துல்கர் சல்மான், சமுத்திரக்கனி , ராணா டகுபதி, பாக்கியஸ்ரீ போர்ஸ், ரவீந்திரா விஜய் ,ஆடுகளம் நரேன்,நிழல்கள் ரவி, வையாபுரி ,காயத்ரி சங்கர்,
பிரிஜேஷ் நாகேஷ் ,பக்ஸ், பரதன், ஜாவா சுந்தரேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். இசை -ஜானு சந்தர், ஒளிப்பதிவு – டானி சஞ்செஸ் லோபெஸ்.
ஸ்பிரிட் மீடியா -வேஃபேரர் பிலிம்ஸ் சார்பில் ராணா ரகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி. ஜாம் வர்கீஸ் தயாரித்துள்ளனர்.
.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தொடங்கும் கதை, சுதந்திரம் அடைந்த பிறகான காலகட்டத்தில் முடிவது போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் சினிமாவிற்கு எப்படி புகழும் கவர்ச்சியும் கிளர்ச்சியும் இருந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்குகிறார் ஒருவர். அவரை உருவாக்கி வளர்த்தெடுக்கிறார் ஓர் இயக்குநர். ஒரு கட்டத்தில் ‘நான் உருவாக்கிய வளர்த்தவன் நீ ‘ என்று நினைக்கிறார் இயக்குநர்.ஆனால் கதாநாயக நடிகரோ’ நீங்கள் கொடுத்தது வாய்ப்பு தான் வாழ்க்கை அல்ல, என் முயற்சியால் வளர்ந்த எனது புகழுக்காகவே படம் ஓடுகிறது’ என்று நினைக்கிறார். ஒரு தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க, இருவரும் இணைந்து, நின்று போன ஒரு படத்தை மீண்டும் தொடங்குகிறார்கள்.படப்பிடிப்பு தொடங்கியதுமே பிரச்சினை முளைக்கிறது. கதாநாயகியை மையப்படுத்தும் ‘சாந்தா’ என்கிற கதையை ‘காந்தா’ என்று நாயகன் மாற்றுவதிலிருந்து சிக்கல் எழுகிறது.போகப் போக காட்சிகளை மாற்ற வேண்டும் கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று கதாநாயகனின் குறுக்கீடுகளும் மேலாதிக்கமும் தொடர்கின்றன.இதை இயக்குநர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இருவருக்கிடையே ஆணவச் சிக்கல் எழுந்து விஸ்வரூபம் எடுக்கிறது.இந்த மோதல் வலுக்கிறது. இதற்கிடையே ஒரு கொலை நடக்கிறது.அந்தக் கொலையை செய்தது யார் என்று மர்ம முடிச்சு விழுகிறது.இயக்குநர் மீதும் நடிகர் மீதும் சந்தேகம் எழுகிறது .அதற்கு பின்பு இந்தக் கதை ஒரு மர்மக் கதையாக விறுவிறுவென பயணம் செய்கிறது. முடிவு என்ன என்பதுதான் ‘காந்தா’ திரைப்படத்தின் மீதிக் கதை.
‘ரத்தக்கண்ணீர்’ படத்திற்குப் பிறகு ‘காந்தா’ என்கிற பெயர் தமிழ் மக்களிடம் பிரபலம். அந்தக் காலத்தை நினைவூட்டும் வகையில் அப்படிக் ‘காந்தா’ என்கிற பெயரில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது
மலையாளத்தில் வாரிசு நடிகர்களான பகத் பாஸில்,துல்கர் சல்மான் போன்றவர்கள் நடிப்பு தாகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நடிப்புக்குத் தீனி போடும் வகையில் பாத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படித்தான் துல்கர் சல்மானுக்கும் இந்த காந்தா படத்தில் வரும் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பழைய புகழ்பெற்ற நடிகர் கதாபாத்திரத்தில் துல்கர் நடித்துள்ளார்.அவரும் நடிப்புச் சக்கரவர்த்தி என்று கொண்டாடப்படுகிறார். அவரை மக்கள் வழிபடும் அளவிற்கு அவர் புகழ் ஓங்கியுள்ளது.
நடிப்பு மோகம் கொண்ட ஒரு நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் அவர் நிரூபிக்கிறார். இயல்பாக நடிப்பது ஒரு ரகம், நாடகம் போல நடிப்பது மற்றொரு ராகம்,அந்தக்காலத்து இன்னொரு நடிகர் போல் நம்ப வைப்பது இன்னொரு ரகம், இவை அனைத்தையும் அவர் தன் நடிப்பில் காட்டியுள்ளார்.அவரது தோற்றமும் முக பாவனைகளும் உடல் மொழியும் பிரமாதம்.
துல்கர் சல்மான், தனது நடிப்பால் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் ஈர்த்து வசப்படுத்துகிறார்.
கர்வம், கோபம், காதல், ஏக்கம் ஏமாற்றம்,அவமானம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் தனக்கு வாய்த்த நடிப்புத் தருணங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.
படைப்புத் திறனும் கர்வமும் கொண்ட அந்த இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திக்கனி, இதுவரை பார்த்திராத வேறுமுகம் காட்டுகிறார். தனது ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் வகையில் நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார்.கர்வத்துடன் அமர்ந்திருக்கும் போது கூட அந்த நடிப்பு அழகு.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, அந்தக் காலத்து கறுப்பு வெள்ளை காலத்து கதாநாயகிகளை அசப்பில் கொண்டு வரும் வகையில் தோன்றியுள்ளார்.
