‘BP180’ திரைப்பட விமர்சனம்

தன்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, கே. பாக்யராஜ் , அருள்தாஸ்  தமிழ், நயானா சாய் ,ஸ்வேதா டோரத்தி,ஜாக் அருணாசலம், ரங்கா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கிருக்கிறார் ஜே பி . ஒளிப்பதிவு -ராமலிங்கம், இசை – ஜிப்ரான் .

அரசியல்வாதி பாக்யராஜின் மகள் எதிர்பாராத ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை வருகிறது. ஆனால் தனது பாசமுள்ள மகளை மார்ச்சுவரி கொண்டு சென்று உடலைக் காயப்படுத்துவது என்பது அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. மகளைக் காயப்படுத்தாமல் போஸ்ட்மார்ட்டம் நடைமுறைகளை பெயரளவுக்கு முடிக்க வேண்டும் என்கிறார் பாக்யராஜ். ஆனால் சட்டப்படி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டராக இருக்கும் தன்யா ரவிச்சந்திரன் கூறுகிறார். இதைத் தடுப்பதற்கு பாக்யராஜ் அவருக்கு கீழே உள்ள தாதாக்கள் உதவியை நாடுகிறார் .அப்படி வருகிற டேனியல் பாலாஜி இதை ஒரு கௌரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்டு பிரச்சினையைப் பெரிதாக்கி அதைத் தடுக்க நினைக்கிறார். அதனால் தன்யா ரவிச்சந்திரனுக்கும் அவருக்கும் பகை ஏற்படுகிறது .உன் குடும்பத்தையே அழிக்கிறேன் என்று சவால் விட்ட தாதா டேனியல் பாலாஜியை தன்யா எப்படி எதிர்கொள்கிறார்? முடிவு என்ன என்பதுதான்BP 180 படத்தின் மீதிக்கதை.
ஒரு மனிதனுக்கு ரத்த அழுத்தம் -பிபி 180 வரை செல்லக்கூடாது, அதையும் தாண்டினால் ஆபத்தான கட்டம் என்பதால் அந்த தலைப்பை இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு விறுவிறு திரில்லராக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

நாம் மருத்துவமனைப் பின்னணிக் கதைகளையும் பார்த்திருக்கிறோம். பிரேத பரிசோதனைகளையும் பார்த்திருக்கிறோம். பழிவாங்கல்களையும் பார்த்திருக்கிறோம்.ஆனால் இந்தப் படத்தை ஒரு விறுவிறுப்பான களத்தில் அமைத்துப்படம் பார்ப்பவர்களை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து மிரட்டி உள்ளார் மிஷ்கினின் உதவியாளர் ஜே பி .

படத்தின் ஆரம்பத்தில் டேனியல் பாலாஜியின் கொடூரத்தைக் காட்டும் வகையில் காட்சிகள் வருகின்றன. பாக்யராஜ் மகள் விபத்திற்குப் பிறகு வேறு திசையில் செல்கிறது கதை. போஸ்ட்மார்ட்டம் பிரச்சினையே படத்தில் பூதாகரமாக மாறி படத்தைப் பதற்றமான சூழ்நிலைக்குக் கொண்டு செல்கிறது.

இந்தப் படத்தில் அர்னால்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜி இறந்த பிறகும் பேசப்படுகிறார்.அந்த அளவிற்கு தனது கொடூர நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தைரியமான தெளிவான நேர்கொண்ட பார்வை உள்ள அரசு டாக்டர் தங்கமாக தன்யா ரவிச்சந்திரன் அசத்தியுள்ளார்.நோயாளிகளிடம் பரிவு கொள்வதும் சிறுமை கண்டு பொங்குவதும் பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளாமல் எதிர்கொள்வதும் என அந்தப் பாத்திரத்தில் அவர் மிடுக்காக வந்து மிளிர்கிறார்.பாசமுள்ள தந்தையாக வந்து தனது மகளை இழந்து உருகும் பாக்யராஜும் நெகிழ வைக்கிறார்.

எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா ஆகியோர் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார்கள்.டேனியல் பாலாஜியின் மனைவியாக வந்து முகம் காட்டாத அந்த நடிகை, படம் முழுக்கச் சுற்றித் திரியும் அடியாட்கள் மருத்துவமனை, ஊழியர்கள், போலீசார்கள் என அனைவரும் இயற்கையான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

படத்தின் கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது ராமலிங்கம் செய்துள்ள ஒளிபதிவு.காட்சிகள் அதிகமாக இரவு நேரத்தில் நடந்தாலும் அவரது ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் தன்மையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

தனது பின்னணி இசையின் மூலம் படத்தின் வேகத்தை அதிகரித்துள்ளார் இசை அமைப்பாளர் ஜிப்ரான் .

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போதாமை, நோயாளிகளின் சிரமங்கள் என நிலவும் அலங்களைச் சரியாகக் காட்டியுள்ளார் இயக்குநர். 

அரசியல்வாதிகள் போலீஸ் ரவுடிகள் தாதாக்கள் போன்றவர்களுக்கிடையே உள்ள வலைப்பின்னல் உறவுகளை காட்சிகள் ஆக்கியுள்ளார் இயக்குநர்.

மனிதாபிமானத்தின் பெருமையையும் மன்னிப்பின் மேன்மையையும் உயர்த்திப் பிடித்துள்ள இந்த படம் ஒரு முழு நீள த்ரில்லர் படமாக ரசிகர்களைக் கவரும் என்பதில் சந்தேகம்
இல்லை