‘சென்னை ஃபைல்ஸ்- முதல் பக்கம்’ திரைப்பட விமர்சனம்

வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, மகேஷ் தாஸ் நடித்துள்ளனர் .அனீஷ் அஷ்ரப் இயக்கியுள்ளார். இசை ஏ ஜே ஆர் ,ஒளிப்பதிவு அரவிந்த், படத்தொகுப்பு விஷால், தயாரிப்பு : சின்னத்தம்பி புரொடக்ஷன்ஸ் மகேஸ்வரன் தேவதாஸ்.

க்ரைம் கதையை எழுதிப் புகழ்பெற்றவர் எழுத்தாளர் ஜீவன் குமார். அவர் இப்போது பிரபலமாக இருக்கும் நமது
க்ரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ் குமார் போல் புகழ்பெற்றவராக விளங்கி மறைந்து விட்டார்.
அவரது மகன் நாயகன் வெற்றி தனது தந்தையின் வாழ்க்கை அனுபவங்களை ஒரு பத்திரிகையில் தொடராக எழுதுவதற்காக சென்னை வருகிறார்.

சென்னையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது. வெற்றிக்கு புலனாய்வு செய்வதில் உள்ள ஆர்வத்தைப் பார்த்து பரஸ்பர புரிதலுடன் அவரை தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். குற்றங்களைக் கண்டுபிடிக்கச் செல்லும் போது அவரது ஆலோசனையினைக் கேட்டுக்கொள்கிறார். அவர் சொல்வது சரியாக இருக்கவே,கூடவே அழைத்துக்கொண்டும் செல்கிறார்.

ஒரு சைக்கோ கொலையாளி  தொடர் கொலைகள் செய்து வருகிறான் .அந்த சைக்கோ கொலையாளி முதலில் பெண் நிருபர் ,பிறகு பள்ளி மாணவர்கள் என்று முகத்தைச் சிதைத்து ஒரு முகமூடியை மாற்றி விட்டு ஒரே மாதிரியான விதத்தில் கொடூரமாகக் கொலை செய்கிறான். இந்தத் தொடர் கொலைகளின் காரணத்தை அறிந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றி அதை கண்டுபிடிக்கிறாரா ?எப்படிக் கண்டுபிடிக்கிறார்? கொலைகாரன் யார்? அவன் கொலை செய்வதற்குப் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் ‘சென்னைஃபைல்ஸ்- முதல் பக்கம்’ என்கிற 126.22 நிமிடங்கள் கொண்ட திரைப்படம்.

இது மாதிரி குற்றச் செயல் சார்ந்த இருள் சூழ்ந்த கதைகளில் நடிகர் வெற்றி நடிப்பது வாடிக்கைதான் ,ஆனாலும் அவர் இதில் வழக்கமான தனது பாணியில் இருந்து மாறி நடிப்பில் முன்னேற்றம் காட்டியுள்ளார் .புலனாய்வுக் காட்சிகளில் மிகை நடிப்பில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்.அவர் ஏற்றுள்ள அந்த பிரபாகரன் கதாபாத்திரத்தில் குறை சொல்ல முடியாத நடிப்பைக் காட்டியுள்ளார்.

நாயகி ஷில்பா மஞ்சுநாத் ஊடக நிறுவனத்தில் பணியாற்றுபவராக வருகிறார் .அவருக்கும் வெற்றிக்கும் ஒரு புரிதலும் பரஸ்பர மதிப்பும் ஏற்படுகிறது. இருந்தாலும் டூயட் பாடி அதை சினிமாத்தனமாக்கவில்லை.அவர் வில்லனிடம் மாட்டிக் கொண்டு தப்பித்துச் செல்கிறார். அதற்குப்பின் என்ன நடந்தது?அவர் என்ன ஆனார் என்று தப்பித்ததற்கான பின்னணியைச் சரியாகக் காட்டவில்லை.எனவே அவரது பாத்திரத்தின் தொடர்ச்சி விடுபட்ட உணர்வைத் தருகிறது.

சைக்கோ கொலையாளியாக நடித்துள்ள மகேஷ் தாஸ் அதிகம் பேசாமலே தோற்றத்தால் மிரட்டுகிறார். ஆனாலும் அவரது பாத்திரத்தின் செயல்களுக்கான காரணத்தை சரியாகச் செல்லவில்லை.அவரை முகத்தில் சிதைத்ததால் சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் அவர் தண்டிப்பது என்ன நியாயம்?

படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை தம்பி ராமையாவே தீர்த்து வைக்கிறார்.கிரைம் கதை கடுமையாகத் தான் இருக்க வேண்டுமா? எனவே தம்பி ராமையா புலனாய்வு செய்யும் காட்சிகளே பார்ப்பதற்கு நமக்கு நகைச்சுவையாகத்தான் தோன்றுகிறது.கலகலப்பு காட்சிகளைக் கலந்தும் ஒரு கிரைம் திரில்லர் படத்தின் கதையைச் சொல்ல முடியும் என்று இயக்குநர் முயற்சி செய்துள்ளார்.

ஏஜேஆர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் குறை சொல்ல ஒன்றும் இல்லை. அரவிந்தனின் ஒளிப்பதிவும் விஷாலின் படத்தொகுப்பும் இயக்குநருக்கு கைகொடுத்துள்ளன.

இதில் இயக்குநர் சமூக நடப்புகளைப் பற்றியும் பேசி இருக்கிறார், குற்றங்களுக்கு -குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதை செய்தியாகக் கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘சென்னை பைல்ஸ் முதல் பக்கம்’ ஓகே ரகம்.