தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார் ,படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன் ,சுவாதி, திவாகர், கலைக்குமார், நித்தி, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், தீபிகா, தீப்ஷன், மாதங்கி, கோவிந்தராஜ் ,பிரபு, பூஜா ஃபியா நடித்துள்ளனர்.
எஸ் .சாம் இயக்கியுள்ளார்.கதை -ராம்ஸ் முருகன்.ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி, இசை -சகீஷனா சேவியர், படத்தொகுப்பு – ஏ எல் ரமேஷ் , கலை இயக்கம் – எம் தேவேந்திரன், சண்டைப் பயிற்சி -டேஞ்சர் மணி, எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பு – மகேஷ் செல்வராஜ்.
‘யோலோ’ என்று ஒரு யூடியூப் சேனல் நடத்திக் கொண்டு மக்களிடம் பிராங்க் செய்து அவர்களை வெறுப்பேற்றி வீடியோ எடுத்து அதன் மூலம் பரபரப்பு தேடி தொழிலாக நடத்தி வருபவர் நாயகன் தேவ். படவா கோபியின் மகளான நாயகி தேவிகாவைப் பெண் பார்க்க வருகிறார்கள் அவரும் குனிந்த தலை நிமிராமல் வந்து நல்ல பெண் போல வந்தவர்களிடம் காபி கொடுக்கிறார் .வந்தவர்களோ இந்தப் பெண்ணிற்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள். தேவிகாவின் தந்தை படவா கோபி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட தேதியில் வெளிநாட்டில் தேவிகா தனது கணவன் தேவோடு தேனிலவுக்கு வந்த போது பார்த்ததாக வந்தவர்கள் கூறுகிறார்கள். அதன்படியே பாஸ்போர்ட் ஆதாரமும் இருக்கிறது .தேவிகா மட்டுமல்ல அனைவருமே குழம்புகிறார்கள்.இருந்தாலும் பரவாயில்லை தேவிகாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று அலைகிறார் பெண்பார்க்க வந்த விஜே நிக்கி.செகண்ட் ஹேண்ட் தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இதற்குப் பின்னால் ஏதாவது வித்தியாசமான மன நோய் இருக்கிறதா என்று பார்வையாளர்களுக்கும் கேள்வி வருகிறது.
தேவிகாவுக்கும் தேவுக்கும் திருமணமான பதிவு திருமண ஆதாரமும் இருப்பது தெரிகிறது.அது எப்படி சாத்தியம் என்று தேவிகா உண்மையை அறிய முயற்சி செய்கிறார்.அதற்கு அவர் திருமணம் ஆனதாகச் சொல்லப்படும் நபர் தேவின் உதவியையே நாடுகிறார். ஆனால் அவரோ இவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.அப்போது இவர்கள் மீது ஒரு கொலைப்பழி வருகிறது. போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். அழைத்துச் சென்றது போலவே விரைவில் அவர்கள் விடுதலையும் ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் விவாகரத்தும் பெறுகிறார்கள்.இவர்கள் உருவத்தில் வேறொரு ஜோடி வாழ நினைப்பது என்று புதுக் கதை வேறு முளைக்கிறது.தங்களுக்குத் தெரியாமல் திருமணம் எப்படி சாத்தியம் என்று இருவரும் விசாரணையில் இறங்குகிறார்கள்.இந்தக் குழப்பத்துக்கு எல்லாம் பதில் என்ன என்பதுதான் ‘யோலோ’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகன் தேவ், கதாநாயகி தேவிகா இருவரும் கதைக்கேற்ற இணையாக படம் முழுக்க பயணிக்கிறார்கள்.தோற்றத்திலும் நடிப்பிலும் எந்தப் பின்னடைவும் இல்லை பொருத்தம் தான்.
படத்தில் எரிச்சலூட்டும் வேகத்தடை போல் விஜே நிக்கியின் கதாபாத்திரம் அமைந்துள்ளது .அவர் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்வது மிகையான பாத்திர வெளிப்பாடு.
படத்தின் கதையில் ‘டார்லிங்’ படத்தின் சாயல் அடிக்கிறது.
படத்தில் நகைச்சுவைக்கு ஏராள இடமிருந்தும் அதைச் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை. படம் நகைச்சுவை சார்ந்ததா? அமானுஷ்யம் சார்ந்ததா? கிரைம் திரில்லர் சார்ந்ததா? என்று ஒரு கட்டத்தில் குழப்பம் வருகிறது. எந்த ரகத்தில் இந்தக் கதையை சொல்வது என்று இயக்குநர் குழம்பிக் குழப்பி உள்ளார்.
படத்தில் இன்னொரு காதல் ஜோடியும் காட்டப்படுகிறது. யோலோ பிராங்க் சேனலுக்காக எதிர்ப்படுபவர்களை பயன்படுத்துவதற்காக அவர்கள் செய்யும் அலப்பறைகள் ஜாலி ரகளை.
இப்படிப்பட்ட ஒரு படத்தில் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், -சகீஷனா சேவியரின்
இசையும் இணைந்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. இந்த இருவரும் தங்கள் பணியை திறம்படச் செய்துள்ளனர்.
படத்தில் இளமை கொடிகட்டிப் பறக்கிறது. கலர்ஃபுல்லான காட்சிகள் படத்திற்கு நல்லதொரு தோற்றத்தைத் தருகின்றன.
கதையின் நிகழும் குழப்பங்களுக்குத் தீர்வுகண்டு காட்சிகளை சிக்கலில்லாமல் நேர்படுத்தி இருந்தால் கலகலப்பான இளமைக் கொண்டாட்டமாக இப்படம் மாறி இருக்கும்.
படத்தில் தெரியும் சில குறைகளை புறம் தள்ளிவிட்டு ‘யோலோ’ திரைப்படத்தைப் பொழுதுபோக்காக ரசிக்கலாம்.


