‘இரவின் விழிகள்’ திரைப்பட விமர்சனம்

மகேந்திரன், நீமா ராய், நிழல்கள் ரவி ,சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சேரன்ராஜ் ,ஆன்ஸி சிந்து, அஸ்மிதா நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியுள்ளார் சிக்கல் ராஜேஷ்,ஒளிப்பதிவு: பாஸ்கர் ,எடிட்டர் : ஆர். ராமர், இசை :ஏ .எம் அசார், பாடல்கள்: அரவிந்த் அக்ரம், மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிப்பு பி. மகேந்திரன்.

ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் வெளியீடு.

நாட்டில் கொசுக்களை விட யூடியூப் தளங்கள் அதிகமாகிவிட்டன.அப்படிச் சமூக ஊடகங்களில் அளவுக்கு மீறியும் வெறுப்பேற்றும் வகையிலும் வரம்பு மீறியும் சுய தம்பட்டம் அடித்தும் , கண்ட கண்ட பதிவுகளைப் போட்டும் மக்களை வெறுப்பேற்றுகிறார்கள்.பணத்திற்காகவும் ,பார்வைகள் வரவேண்டும் என்பதற்காகவும் எல்லை மீறி ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்களைப் பட்டியல் போட்டுக் கொண்டு வரிசையாகப் போட்டுத் தள்ளுகிறார் ஒரு  முகமூடி போட்ட மர்ம மனிதர்.கொலையாளியைத் தேடி போலீஸ் மோப்பம் பிடித்துத் துப்புத் துலக்குகிறது. அவர் யார்? அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்பதைச் சொல்வதே
126.51  நிமிடங்கள் கொண்ட ‘இரவின் விழிகள்’ படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் கர்ணா பாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன்,கதாநாயகன் போல் வருகிறார். அவர் ஓர் அறிமுக நடிகர்தான் என்றாலும் அலட்டாமல் நடித்துள்ளார் .

நாயகியாக ரேஷ்மா பாத்திரத்தில் நடித்திருக்கும் நீமா ராய் சுமாரான தோற்றம் தான் என்றாலும் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார். தனக்குக் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்.கவர்ச்சியும் காட்டி பார்வையாளர்களுக்கு மென்அதிர்ச்சி தருகிறார்.

படத்தை இயக்கியிருக்கும் சிக்கல் ராஜேஷ் கருப்பு கதாபாத்திரத்தில் வருகிறார்.அவரது பாத்திரம் திரைக்கதைக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது. நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்கள் அனுபவ நடிப்பின் மூலம் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம். “கருப்பு…” பாடல் கவனிக்க வைக்கும் வகையில் உள்ளது. அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் வணிகரீதியான அம்சமாக உள்ளது.பின்னணி இசையிலும் குறைசொல்ல ஒன்றும் இல்லை.

படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு வெளிப்புறங்களில் காட்டுப் பகுதியில் இருள் சூழ்ந்த இடங்களில் நடைபெற்றுள்ளது.ஒளிப்பதிவாளர் பாஸ்கர் காட்சிகளைத் தெளிவாகப் படமாக்கியுள்ளார்.ஒரு திரில்லர் படத்துக்கான உணர்வைச் சரியாகக் காட்சிகளில் கொண்டு வந்துள்ளார்.

எடுத்துக்கொண்ட எளிமையான கதைக்கு ஏற்ற வகையில் படத்தைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர்.

கொலையாளிகளைத் தேடி வரும் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் ,கான்ஸ்டபிள் சிஸ்டர் மனோகர் இருவரும் இணைந்த தேடுதல் காட்சிகளின் நீளம் அலுப்பூட்டுகிறது.

சமூக ஊடகங்களில் அட்டகாசம் செய்பவர்களுக்குச் சரியான சாட்டையடி கொடுத்துள்ளார் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.தங்கள் பொன்னான நேரத்தைச் சமூக ஊடகங்களில் விரயமாக்கும் போக்கையும் கண்டித்துள்ளார்.

சமூக ஊடகப் புள்ளிகள் கொலை செய்யப்படும் வரிசையில் நாயகன், நாயகி சிக்கிக் கொள்வது, தவிப்பது பரபரப்பூட்டுகின்றன.அதே நேரம் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்குக் கண்ணோரம் ஈரம் வரவழைப்பவை.

பிரம்மாண்ட செலவுகள் இல்லாமல் எளிமையான கதையை எடுத்துக்கொண்டு இக்காலத்துக்கு ஏற்ற ஒரு கதையைப் படமாக உருவாக்கி இருக்கிறார் சிக்கல் ராஜேஷ்.மேலும் சில நகாசு வேலைகள் செய்திருந்தால் இந்தப் படம் இந்தப் பட்ஜெட்டிலும் ஒரு பரபரப்பான படம் என்ற பெயரைப் பெற்றிருக்கும்.

மொத்தத்தில், ‘இரவின் விழிகள்’ இன்றைய சமூக ஊடகப் போக்கைச் சிந்திக்க வைக்கும் படம்.