தோற்றத்திலும் நடிப்பை வெளிப்படுத்தும் விதத்திலும் அவர் ஸ்கோர் செய்கிறார்.மதிப்பிற்குரிய இயக்குநரின் சொல்பேச்சுக் கேட்பதா தன் மேல் காதல் கொண்டுள்ள நாயகனின் வழியைத் தொடர்வதா என்று அவர் திணறுவது நல்ல உணர்ச்சித் தருணங்கள் வெளிப்படும் நடிப்பு.இருவருக்கும் இடையே உள்ள ஆணவச் சிக்கலை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஒரு முதிர்ந்த பாத்திரமாக அவர் பேசுகிறார்.
படத்தில் நடக்கும் கொலையை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக ராணா டகுபதி வருகிறார். அவரது கம்பீரத் தோற்றமும் அலட்சிய அதிகார உடல் மொழி வெளிப்பாடும் அந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தாலும் சில இடங்களில் மீட்டர் தாண்டி ஆணவமிக்க போலீஸ் அதிகாரியாக அவர் சிறப்பாக வெளிப்படுகிறார்.
உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜேஷ் நாகேஷ்,சூழ்நிலைக் கைதியாக ”அண்ணா…அண்ணா…” என்று அழைத்தே தன் பாத்திரத்திற்கு நியாயம் செய்து விடுகிறார். அவரும் தன் இயல்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.
துல்கர் சல்மானின் மனைவியாக வரும் காயத்ரி, நாயகனின் மாமனாராக வரும் நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக வரும் ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ் ஆகியோர் தாங்கள் ஏற்றுள்ள பாத்திரத்தின் அளவு சிறிதாக இருந்தாலும் நடிப்பில் நிறைவை அளிக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜானு சந்தர் , தனது பாடல்களுக்கான இனிய இசை மற்றும் பின்னணி இசை மூலம் அந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.படத்திற்கு ஜீவனாக அவரது இசை அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸின் கேமரா கறுப்பு வெள்ளைக் காலத்திற்குள் நம்மைக் கொண்டு நிறுத்துகிறது.கேமரா கோணங்களும் வித்தியாசமாகவும் ரசிக்கும் படியும் உள்ளன.
முதல் பாதியின் கதை ஒரு பெரிய கேன்வாஸில் விரித்து நம்மை அருகிலிருந்து பார்க்க வைக்கிறது .இரண்டாவது பாதியில் கதை ஒரு திரில்லர் ஆக மாறுகிறது.இந்தப் படத்தின் அளவு நீளமாகத் தோன்றலாம்.ஆனால் அது கதை தேர்ந்தெடுத்துக் கொண்ட நீளம். படம் பார்க்கும்போது அந்த உணர்வை ஏற்படுத்தாது. எனவே அதை புறந்தள்ளிவிட்டு ரசிக்கலாம்.
காட்சிகளை நேர்த்தியாகத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் லேவெல்லின் அந்தோணி கொன்சால்வேஸ்.
வேறொரு காலகட்டத்தைச் சித்தரிக்கும் இந்தப் படத்தில் கலை இயக்குநரது பங்கு சிறப்பாக இருக்க வேண்டும். அந்தப் பங்கை மகத்தானதாகச் செய்துள்ளார் இயக்குநர் ராமலிங்கம். அவரது கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அரங்கமைப்பு அந்தக் காலத்து ஸ்டுடியோவுக்குள் நம்மைக் கொண்டு நிறுத்திப் படப்பிடிப்பை நேரில் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் செல்வமணி செல்வராஜ், தமிழ் சினிமாவில் வாழ்ந்த பழம்பெரும் நடிகர் ஒருவரது கதாபாத்திரத்தைக் கருவாக வைத்துக்கொண்டு எழுதியிருக்கும் கற்பனைக் கதை , அதற்கான திரைக்கதை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கின்றன.ஆனால் ஒரு பிரபல நடிகரை வைத்து இந்தக் கதை உருவாக்கி இருப்பதாகத் தோன்றினாலும் பல்வேறு நடிகர்களின் முகங்களும் குணச்சித்திரங்களும் அந்தப் பாத்திரத்தில் பிரதிபலிக்கின்றன.
முதல் பாதியை எடுத்துக் கொண்டால் ஒரு திரைப்படத்தில் இயக்குநர், நாயகன், நாயகி என மூன்று கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு தனது அழகான திரைக்கதையால் ஈர்க்கும் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், அந்தக் கதை மாந்தர்கள் மூலம் சில நாடகீயத் தருணங்களை வெளிப்படுத்தி இருப்பது போல் தோன்றினாலும் .அந்த காலகட்டத்தில் நின்று நாம் அதை ரசிக்க வேண்டும்.இரண்டாவது பாதியில் கதையை வேறொரு திசை வேகம் எடுத்து அனைவரையும் இருக்கை நுனிக்குள் இறுக்கமாக அமர வைக்கிறார்.
தேவையற்ற பிரம்மாண்டம், பின்புலக் காட்சிகள் என்று காட்சிகளில் மிரட்சியை ஊட்டாமல் நடிப்புக் கலைஞர்களின் உன்னத நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாகி உள்ளது.அந்த வகையில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோரது நடிப்பு பார்வையாளர்களுக்குப் பெரிய விருந்துதான்.
மொத்தத்தில், ‘காந்தா’ திரையில் புதிய திரைப்பட அனுபவம்தான்.அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.


