விக்ரம் பிரபு ,எல். கே .அக்ஷய் குமார் ,அனிஷ்மா அனில் குமார், ஆனந்தா தம்பிராஜா,மூணாறு ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மூலக்கதை இயக்குநர் தமிழ்,திரைக்கதையை இயக்குநர் தமிழுடன் இணைந்து அமைத்துப் படத்தை இயக்கியிருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி.ஒளிப்பதிவு : மாதேஷ் மாணிக்கம்,இசை : ஜஸ்டின் பிரபாகரன்,படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு: ராகவன் சஞ்சீவி
ஆடை வடிவமைப்பு: வர்ஷினி சங்கர்,நடன அமைப்பு: லீலாவதி குமார்,சண்டை அமைப்பு: பி.சி. ஸ்டண்ட்ஸ்,தயாரிப்பு நிர்வாகி: ஆர்.எஸ். வெங்கட், நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: அருண் கே, மணிகண்டன்,செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார்.
கொலைக் குற்றவாளியாகக் கருதப்படும் விசாரணைக் கைதி அப்துல் ரவூப் என்பவனை,கதிரவன் என்கிற தலைமைக் காவலர் உள்ளிட்ட காவலர் குழு வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு ஒரு பேருந்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்கிறது.
பேருந்து ஓரிடத்தில் நிற்கும்போது உடல் உபாதை கழிக்க வேண்டும் என்று சொல்கிறான் அப்துல். தப்பித்து விடுவான் என்கிற எச்சரிக்கை உணர்வு இருந்தாலும் மனிதாபிமானத்துடன் அவனை அனுமதிக்கிறார்கள்.வெளியே வந்தவனை பேருந்தில் ஏற்றுகிறார்கள். இதற்கிடையில் வெட்ட வெளியில் சிறுநீர் கழிக்கச் சென்ற ஒரு காவலருக்கும் அருகில் நின்ற உள்ளூர் வாசிகளுக்கும் வாய்ப்பேச்சு மோதலாக முற்றிக் காவலரைக் தாக்குகிறார்கள். இதை அறிந்த காவலர் குழு பதறி அங்கே ஓடி வந்து அவரை மீட்கிறது.திரும்பி வந்து பார்த்தால் அதற்குள் அந்தப் பேருந்து புறப்பட்டுப் போய் விடுகிறது . துரத்தி நிறுத்திவிட்டுப் பார்த்தால் அந்தக் கைதி தப்பி விடுகிறான், அதுவும் கையில் துப்பாக்கியுடன். பரபரப்பு பற்றிக்கொள்கிறது.இந்த இக்கட்டான நெருக்கடியான சூழலில் தலைமைக் காவலர் கதிரவன் மற்றும் அவரது குழுவினர் பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறார்கள்? தப்பிச்சென்ற அப்துல் என்ன செய்கிறான்? அவனது முன் கதை என்ன? என்பதுதான் ‘சிறை’ திரைப்படத்தின் மீதிக் கதை.
பொதுவாக ஒரு படம் தொடங்கி கதை வளர்ந்து நகர்ந்து விரிந்து ஒரு கட்டத்தில் தான் விறுவிறுப்பு உச்சத்துக்குச் செல்லும். ஆனால், இப்படம் தொடங்கியதில் இருந்து விறுவிறுப்புணர்வுடன் கதை நகர்கிறது.குற்றவாளி துப்பாக்கியுடன் தப்பிக்கிற கட்டத்தில் இடைவேளை வருகிறது. அதுவரை நீரோட்டம் போல் சென்று கொண்டிருந்த கதை பிறகு டாப் கியரில் வேகம் எடுக்கிறது.
முதல் பாதியில் சில முன் கதைக் காட்சிகள் வருகின்றன. ஆனால் இரண்டாவது பாதியில் ஏகப்பட்ட காட்சிகளையும் உணர்வுகளையும் வர்ணஜாலத் தோரணம் கட்டி நம்மைக் கலைடாஸ்கோப் அனுபவத்தில் தள்ளுகிறார் இயக்குநர்.1997 என்றும் 2003 என்றும் கதை தாவித்தாவிச் சென்றாலும் சற்றும் குழப்பம் இல்லை.
