அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச்சூழ்நிலையில் திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும், என்னை அறிந்தால் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்கிறார் அனுஷ்கா. தெலுங்கில் ‘ருத்ரமா தேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்களை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.
இந்த நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்றும் பேசப்படுகிறது. இதனால் புதுப் படங்களுக்கு அனுஷ்கா ஒப்பந்தம் ஆகவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பாரா, மாட்டாரா என்று தெரியவில்லை.ஆனால் அவருக்கு நடிக்க விருப்பம் உள்ளதாகவே தெரிகிறது.
திருமணமான நடிகைகளுக்கு சினிமாவில் வரவேற்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்து அனுஷ்கா கூறியதாவது:–
”நடிகர்களில் 50, 60 வயது நிரம்பியவர்கள் கூட கதாநாயகனாக நடிக்கின்றனர். ஆனால் திருமணமான நடிகைகள் அதுபோல் கதாநாயகிகளாக நடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. திருமணமான நடிகைகளாலும் சாதிக்க முடியும். கதாநாயகிகளாகவும் நடிக்க முடியும்.
இந்தி நடிகைகள் கரீனாகபூர், ராணி முகர்ஜி, வித்யாபாலன் போன்றோருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணத்துக்கு பிறகு கூட அவர்கள் கதாநாயகிகளாக நடித்தக் கொண்டு இருக்கிறார்கள். எனவே திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை. திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கமாட்டார்கள் .ஏற்றுக் கொள்கிறார்கள்.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.