சதீஷ். சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ்.மதுசூதன், சுப்பிரமணியம் சிவா, ஜான்விஜய், பாவல் நவகீதன், ஜப்பான் குமார் நடித்துள்ளனர்.வெங்கி எழுதி இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு யுவ கார்த்திக் ,இசை விபிஆர், எடிட்டிங் அருள் இளங்கோ சித்தார்த்,இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே விஜய் பாண்டி தயாரித்துள்ளார்.
சினிமாவில் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தவர்கள் தனியே கதாநாயகனாகி நடிக்கும்போது ரசிகர்களின் ஏற்பு என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.நகைச்சுவை வேடங்களில் புகழ்பெற்று விளங்கிய வடிவேலுக்குக் கூட கதாநாயகன் ஆகும் போது அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் தான் இப்படிப்பட்ட நாயக வேடங்களில் ஏற்காமல் விவேக்கும் தயங்கிக் கொண்டிருந்தார்.சந்தானத்திற்கோ நல்ல கதையம்சமுள்ள சில படங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. ஆனால் யோகி பாபு மட்டும் இந்தப் பாதையில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார்.அவர் தனிக் கத நாயகனாக நடிக்கும் போது குணச்சித்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டதால் அவர் மட்டும் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்.தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்து இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளவர் சதீஷ். நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தவர் தனியே கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் வித்தைக்காரன்.
விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றி வைக்கப்பட்டுள்ள 25 கோடி ரூபாய் கடத்தல் வைரத்தை ஒரு வித்தைக்காரன் எப்படி போலீஸால் தேடப்படும் ஆனால் டிமிக்கி கொடுத்து வரும் சமூக விரோதிகளை திருட வைத்து எப்படிச் சிக்க வைக்கிறான் என்பது தான் கதை.
இப்படத்தில் மேஜிக் மேன் ஆக வரும் காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகன் போல் உரு மாறி இருக்கிறார்.மாயாஜாலக்காரன் என்று நம்மை நம்ப வைக்க முயற்சி செய்துள்ள இயக்குநர், அழுத்தமான காட்சிகள் இல்லாததால் அவரது நாயகபாத்திரம் கொஞ்சம் பலவீனப்படுகிறது.
இப்படத்தில் ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா, மதுசூதன் மூவரும் எதிர் தளத்தில் பகையாளிகளாக நிற்கிறார்கள். இவர்கள் மூவருமே குறுக்கு வழிகளில், சட்டவிராத காரியங்களில் பணம் பண்ணுவது தான் தொழிலாக இருக்கிறார்கள். அந்த மூவரும் தங்கள் குருவையே கொன்ற நன்றி மறந்தவர்கள் . ஒன்றாகத் தொழில் கற்றவர்கள் தனித்தனியே பிரிந்து தனி சாம்ராஜ்யம் நடத்துகிறார்கள்.
ஹவாலாவில் பண மோசடி, ஏர்ப்போர்ட் வைரக் கடத்தல், கப்பலில் இறக்குமதி பொருள்களில் மோசடி செய்தல் கடத்தல் என்று மூவருமே திரை மறைவு சட்டவிரோத காரியங்களில் கைதேர்ந்தவர்கள் . இவர்களை எப்படி ஒரு ஏர்போர்ட்டில் தூய்மைப் பணியாளராக இருக்கும் சதீஷ் வைரத்தை திருட வைத்து சிக்க வைக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
தாதாக்களுக்கு பெயர் டாலர் அழகு, மேரி கோல்டு , கல்கண்டு என்று உள்ளன.அந்தப் பெயர்களும் பாத்திரச் சித்தரிப்பும் ரசிகர்களுக்குச் சுவாரஸ்யம் தருபவைதான்.ஆனால் அவர்கள் பயமுறுத்துவதை விட சிரிப்பு காட்டவே பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.பேய்ப் படங்களே சிரிக்க வைக்கும் இக்காலத்தில் இதையே வணிகப் பாதுகாப்பு என்று நம்பியுள்ளார் இயக்குநர்.
இதில் சதீஷ் கதைநாயகனாக வருகிறார். இருந்தாலும் தன்னை முன் நிறுத்தாமல் மற்ற பாத்திரங்களுக்கும் இடம் அளித்து அவர் பட வெற்றியின் பாதுகாப்பை உறுதி செய்கிறார். ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா ,மதுசூதன் ராவ் ஆகியோர் அவர்களின் பாத்திரச் சித்தரிப்புகளும் அவர்களின் குறையில்லாத நடிப்பும் நன்று.
கதாநாயகி சிம்ரன் குப்தா பூதக்கண்ணாடி ஊடகத்தில் புலனாய்வு இதழியல் படிக்கிறார். அவர் எப்படி இதில் சம்பந்தப்படுகிறார்? அவரை எப்படிக் கதாநாயகன் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது ஒரு சுவாரசியமான கிளைக் கதை.படத்தில் ஜான் விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார், பாவல் நவகீதன், மாரிமுத்து போன்ற தெரிந்த முகங்களும் வருகின்றன.
இரண்டாம் பாதி முழுக்க ஒரு விமான நிலையத்தில் நடக்கிறது . நல்ல முடிச்சுகள் போட்டு விறுவிறுப்பான காட்சிகளுக்கான இடம் இருந்தும் நல்ல ஐடியாக்களை கை வைத்திருந்தும் செயல்படுத்துவதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர்.ஒரு பழிவாங்கும் கதையை இப்படியும் எடுக்கலாம் என்று நிரூத்துள்ளார் இயக்குநர் வெங்கி.அவர் சென்ற பாதையில் உடன் பயணிக்கும் பயணிகளாக ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக்கும் இசையமைப்பாளர் விபிஆரும் பணியாற்றி உள்ளார்கள்.
லாஜிக்கை மறந்து பார்க்க வைக்கும் ஒரு வணிகப் படமாக பாதுகாப்பான பாதையில் பயணம் செய்கிற படம் என்று இந்த வித்தைக்காரன் சொல்ல வைக்கிறது.