பருத்திவீரன் சரவணன் , நம்ரிதா , ஆரோவுல் டி சங்கர். சண்முகம் ,திருச்செல்வம், விஜயஸ்ரீ ,இனி ராம் நடித்துள்ளனர்.இந்தத் தொடரின் கதையை சூரிய பிரதாப் எழுதியுள்ளார். இயக்கம் பாலாஜி செல்வராஜ்.
ஒளிப்பதிவு எஸ்.கோகுல கிருஷ்ணன் , படத்தொகுப்பு ராவணன், இசை விபின் பாஸ்கர், கலை இயக்கம் பாவனா கோவர்தன், பாடல் வரிகள் ஸ்ரீனி செல்வராஜ்.தயாரிப்பு சசிகலா பிரபாகரன், தயாரிப்பு நிறுவனம் 18 கிரியேட்டர்ஸ், வெளியீடு ZEE5 ஒரிஜினல்.
‘சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் தான் விளக்கு ‘என்றார் அண்ணா.சட்டத்தின் நீதியின் பலாபலன்கள் அடித்தட்டு மக்கள் வரை போய் சேர்வதில்லை.அப்படி நீதி மறுக்கப்பட்ட ஒரு சாமான்யனுக்காகப் போராடி வாதாடும் ஓர் எளிய வழக்கறிஞரின் கதை தான் ‘சட்டமும் நீதியும்’ இணைய தொடராக உருவெடுத்துள்ளது. ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர் ஒரு திரைப்படத்தின் திரை அனுபவத்தை தாண்டி நிறைவு தருகிறது.
சட்டப் படிப்பு படித்துவிட்டுத் தனக்குரிய வழக்கறிஞரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்று நம்ரிதா போராடுகிறார். ஆனால் அவர் பயிற்சி பெறுவதற்குரிய மூத்த வழக்கறிஞர் கிடைப்பதில் சிக்கலாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் நிராகரிப்பு தான் கிடைக்கிறது .
சரவணன் ஒரு நோட்டரி பப்ளிக். நீதிமன்றத்தில் வாதாடாமல் அன்றன்று சான்றிதழ் கொடுக்கும் ஒரு வழக்கறிஞராக இருக்கிறார். சட்ட நுணுக்கங்கள் அறிந்தாலும் அவர் நீதிமன்றத்தில் வாதாடி புகழ்பெற்றவரில்லை.இருந்தாலும் நம்பி அவரிடம் சேர்கிறார் நம்ரிதா .
தொலைந்து போன தன் மகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று காவல் நிலையங்களில் முறையிட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்கிறார் ஒருவர்.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தாலும் கூட உணர்ச்சிவசப்பட்ட ஓர் எளியவனின் தற்கொலை முயற்சி என்று அதைக் கடந்து போய் தங்கள் வாழ்க்கையைக் கவனிக்கிறார்கள். இந்த நிலையில் அந்த வழக்கை ஒரு பொது நல வழக்காக எடுத்துக் கொள்கிறார் சரவணன். அந்த நீதிக்கான போராட்டத்தில் ஒவ்வொரு படியிலும் அவருக்கு தோல்வியே கிடைக்கின்றன.இருந்தாலும் விடாமுயற்சியுடன் போராடுகிறார். இறுதியில் அவர் வெற்றி பெற்றாரா? இறந்து போனவரின் மரணத்திற்கு நீதி கிடைத்ததா?என்பதைச் சொல்வதே இந்த ‘சட்டமும் நீதியும்’ இணைய தொடரின் கதை.
நீதிமன்றத்தில் ஒருவர் தற்கொலை செய்யும் காட்சியிலிருந்து தொடங்குகிறது.ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு முடிச்சோடு முடிகிறது. அந்த முடிச்சு அடுத்த அத்தியாயத்தில் அவிழ்க்கப்படுகிறது .வேறு ஒரு முடிச்சு போடப்படுகிறது. இப்படி முடிச்சு போடுதலும் அவிழ்த்தலும் என்று அழகாகத் திரைக்கதை பின்னியுள்ளார் இயக்குநர் பாலாஜி செல்வராஜ் . சட்ட சாராம்சங்களை நுணுகிஆராய்ந்து இந்தத் தொடரின் கதையை எழுதியுள்ளார் சூரிய பிரதாப் .
