” இது பேசுவதற்கான, விளம்பரத்துக்கான மேடையல்ல. இது கொடுப்பதற்கான மேடை.
உதவுகிற கரங்களும் வாங்குகிற கரங்களும் ஒரே கரங்களாக இருக்க கூடிய உடம்பை நாம் கொண்டிருக்கிறோம்; மனதைக்கொண்டிருக்கிறோம். இங்கே நான் கொடுப்பதை வேறு யாருக்கோ கொடுப்பதாக நினைக்கவில்லை. எனக்கே கொடுப்பதாக நினைக்கிறேன்.வேறு யாருக்கோ கொடுப்பது போன்ற அந்த உணர்வு எனக்கு சிறிதும் கிடையாது.அந்த உணர்வு இருந்தால் நான் என் பெயரை விரும்புவதாக அர்த்தமாகும். நான் என் புகழை விரும்புவதாக அர்த்தமாகும்.இப்போது ஒன்று தோன்றுகிறது. நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது. இறைவன் /ஒரே ஒரு பூதம் மூலம்தான் தண்டனை கொடுத்திருக்கிறான்.
நாம் எல்லோரும் செய்த குற்றத்துக்காக ஒருபூதம்தான் அதுவும் ஒருவாரம்தான்.ஒரு பூதம் மூலம் மட்டுமே தண்டனை கொடுத்திருக்கிறான். ஒருவாரம் கஷ்டப் படவேண்டும் என்று சித்திரவதை செய்கிறான்.அவன் நினைத்திருந்தால் சுனாமி மாதிரி ஒரேயடியாக தண்டித்திருக்கலாம். மக்கள் மனபாதிப்பு அடைந்த சம்பவத்தை நம் கண்முன் காட்டினான். ஒருவார காலமாக அவன் கஷ்டப் படுத்தியதைப் பார்க்கும் போது மக்களிடம் ஏற்பட்டுள்ள மனபாதிப்பை ,மனமாற்றத்தை உணர முடிகிறது. அடுக்கு மாடி குடியிருப்பில் அடுத்தவீட்டில் இருப்பவர் யாரென்று தெரியாதவர் கூட இந்த வெள்ள பாதிப்பின் போது யாராவது அவர்களுக்கு உதவி செய்யும் போது அடுத்த வீட்டுக்காரருக்கும் உதவி செய்யச்சொல்லிப் பார்க்கச் சொல்கிறார்கள்.
கோடி கோடியாய் பணமிருந்தும் 3 நாட்களாகச் சாதாரண பிரட்டுக்கு அலைந்த காட்சியை பார்க்க முடிந்தது. இவை எல்லாமே இறைவன் குற்றமில்லை. நாம் செய்த குற்றம் அதற்கான தண்டனைதான் இது.
ஆனால் இது பற்றி யாரும் பேசவில்லை .இறைவன் தண்டித்தான் என்று யாரும் பேசுவதில்லை
நான் ஒருவன் மட்டும்தான் சொல்கிறேன். என்னால்தான் இதைஆணித்தரமாக கூறமுடியும். இனிமேலும் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?
பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொள்வதாகும் என்று கூறி முடிக்கிறேன்.”இவ்வாறு இளையராஜா பேசினார்.