மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:சீமான்

seemanமாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்  என்று    நாம் தமிழர் கட்சியின் சார்பாக,

செந்தமிழன் சீமான்  கோரிக்கை விடுத்து  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதோ அறிக்கை  :
“தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத் தளபதியும், தமிழ் இன மக்களின் மேன்மைமிகு அடையாளமாகவும் திகழ்கின்ற மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை பொது நிகழ்ச்சியாக கொண்டாடவும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டதில் பல இடங்களில் காவல் துறை அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. இது இந்திய அரசமைப்பு அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்திருக்கிறது என்றாலும், அந்த இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவதும், தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்கள் நடத்துவதும் எந்த விதத்திலும் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் வைகோ உள்ளிட்டோர் வழக்கில் தெட்டத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கும், மாவீரர் தினத்தை பொது நிகழ்வாக கொண்டாடுவதற்கும் தமிழக காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது. எதற்காக கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறீர்கள் என்று கேட்டால், எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்றும், இன்னும் சில இடங்களில், அனுமதி அளிக்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளது என்றும் காவல் துறையினர் பதில் கூறுகின்றனர். காவல் துறையின் இந்த கூற்று, அரசமைப்பு அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு என்ற இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் செய்ய சென்ற நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து விண்ணப்பத்தை பெறுவதற்கு காவல் துறை அதிகாரி மறுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவீரர் தினத்தையொட்டி வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றுமாறு காவல் துறையினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் தேச செயலாளர் எச். ராஜா காவல் நிலையத்திற்கே வந்து காவல் அதிகாரிகளை மிரட்டி, பதாகைகளை அகற்றச் சொல்கிறார். இது சட்டத்திற்கு புறம்பான, அராஜக நடவடிக்கையாகும். மத்தியில் ஆட்சி செய்வது பா.ஜ.க. என்கிற ஆணவத்தில் எச். ராஜா இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இப்படித்தான் நடந்து கொண்டார்கள், அதற்கு நாம் தமிழர் கட்சி 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும், இந்த ஆண்டு நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்து, அக்கட்சியை வீழ்த்திக் காட்டினோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் 4 கட்சிகளின் துணையுடன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 75 இலட்சம் வாங்கிவிட்ட ஆணவத்தில் பா.ஜ.க. வினர் இப்படிப்பட்ட கீ்ழ்த்தரமான செயலில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு பா.ஜ.க.வினரின் இப்படிப்பட்ட அராஜக நடவடிக்கைகள் தொடருமானால், அவர்களும் காங்கிரஸ் கட்சி சந்தித்த அதே முடிவை சந்திப்பார்கள், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டது போல் பா.ஜ.க.வும் துடைத்தெறியப்படும் என்பதை எச்சிரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய அரசமைப்பு எமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு, கூட்டங்களுக்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு  நாம் தமிழர் கட்சியின் சார்பாக,அதன்  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.