‘கார்கி’விமர்சனம்

சாய்பல்லவி கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கார்கி. ஒன்பது வயது குழந்தையை நான்கு வடமாநில இளைஞர்கள் கற்பழித்து விடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார். இதனால் சாய்பல்லவி குடும்பம் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறது.

பின்பு சட்டப் போராட்டங்களின் மூலம் சாய் பல்லவி தனது அப்பாவை காப்பாற்றினாரா?இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் ஒன்லைன். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது. சக்தி பிலிம் பேக்டரி தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

சாய் பல்லவி கார்கி படத்தில் ஒரு பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார். எந்தவித பெரிய மேக்கப்பும் இல்லாமல், மிகவும் எளிமையாக அதே சமயம் அழகாகவும் காட்சியளிக்கிறார்.

படம் முழுக்க நமது பக்கத்து வீட்டுப பெண் போலவே இருக்கிறார். சாய்பல்லவியின் எதார்த்தமான நடிப்பு நம்மை வேறு எதையும் யோசிக்க விடாமல் கதையினுள் இழுத்து விடுகிறது.சாய் பல்லவி நான் ஒரு சிறந்த நடிகை என்று பல காட்சிகள் மூலம் நிரூபித்துள்ளார்

தனது அப்பாவை காப்பாற்ற துடிக்கும் ஒரு மகளாக பல இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார் சாய்பல்லவி.

வழக்கறிஞராக வரும் காளி வெங்கட்டுக்கு இது ஒரு சிறப்பான படம் பல இடங்களில் தனது ஒன்லைன் மூலம் ரசிக்க வைக்கிறார். மேலும் இவரது கதாபாத்திரம் படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவுகிறது.

சோகமாக நகரும் காட்சிகளில் கூட தனது முக பாவனைகள் மற்றும் கவுண்டர்களின் மூலம் சிரிக்க, ரசிக்க வைக்கிறார்.

மேலும் சாய் பல்லவியின் அப்பாவாக வரும் ஆர் எஸ் சிவாஜி, நடிகர் சரவணன்,ஜெயபிரகாஷ் போன்றோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். கேமியோ ரோலில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். நீதிக்காக போராடும் ஒரு சாதாரண ஆசிரியரின் கதையை தத்ரூபமாக எந்தவித சினிமா தனமும் இல்லாமல் நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

படத்தில் சாய்பல்லவியின் அப்பாவிற்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று நாம் பதற்றப்படும் அளவிற்கு திரைக்கதை இருந்தது.

அரசாங்க எந்திரம் எந்த அளவிற்கு மோசமாக செயல்படுகிறது என்பதை பட்டும் படாமல் கதையில் போற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறார் இயக்குநர். படத்தின் ஆரம்பத்தில் போடப்பட்ட டைட்டில் கார்டிலிருந்து எண்ட் காடு வரை பல புதுமையான விஷயங்களை புகுத்தியுள்ளார் கவுதம். முக்கியமாக கோர்ட் ரூமில் நடக்கும் சீன்கள் அனைத்தும் பிரமாதம்.

ஒருவர் தவறுதலாக ஒரு பெரிய வழக்கில் கைதாகும் பொழுது அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் என்ன விதமான இன்னல்கள் சந்திக்க வேண்டும் என்பதை இப்படம் நமக்கு உணர்த்துகிறது. மேலும் இன்றைய மீடியாவும் அவர்களை எவ்வாறு சித்தரிக்கிறது, மீடியா மூலம் பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷ்டங்களும் சொல்லப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் குறை சொல்லும் அளவிற்கு இல்லாமல் உள்ளது.

கிளைமாக்ஸ் டிவிஸ்ட் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்ததே இப்படத்தின் மிகப்பெரிய பலம்.இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி ஆழமாக பேசியுள்ளது படம். கண்டிப்பாக இந்த கார்கியைப் பார்க்கலாம்.