நீதிமன்றம் ,காவல் நிலையம் என்று குறிப்பிட்ட மிகச்சில இடங்களில் கதை சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அது தோன்றாத அளவிற்கு திரைக்கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் வழக்கறிஞர் சுந்தர மூர்த்தியாக பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார். முரட்டு மனிதராக எதிர்மறை நிழல் படிந்த ,சில நேரம் இலக்கு இல்லாமல் மனம் போன போக்கில் பாத்திரங்களில் நடித்து வந்த சரவணன் இதில் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்துள்ளார் .அவரிடம் இப்படி ஒரு நடிப்பாற்றலா என்று கேட்க வைக்கும் அளவிற்கு அந்தப் பாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். சற்று கூட பிசிறு தட்டாமல் மிகை நடிப்பு காட்டாமல் அந்தப் பாத்திரமாகவே மாறி யுள்ளார் சரவணன்.
அவரது ஜூனியர் அருணாவாக வரும் நம்ரிதா ,சட்டத்துக்கான போராட்டக் களத்தில் எங்கு பார்த்தாலும் தோல்வி என்றாலும் ஒரு நம்பிக்கை உள்ள மனுஷியாக இதில் பயணப்பட்டுள்ளார்.வழக்கறிஞருக்கு உரிய ,எதிலும் திருப்தி தராத சந்தேகப்படும் கண்கள் மிடுக்கான தோற்றம் என அவர் காட்டியிருக்கும் நடிப்பு அந்தப் பாத்திரத்திற்கு வளம் கூட்டுகின்றன.
சரவணனுக்கு எதிராக நிற்கும் அரசு தரப்பு வழக்கறிஞராக விஸ்வநாதன் பாத்திரத்தில் வருகிறார் ஆரோவில் டி சங்கர் .அவரும் தனது மிடுக்கும் கர்வமும் குறையாமல் பாத்திரத்தில் மிளிர்ந்துள்ளார்.
தொலைந்து போன மகளைத் தேடி அலையும் ,நீதிக்காகப் போராடும் தந்தை குப்புசாமி பாத்திரத்தில் சண்முகம் நடித்துள்ளார். இவர் நடித்ததாகவே தெரியவில்லை. அந்த அளவுக்கு நிஜம் என்று நம்பும் படியான இயல்பான காட்சிகளில் நடிப்பாற்றல் வெளிப்பட்டுள்ளது.இவர்கள் தவிர படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட நிஜத்துக்கு நெருக்கமாக தோன்றும்படி சித்தரித்துள்ளார் இயக்குநர்.நடிப்புக் கலைஞர்களும் குறையில்லாமல் செய்துள்ளார்கள்.
எதார்த்தம் குலையாத எஸ்.கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இந்தத் தொடருக்கு ஒளியூட்டுகிறது. கதையை, காட்சிகளைத் தூக்கி நிறுத்துகிறது விபின் பாஸ்கரின் பின்னணி இசை .ஆறாவது ஏழாவது அத்தியாயங்களில் வரும் பாடல்கள் பிரமாத வரிகளில் பிரகாசமாய் ஒலிக்கின்றன.புதிய இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.
காணாமல் போன வெண்ணிலாவைத் தேடினால் ஏகப்பட்ட வெண்ணிலாக்கள் வருவது சுவாரஸ்யம்.
கதையினூடாகச் சட்டப் பிரிவுகள் அலசப்படுவது நல்லதொரு மெனக்கடல்.
பொதுவாகவே திரைப்படங்களில் நீதிமன்றம் வழக்கு விசாரணை என்றால் நீட்டி முழக்கும் வசனங்கள் இருக்கும் .ஆனால் இதில் அந்த அபாயம் நேரவில்லை. எதார்த்தம் மீறாத இயல்பான வசனங்கள் மின்னுகின்றன.’சட்டத்துக்கு எமோஷன்ஸ் முக்கியமல்ல, எவிடன்ஸ்தான் முக்கியம்’ வரி சிறு உதாரணம்.
மொத்தத்தில் இந்த ஏழு அத்தியாயங்கள் கொண்ட இணையத்தொடர் ஒரு முழு நீளத் திரைப்படம் தராத திருப்தியை அளிக்கிறது என்றே கூறலாம். படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!


