தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் ,ஜெகபதி பாபு ,கெட்டப் ஸ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார்.
இசை கௌரா ஹரி, கலை இயக்கம் ஸ்ரீ நாகேந்திர தங்காளா ,படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி .விஸ்வ பிரசாத், க்ரிதி பிரசாத் தயாரித்துள்ளனர்.மக்கள் தொடர்பு யுவராஜ்.
இதிகாசங்கள் தொழில்நுட்பங்களுடன் இணையும்போது புதிய திரைப்பட அனுபவமாக மாறுகிறது.அந்த சேர்மானத்தில் வந்திருக்கும் படம் தான் ‘மிராய்’.தொன்மம் வரலாறு நடப்புக் காலம் மூன்றையும் இணைத்து இதற்கான கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்திய காவியங்கள் பக்தி ஆன்மீக உணர்வுடன் கூடியவை. கற்பனைகளால் நிறைந்தவை – கடவுள்கள், அசுரர்கள், தோற்றங்கள், குணச்சித்திரங்கள் என்ற விரிவு கொண்டவை.கதைக்களங்களும் சம்பவங்களும் திரைப்படம் என்கிற ஊடகத்தின் விஸ்தீரனத்திற்கு ஈடு கொடுப்பவை.அவற்றின் கதை அமைப்பு இருள் விளிம்பில் இருக்கும் உலகங்கள், தீமையை வீழ்த்தி நன்மை அடையும் வெற்றி என்று போக்கு கொண்டவை.
இந்த வகையில் உருவாகும் பெரும்பாலான திரைப்படங்களிலும் இந்த ஒரு வரி ஆதாரமையம் என்பது நல்ல சக்தி – தீய சக்தி இடையேயான போட்டியும், முடிவில் நல்ல சக்தி வெற்றி பெறும் என்பதாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட கதைகளைத் திரைக்கு ஏற்ப உணர்ச்சிமிக்க கதை கூறலாக,சமகாலத்திற்கு ஏற்பு கிடைக்கும் அளவிற்கு காட்சி மொழிபெயர்ப்பு செய்வது என்பதுதான் இன்றுள்ள படைப்பாளர்களுக்கான சவால். அதை மிராயில் சாத்தியப் படுத்தியுள்ளனர் என்றே கூற வேண்டும்.
‘மிராய்’ படத்தின் கதை என்ன?
மாமன்னன் அசோகரிடம் பெரிய மன மாற்றத்தை ஏற்படுத்திய கலிங்கத்து போருக்குப் பின், அவர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 நூல்களில் மறைத்து வைக்கிறார். ஒளிநூல் ,மந்திர நூல் , தந்திர நூல் என்று ஒவ்வொரு நூலுக்கும் ஒரு பெயர் உண்டு. இந்த 9 நூல்களைத் தீய சக்திகள் கைப்பற்றிவிடாமல் இருக்க 9 வீரர்களை நியமிக்கிறார்.
அந்த ஒன்பது நூல்களைக் கைப்பற்றியவர் இந்தப் பூமியை மட்டுமல்ல பிரபஞ்சத்தையே கைப்பற்றும் ரகசியம் அறிந்தவராக மாறிவிடுவார்.பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சமகாலத்தில் இந்த 9 புத்தகங்களை அடைய ஒருவன் விரும்புகிறான். அவன் மகாபீர். முழுக்க எதிர்மறை எண்ணம் கொண்டவர்.அவன் கையில் போனால் உலகில் அநியாயம் தலைவிரிக்கும். தடுக்க ஒருவன் முயல்கிறான் அவன் வேதா.அந்த ஒன்பதாவது நூலைத் தேடி கதாநாயகன் வேதாவும் வில்லன் மகா பீரும் பயணப்படுகிறார்கள்.யார் வெற்றி பெறுகிறார் என்பதுதான் 168.09 நிமிடங்கள் கொண்ட ‘மிராய்’ திரைப்படத்தின் மீதிக் கதை.

மிராயைப் பார்க்கும்போது, நடிகர் தேஜா சஜ்ஜாவின் முந்தைய படமான ஹனு-மேன் நினைவுக்கு வரவே செய்யும். அதில் அவர் சூப்பர் மேன் போல் தோன்றியிருப்பார். அதன் மூலம் குழந்தைகள் மத்தியில் பிரபலமாகிவிட்டவர். இப்படத்தில்
தேஜா சஜ்ஜா முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். அது ஆக்ஷனாக இருந்தாலும் சரி, உணர்ச்சியாக இருந்தாலும் சரி, அவர் முழுவதும் பிரகாசிக்கிறார்.
