’மெஸன்ஜர்’ திரைப்பட விமர்சனம்

ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, பாத்திமா நஹும், வைஷாலி ரவிச்சந்திரன்,பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவாரவி,லிவிங்ஸ்டன் நடித்துள்ளனர். ரமேஷ் இளங்கமணி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர், இசை அபுபக்கர் எம்,தயாரிப்பு பி.வி. கே பிலிம் பேக்டரி சார்பில் பி. விஜயன்.

சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் கதாநாயகன் சக்திவேலன் அதாவது, ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முயற்சி செய்வதில் தொடங்குகிறது படம். அவருக்குக் காதல் தோல்வியாம் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டும் தருணத்தில் அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ச்சியாக மெசேஜ் வந்து கொண்டிருக்கின்றன.தொந்தரவாக உணர்ந்தவர் என்னதான் இப்போது? என்று திறந்து பார்க்கிறார். அதில், அவசரப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், உங்களை நேசிப்பவர்கள் இந்த உலகில் இருப்பார்கள் என்றும் வந்திருந்தது.அதை விட ஆச்சரியம் அதிர்ச்சி அது சில மாதங்களுக்கு முன்பு இறந்து போன பெண்ணிடம் இருந்து வருகிறது.இறந்து போன பெண்ணிடமிருந்து எப்படி மெசேஜ் வரும் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார்.அப்போது அவருக்குத் தெரியும் விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவை.ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் ஆன்மாவைக் காதலிக்கிறார்.கல்யாணமும் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் வேறு வழி இல்லாமல் அவரது அம்மாவும் அதற்குச் சம்மதிக்கிறார் . இப்படிப் போகும் கதையின் முடிவு என்ன என்பதுதான் 106.28 நிமிடங்கள் கொண்ட ‘மெஸன்ஜர்’ படத்தின் மீதிக் கதை.

இது ஓர் அதீத கற்பனை கொண்ட பேண்டஸி கதை தான் .இருந்தாலும் ஒரு திரில்லர் படத்திற்கு இப்படி ஒரு கதையை யோசித்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

இந்த வித்தியாசமான, சற்று அபயகரமான கற்பனைக்கு ஏற்ற வகையில் தனது பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்துள்ளார் ஸ்ரீராம் கார்த்திக்.அவரைத் தோற்றமும் நடிப்பும் அந்தப் பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.

நாயகியாக ஆனந்தி பாத்திரத்தில்  நடித்திருக்கும் பாத்திமா, பாந்தமான தோற்றத்தில் வந்து அமைதியான நடிப்பில் கவர்கிறார்.நாயகனின் முன்னாள் காதலியாக எளிய தோற்றத்தில் வந்து  தீப்தி பாத்திரத்தில் நடித்திருக்கும் மனிஷா தன் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக கயல்விழி பாத்திரத்தில் நடித்திருக்கும் வைஷாலி,குடும்பப் பாங்கான தோற்றத்தில் வந்து நாயகனை அடைய நினைத்து முடியாமல் விலகிச் செல்கிறார். அவரது பாத்திரம் அனுதாபத்தை அள்ளுகிறது.

ஜீவா ரவி, சப் இன்ஸ்பெக்டராக வரும் லிவிங்ஸ்டன், நாயகனின் தாயாக வரும் பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் நடிப்பு பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உயிர்ப்பு தந்துள்ளது.ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர், கதை மாந்தர்களான குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களை மனதில் பதியும் படி பளிச்சென ஒளிப் பதிவு செய்துள்ளார்.

இப்படி ஒரு கற்பனையில் உருவான திகில் கதையை இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் உருவாக்க நினைத்ததே ஒரு துணிச்சல் தான் .அதற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.இயக்குநரைப் புரிந்துகொண்டு கதையின் பயணத்தில் சரளம் குறையாமல் காட்சிகளை தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரசாந்த்.ஆர்.

பொதுவாக ஆவி சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் அதீத சக்தி கொண்டவையாக காட்டப்படும். இந்தப் படத்தில் வரும் ஆன்மா எளிய ஒரு பெண்ணின் ஆன்மாவாகவே வருகிறது.

திகில் கதை போல் தொடங்கி காதல் கதையாக பரிணமிக்கும் இந்தக் கதை மாறுபட்ட முடிவால் சற்றே ஆச்சரியம் அளிக்கிறது.அவ்வகையில் இந்தக் கதையை அணுகியி ருக்கும்  இயக்குநர் ரமேஷ் இளங்கமணி கவனிக்க வைக்கிறார்.

இயல்பான நடைமுறையில் சாத்தியம் இல்லாத கதையாக இருந்தாலும் அதை ரசிகர்கள் நம்ப வைக்கும் படி தனது திரைமொழியில் சொல்லி இருக்கும் இயக்குநர் ரமேஷ் இளங்கோமணி வித்தியாசமான கதைக்கரு கொடுத்த இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ளார்.

உயிர் வாழும் நாயகனுக்கும் மறைந்து போன நாயகியின் ஆன்மாவுக்குமான காதல் என்கிற வகையில் இந்த மெசஞ்சர் புதிய திரில்லர் அனுபவத்தைத் தருகிறது.