இளையராஜா இசையமைக்கும் ஈழத்தமிழர் படம் ‘அந்தோனி’

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘அந்தோனி’ . இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இளையராஜாவின் திரையுலகப் பொன்விழா ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘எங்களது ஓசை பிலிம்ஸ் திரைப்படத் நிறுவனத்தின் தயாரிப்பில்,உருவாகும் அந்தோனி திரைப்படத்தில் கயல் வின்சன்ட் நாயகனாகவும் காதலிக்க நேரமில்லை டி.ஜே.பானு நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பெரும்பான்மையான ஈழத்திரைக் கலைஞர்களும் பிரபல இந்தியக் கலைஞர்களும் இணைந்து நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைக்கிறார்.

அந்தோனி திரைப்படம்  இலங்கை – யாழ்ப்பாணத்தில் கடந்த மார்ச் மாதம் பூசையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 45 நாட்களுக்கு மேலாக இரவு பகல் என்று படப்பிடிப்பு நடைபெற்று அண்மையில் நிறைவுபெற்றது.

படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் தொடங்கின. படத்தொகுப்பு (எடிற்றிங்) வேலைகள், குரல் பதிவுப்பணிகள் (டப்பிங்) நிறைவுசெய்யப்பட்டு இசையமைப்புக்குத் தயாரானது.

எமது ஈழத்தமிழ் சினிமாவுக்கு உலகறிந்த இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைப்பதே சிறந்ததாக இருக்கும் என்று நினைத்தோம். அதன்படி நாங்கள் அவரை அணுகிய போது, கதையைக் கேட்டார்.கேட்டுவிட்டுப் படத்திற்கு இசையமைக்க எந்தவித மறுப்புமின்றி ஒப்புக்கொண்டார்.
அதேவேளை படத்தையும் பார்த்தார். இரண்டு நாட்களிலேயே இசையமைப்பு வேலைகள் ஆரம்பமாகி, தற்பொழுது இறுதி நிலைக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் ஒரு காதல் கதைக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைப்பதும் ஈழத்திரைப்படத்திற்கு இசையமைப்பதுவும் இதுவே வரலாற்றில் முதல் தடவையாகும்.

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பல்வேறுபட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பில் உருவாகி இருக்கும் எங்கள் அந்தோனி திரைப்படம், இளையராஜா அவர்களின் 1524வது திரைப்படமாகவும் ஈழத்தின் முதல்படமாகவும் வரலாற்றில் இடம்பெறும் பெருமை பெற்றுள்ளது.

தனது 82 வயதிலும் 1500 படங்களைத் தாண்டி, 8000 பாடல்களுக்கும் மேலாக இவரது இசை ,இன்று வரை உலகமெங்கும் மக்களை வாழ வைக்கும் உயிரோட்டமாகவே திகழ்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் பல கோடி தமிழ் மக்களின் பார்வைக்காகக் காத்திருக்கும் ‘அந்தோனி’ திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்கியிருக்கின்றனர்.

இதன் இணை இயக்குநராக கலைவளரி சக இரமணா இருப்பதோடு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாக ஓசை பிலிம்ஸ் நிறுவனர் கலைவளரி சக இரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் தயாரிக்கின்றனர்.  

இணைத் தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரொடக்‌ஷன்ஸ்) ஆகியோர் இணைந்துள்ளனர்.லைன் புரடியூசராக விக்கி (கனா புரொடக்‌ஷன்ஸ்) இணைந்துள்ளார்.

இலங்கையில் வெளிவந்த திரைப்படங்களைப் பொறுத்தவரை தனித்தன்மை கொண்ட எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்துக் காட்டுகின்ற திரைப்படமாக இந்த ‘அந்தோனி ‘ திரைப்படம் அமையும் என்பதால், இத் திரைப்படம் ஐரோப்பிய அளவிலும் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் அந்தோனி திரைப்படத்தின் மெருகேற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும்.

இசைஞானி இளையராஜா அவர்களின் பொன்விழாவான இன்று எமது அந்தோனி திரைப்படத்தின் இவ் அறிவிப்பைப் பெருமையுடன் உலகத்தழிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் ஓசை பிலிம்ஸ் மற்றும் குறிஞ்சி கிறியேஷன் பெருமகிழ்வடைகிறது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.