மஞ்சு மனோஜ் ஏற்றுள்ள மகாபீர் என்கிற எதிர்மறை வேடத்தின் மூலம் படத்திற்குப்பெரிய பலத்தைச் சேர்த்திருக்கிறார். அவரது பாத்திரம் சக்தி மிக்க தீவிரத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது..தோற்கடி ப்பது அரிது என்று கூறத் தோன்றும் ஒரு வில்லன் வலுவாக இருக்கும்போது, படத்தின் தாக்கம் தானாகவே அதிகரிக்கும். அவ்விதத்தில் மனோஜின் அற்புதமான நடிப்பு பலம். அதற்கு ஈடு கொடுத்து தேஜா சஜ்ஜா நல் சக்தியாக உருவெடுத்து ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.மந்திரக் கோலுடன் அவர் சித்த சேத்திரம் நோக்கிச் செல்லும் பயணம் கண்களுக்கு மட்டுமல்ல மனதிற்கும் பிரமிப்பூட்டுபவை.செல்லும் வழியில் தடையாக இருக்கும் சம்பதி கருடனை அவர் வசப்படுத்தி பயணம் தொடர்வது சாகச உணர்வூட்டும் காட்சிகள்.
ஷ்ரேயா சரண் அம்பிகா பாத்திரத்தில் ஒரு தாயாக வருகிறார். பிற உயிர்களைக் காப்பாற்ற தன் உயிரை தீக்குத் தின்னக் கொடுத்து தியாகம் செய்யும் காட்சி சிலிக்க வைக்கும். இப்படி முக்கியமான தருணங்களை உணர்த்தும் காட்சிகளில் உணர்ச்சிகர நடிப்பை வழங்கியுள்ளார்.
ஜெயராம், ஜெகபதிபாபு,மற்றும் மற்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பில் வெளிப்பட்டுள்ளனர்.ஜெயராம் நாயகன் இடையே நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவையும் தத்துவமும் கலந்தவை.ஜெகபதிபாபு ஒரு குருவாக வருகிறார்.பரிவுணர்ச்சியுடன் மகாபீருக்குக் குருவாகக் கற்றுக் கொடுத்ததை,அவர் தலையிலேயே பிரயோகிக்கும் வில்லனின் ஆணவமும் நன்றி மறந்த செயலும் திடுக்கிட வைப்பவை.
இந்த வகையான பட்ஜெட்டுக்கு நம்பமுடியாத அளவிற்கு கார்த்திக் கட்டம்னேனி படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு இயக்குநரே ஒளிப்பதிவாளர் ஆக இருப்பது அவர் கற்பனையில் கண்ட காட்சிகளை கேமராவில் பதிவு செய்யும் வாய்ப்பு . அது இந்த இயக்குநருக்குக் கிடைத்திருக்கிறது.பெரிய கேன்வாஸில் தனது கற்பனையை விரித்துள்ளார்.
இது ₹50 கோடி செலவிலான படம் என்றால் நம்புவது கடினம், பல மடங்கு செலவிட்டு இது ₹500–600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்து போல் பிரமாண்டமாகத் தெரிகிறது.
தேஜா, மிராய் மாயக்கோலைப் பெறுவதை கழுகு தடுக்க முயற்சிக்கும் வேளை வருகிற செயற்கைச் சித்தரிப்புக் காட்சிகள் மிரள வைக்கும்.என்ன ஒரு காட்சிப் பிரம்மாண்டம்!என்ன ஒரு அசாதாரண கிராபிக்ஸ் ! அதன் பிறகு, படம் திரையரங்குகளில் கைதட்டலைப்பெறும் பல தருணங்களை வழங்குகிறது. தெலுங்கு சினிமாவைப் போல நம் கடவுள்களை திரையில் யாராலும் இவ்வளவு பிரமாண்டமாக சித்தரிக்க முடியாது என்று சொல்வது மிகையல்ல.அப்படி ஒரு காட்சிப் பிரம்மாண்டம்.
படம் ஆரம்பம் முதல் முடிவு வரை, அதன் மிகவும் கவர்ச்சிகரமான திரைக் கதையுடன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.தீப்பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள், சாகசம் தெறிக்கும் துரத்தல் காட்சிகள்,வயது கடந்து அனைவரையும் ரசிக்க வைக்கும்.
இது ஒரு பொழுது போக்கு படம் தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து அம்சங்களையும் இணைத்துள்ளார்கள்.
முதல் பாதி ஓரளவு யூகிக்கக்கூடியதாக உள்ளது.இருந்தாலும் காட்சியின் விரிவுக்காகக் கண்டு ரசிக்கலாம்.
மிகச்சிறந்த ஒளிப்பதிவு.கௌரா ஹரியின் இசை,பின்னணி இசை மின்னூட்டம் பரவிய உணர்வளிக்கிறது.. நகைச்சுவை சரியாக பலனளிக்கவில்லை. இரண்டாம் பாதி நீளமாக உணரவைக்கிறது. ஆனாலும் சாகசங்கள் நிறைந்த விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் அனைத்துக் குறைபாடுகளையும் முற்றிலுமாக மறைக்கின்றன.
மொத்தத்தில், மிராய் திரைப்படம் புராண பிரம்மாண்டத்தையும் நவீன கதைசொல்லலையும் தடையின்றி இணைக்கும் ஒரு சிலிர்ப்பூட்டும் சாகச திரைவடிவம் என்றே கூறலாம்.


