கோதண்டம் & கோ மற்றும் லட்சி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு. ஏ எழுதி இயக்கிய திரைப்படம் பருத்தி. இவர் ஏற்கனவே பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் கே பாரதி அவர்களை வைத்து ‘வளையல்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ரஞ்சித் வாசுதேவன் இசையமைக்க ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இத்திரைப்படம் பெரும் பொருட்செல்வில் படமாக்கப்பட்டுள்ளது இதன் படப்பிடிப்பு ஓசூர், தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் மற்றும் திரைப் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
கிராமத்து வாழ்வியலையும் உணர்வுமிக்க போராட்டத்தையும் இயக்குநர் இத்திரைப்படத்தில் கொண்டு வந்துள்ளார் .சமூகச் சிக்கல்களில் சிக்கித் தவித்து பால்ய பருவத்தைக் கடக்கும் சிறார்களின் மனநிலையை எதார்த்தத்துடனும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் மண்மணம் மாறாமல் இயக்குநர் எடுத்திருக்கிறார் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் படமாக அமையும்.
இப்படம் வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் திருமலை, நடிகர் உதயா, நடிகை சோனியா அகர்வால் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நடிகர் உதயா பேசுகையில்,
“சோனியா அகர்வாலை எனக்கு 7G ரெயின்போ காலனி திரைப்படத்தில் இருந்து மிகவும் பிடிக்கும். முதன் முறையாக கிராமத்து கதைக் களத்தில் அவரை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் இயக்குநர் திருமலை பேசுகையில், ”தமிழ் சினிமாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பெரிய திரைப்படத்திற்கு பைனான்ஸ் போன்ற வசதிகள் எளிதாக கிடைக்கின்றன. சிறிய திரைப்பட தயாரிப்பாளர்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகி வருகிறார்கள். சிறிய தயாரிப்பாளர்களுடைய நிலைமையைக் காக்கக் கூடிய வகையில் வரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நல்ல தலைவர்கள் கிடைக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் திரைப்படம் வெளியான உடன் ஆன்லைனில் வருவதில்லை. இருப்பினும் தமிழில் திரைப்படம் வெளியான அன்று இரவிலேயே திரைப்படம் இணையதளத்தில் வந்துவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.
சோனியா அகர்வால் பேசுகையில், “முதன்முறையாக கறுப்பு நிற ஒப்பனையுடன் நடித்துள்ளேன். இயக்குநர் என்னிடம் வந்து கதை சொல்லும் போதே, வேறு யாராவது ஒப்பந்தம் செய்யலாமே? என்னை எதற்காக ஒப்பந்தம் செய்கிறீர்கள்? என கேட்டேன். அதற்கு அவரோ என் மீது நம்பிக்கை இருப்பதாகவும், என்னிடம் இருக்கும் இயல்பான நடிப்பு நிச்சயம் திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். நிச்சயமாக எல்லோருக்கும் விருப்பமான படமாக அமையும்” என்றார்.


