இதைஎல்லாம் பார்த்து எம்.ஜி.ஆர். பெரிய சந்தோஷப்பட்டார். யார் வேலை இது? இவ்வளவு பிரமாதப் படுத்தியது ?என்று வீரப்பனைக் கேட்டாராம்  ஆனந்தன் என்று ஆர்.எம்.வீ  சொல்லியிருக்கிறார். மறுநாள் எம்.ஜி.ஆர் என்னை  அழைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் இனி  படத்துக்கு யார் விளம்பர ஏஜென்சியாக (அப்போதல்லாம். விளம்பர ஏஜென்சி மூலம்தான் படச்செய்தியே வெளியே வரும் அல்லவா?) இருந்தாலும் சரி பத்திரிகைகளுக்கு செய்திகள் கொடுக்கும் பொறுப்பை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். அது முதல் நான்தான் அதைக் கவனித்துக் கொண்டேன்.

அந்தப்படம்தான் ‘நாடோடிமன்னன்.’1958ல்வந்தது உண்மையில் என்னை பி.ஆர்.ஓ.ஆக்கியவர் எம்.ஜி.ஆர்.தான்.

ஆனால் படத்தில் என் பெயர் வரவில்லை.நாம் என்ன பெரிதாகச் செய்து விட்டோம் என்று தயக்கத்தால்
நானும் கேட்கவில்லை .அதனால் பெயர் வரவில்லை. அப்போது டைட்டில் கார்டு யார்யார் பெயரை எல்லாம் எழுதுவது என்பதைக் கவனிப்பது உதவி இயக்குநர்கள்தான்.அப்படி ஒரு துறை இருப்பதே யாரும் அறியவில்லை.

‘நாடோடி மன்னன்’ தான் நான் முதலில் பி.ஆர்.ஓ என்று பணியாற்றிய படம் .

fna-ksk
நாடோடி மன்னன்’ தயாராகி விட்டது. விஜயா வாஹினி ஸ்டுடியோ தியேட்டரில் ஷோ. 10 மணிக்கு ஆரம்பம். சரியாக 10.05 க்கு ஆரம்பமாகி விட்டது. 10.10 க்கு வந்தவர்களைக் கூட எம்.ஜி.ஆர் உள்ளே அனுமதிக்கவில்லை. தாமதமாக வந்தவர்களை விடவில்லை.

அரையும் குறையுமாகப் பார்த்து முன்கதை பார்க்காது படத்தைப் பற்றித்  தவறாக யாரும் எழுதிவிடக்கூடாது எனப் பயந்தார்.

இடைவேளையில் எம்.ஜி.ஆர். அங்கு இருக்க வில்லை. போய்விட்டார். படம் முடிந்து அனைவருக்கும் மதிய உணவு விருந்து. போகும்போது என்னிடம் சொல்லிவிட்டுப் போனார் படம் பார்த்து யார் என்ன கருத்து சொன்னார்களோ. நல்லதோ கெட்டதோ அப்படி யே எனக்கு சொல்லவேண்டும். என்றார்.

படம் பலருக்கும் பிடித்திருந்தது. மறுநாள் காலை 10 மணிக்கு சரியாக சொன்னமாதிரி எனக்கு போன் செய்தார்.அதுதான் எம்.ஜி.ஆர்.

அடுத்த ஆண்டு1959-ல் வந்தபடம் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ .இப்படத்தில் என் பெயர் வந்தது. எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜய குமாரி நடித்த அந்தப் படத்தை கேரளா பாலக்காட்டு தமிழர் சுப்பையா என்பவர் தயாரித்தார். அவருக்கு என்னைப் பிடித்துப் போய் நீங்கள்தான் இந்த பி.ஆர்.ஓ.வேலையைப் பார்க்க வேண்டும். என்றார்.

அப்படியே படத்தின் டைட்டில் கார்டில் பொதுமக்கள் தொடர்பு பிலிம்நியூஸ் ஆனந்தன் என்று பெயரையும் போட்டார். எனக்கு சந்தோஷம். என் பெயர் வரும்போது பத்திரிகையாளர்கள். எல்லாரும் கைதட்டினார்கள். அதையறிந்து அவர் ஆச்சரியப்பட்டார்.

( தொடரும் )