உலக அளவில் குழந்தைகளுக்கான திரைப்படம் உலகம் உள்ளது. அதைச் சரியாகப் புரிந்து கொண்ட ஹாலிவுட் திரையுலகம் வசூலைக் குவிக்கிறது. ஆனால் நம்மவர்கள் குழந்தைகளுக்கான படம் எடுப்பதில் புரிதலின்றி உள்ளனர்.அப்படிப்பட்ட சூழலில் வந்துள்ள படம் தான் மை டியர் பூதம்.
பிரபுதேவா, அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தினை எழுதி இயக்கியுள்ளார் என் ராகவன், அபிஷேக் ஃபிலிம்ஸ் இந்த படத்தினைத் தயாரித்துள்ளது.
வேற்று உலகத்தில் வாழும் பிரபுதேவாவிற்கு நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் உள்ளது. பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவாவின் மகன் தவம் இருக்கும் ஒரு முனிவரை தவறுதலாக எழுப்பி விடுகிறார். இதனால் கோபம் அடைந்த முனிவர் பிரபுதேவாவிற்கு சாபமிட்டு பூமிக்கு அனுப்புகிறார். உன்னை விடுவிக்க மந்திரத்தைக் கூற வேண்டும் என்கிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பூமியில் அஸ்வந்த் கையில் பிரபு தேவா கிடைக்கிறார். ஆனால் அஸ்வந்திற்குத் திக்குவாய் . இறுதியில் அவர் அந்த மந்திரத்தை சொல்லி பிரபுதேவாவை விடுவித்தாரா? பிரபுதேவா அவரோடு மகனுடன் சேர்ந்தாரா? என்பதே மைடியர் பூதம் படத்தின் கதை.
முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகிற்கு சென்று அவர்கள் ரசிக்கும் விஷயங்களை பார்த்துப் பார்த்து காட்சிகளாக வைத்துள்ளார் இயக்குநர் ராகவன்.
நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் பிரபுதேவா. தனது வழக்கமான நடிப்பை விட்டு சிறப்பாகவே நடித்துள்ளார். பிரபு தேவா மொட்டை அடிப்பது, ஓர் உதாரணம்.
அஸ்வந்த் இந்தப் படத்தில் திக்குவாய் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அஸ்வந்தின் அம்மாவாக வரும் ரம்யா நம்பீசன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
படம் முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்து இருந்தாலும், குறை சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாகவே உள்ளது.
சிறப்பு தோற்றத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு இப்படத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. குழந்தைகளுடன் ஒரு ஜாலி பயணம் போக வேண்டிய படம் மைடியர் பூதம்