‘இரவின் நிழல்’ விமர்சனம்

ஒரே ஷாட்டில் அதுவும் நான் லீனியர் பாணி கதை சொல்லல் முறையில் உருவாகி இருக்கும் படம் தான் இரவின் நிழல். தொழில்நுட்ப ரீதியாகவும் உருவாக்கத்தின் ரீதியாகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம்தான்.
இந்த முயற்சிக்காக நடிகர், இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனைப் பாராட்டலாம்.

படத்தின் கதை என்ன? சொன்னால் நம்ப மாட்டீர்கள் 1989-ல் வந்த புதிய பாதை படத்தின் இன்னொரு நீட்சியின் வடிவம் தான் இது.

ஊரில் ஒரு மிகப்பெரிய பைனான்சியர் ஆக இருக்கும் பார்த்திபன் தன் இறுதி நிமிடங்களில் இருக்கிறார். பண்ணிய பாவம் சந்தித்த துரோகங்களும் தரத்துகின்றன.ஒருவரை ஒருவர் யார் முதலில் கருவறுப்பது என்று துடிக்கும் ஒரு சூழல்.தனது எதிரிகளை அழிப்பதற்குக் கிளம்புகிறார்.

இந்தப் பயணத்தில் அவரது கடந்த கால வாழ்க்கை முன் கதையாக விரிகிறது. அவர் அழுத்தப்பட்ட வாழ்க்கை,காட்சிகளாக நகர ஆரம்பிக்கின்றன.முடிவு என்ன என்பதே இரவின் நிழல் திரைப்படம்.

திரைப்படம் எடுப்பது என்பது இன்று சாதாரணமானதல்ல பெரும் பணத்தையும் மனித உழைப்பையும் கோரும் ஒரு கடினமான பணி.அதில் இப்படிப்பட்ட ஒரே ஷாட்டில் பணம் எடுப்பது கத்தியில் நடப்பதைப் போன்ற ஆபத்தான கடினமான பணி.அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார் பார்த்திபன்.

அது என்ன நான் லீனியர் பாணி?அதுவும் ஒரே ஷாட்டில்? எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்? என்ற கேள்விகளுக்கு ஆரம்பத்தில் கட்டப்படும் 30 நிமிட வீடியோ பதில் சொல்லும்.

இதன் பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு படம் ஆரம்பிக்கிறது.

பிறகு 93 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் பெரும்பாலான இடங்களில் தொய்வு ஏற்படாத படி திரைக்கதை அமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

இறுதிக்கட்ட பரபரப்பு கெடாமல் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது போன்ற காட்சிகள் அமைத்துள்ளது புத்திசாலித்தனம்.கரடுமுரடான காட்சிகள் மத்தியில் கவிதை போன்ற காட்சிகளும் உண்டு.

படத்தில் மொத்தம் ஐந்து பார்த்திபன்கள் நடித்துள்ளனர். அதில் முறையே ஜோஸ்வா, பிரவீன்குமார், சந்துரு, ஆனந்த் கிருஷ்ணன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அந்தந்த வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்தில் நாயகன் நந்துவாக நடித்துள்ளனர்.
நாயகன் நந்துவிற்கு மூன்று கதாநாயகிகள். அவர்கள் சினேகா குமாரி, பிரிகிடா சாகா, சாய் பிரியங்கா ருத் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களும் எந்த ஒரு இடத்திலும் பிறழாமல் நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கின்றனர்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர், வரலட்சுமி, ரேகா நாயர் மற்றும் இன்னும் சில நடிகர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட வேலையை அனாயாசமாகச் செய்து ரசிக்க வைத்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக காட்சிகள் வியப்பையும் மதிப்பையும் அளித்தாலும் கதை ரீதியாகவும் காட்சிகள் ரீதியாகவும் மிகவும் அதிர்ச்சி ஊட்டுகின்றன.அந்த அளவிற்கு ஆபாச வசனங்கள், கெட்ட வார்த்தை சொல்லாடல்கள், அருவருப்பூட்டும் காட்சிகள், வக்கிரமான உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் என, படங்களில் நிறைந்துள்ளன.எதார்த்தம் என்றும் உள்ளதை உள்ளபடி சொல்கிறேன் என்று இதைச் சமாதானப்படுத்த முயலலாம். ஆபாசத்தைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். வக்கிரத்தைப் பொறுக்க முடியாது அல்லவா?. அதனால் குடும்பத்துடன் வரும் ரசிகர்களுக்கு இது பெரும் தடையாகும். நிச்சயமாக இதைக் குடும்பத்தோடு பார்க்க முடியாது. இயக்குநர் பார்த்திபனுக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை கதாசிரியர் பார்த்திபனுக்கு வருத்தங்களையும் தெரிவிக்கிறோம்.

இப்படி ஒரு படத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய பலமாக இருப்பது தொழில்நுட்பக் குழு மட்டுமே.

சாத்தியமில்லாத முயற்சியாக கருதப்பட்ட ஒன்றைச் சாத்தியமாக்கியதற்கு பக்கபலமாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் குழு, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் , கலை இயக்குநர் விஜய் முருகன் ஆகியோரை எப்படிப் பாராட்டுவது?

ஏ .ஆர் .ரகுமானின் காயம், மாயவா, பாவம் செய்யாதிரு மனமே ஆகிய பாடல்கள் மனதை வருடுகின்றன. அதேபோல் காட்சிகளுக்கு ஆழமான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார்.

சில காட்சிகளைத் தவிர்த்தும் இந்தப் படத்தை உருவாக்கி இருக்க முடியும். அப்படித் தவித்திருந்தால் குடும்பத்தோடு கொண்டாடும் படமாக இது மாதிரி இருக்கும்.