இதுவரை பார்த்த ஆயிரக் கணக்கான போலீஸ் கதைகளில் சூத்திரம் போல் சில காட்சிகள் இருக்கும்.போலீஸ்காரர்களுக்கான பல தருணங்கள் அச்சு வார்ப்பு போல ஒரே டெம்ப்ளேட்டாக இருக்கும்.இதில் போலீஸ்காரர்கள் கூட ரத்தமும் சதையும் உள்ள மனிதர்கள்தான், அவர்களுக்கும் சாமானிய மனித உணர்வுகள் உண்டு. பணியழுத்தங்கள் அவர்களுக்குள் உண்டு.காக்கி சட்டைக்குள் உள்ள கருணை உள்ளம் கடுமை மீறிய மனிதாபிமானம் போன்றவற்றைக் காட்சிகள் மூலம் நம்பகத் தன்மையுடன் சித்தரித்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல படத்தின் நாயகி கலையரசியின் அக்கா கணவர் பாத்திரத்தின் மூலம் குடிகாரர்களின் உளவியல் காட்டப்பட்டுள்ளது.தங்கள் குறைகளை மறைக்க மனைவிமீது அவதூறு பேசுவதும் பழி போடுவதும் என்கிற தன்மை வெளிப்பட்டு உள்ளது.
மனிதர்களின் ஒவ்வொரு நிலையிலும் அவர்களுக்குள்ளே எழுந்து வரும் ஆணவம், கனிவு, இழிவு என அனைத்தையும் நுணுக்கமாகக் காட்டியுள்ளார்கள்.
’டாணாக் காரன்’படத்தில் பயிற்சிக் காவலராக நடித்த அதே விக்ரம் பிரபு தான் இதிலும் கதிரவன் பாத்திரமாக காக்கி சட்டை அணிந்துள்ளார். இருந்தாலும் அவரது நடிப்பு வேறு ஒரு தளத்துக்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே துறை ரீதியான விசாரணை வளையத்தில் நின்று கொண்டிருக்கும் விக்ரம் பிரபு பாத்திரம் அவரது மனசாட்சிப்படி , அதையும் மீறி மனிதாபிமானம் காட்ட முயலும் அவரது குணச்சித்திரம் நன்று. இயல்பின் தடம் புரளாமல் அந்தப் பாத்திரத்திற்கு ஒளி கூட்டி உள்ளார் விக்ரம் பிரபு. நீதிமன்ற வளாகத்தில் அடுத்த முறை விசாரணை என்றதும் அப்போதும் நீங்களே வரவேண்டும் என்று அப்துல் கேட்கும் ஒரு காட்சிக்கான தருணத்தில் ஒரு வசனம் பேசி இருக்கலாம், வார்த்தைகள் பேசி இருக்கலாம், ஆம் என்று கூறி இருக்கலாம் ,ஆனால் ,அவர் வாய் திறந்து பதில் கூறினால் குற்றவாளிக்கு உதவியது போல ஆகிவிடும். எனவே அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் ம் என்று மூக்கொலி எழுப்புவார் .அதில் தான் எவ்வளவு நுட்பம்.நடித்த அவருக்கும் அந்தக் காட்சியை உருவாக்கிய இயக்குநருக்கும் பாராட்டு கூறாமல் இருக்க முடியாது இது ஒரு சின்ன உதாரணம் தான்.இப்படிப் பல உள்ளன.
படத்தில் அப்துல் ரவூப் என்ற பாத்திரத்தில் கொலைக் குற்றம் செய்த கைதியாக வருகிற அறிமுக நடிகர் அக்ஷய் குமார் ஒரு புதுமுகம் என்று நம்ப முடியாத அளவிற்கு மிக நேர்த்தியாக நடித்து,அந்த பாத்திரமாகவே வெளிப்பட்டுள்ளார் என்றே கூற வேண்டும்.
அப்துல்லின் காதலியாக கலையரசி பாத்திரத்தில் நடித்துள்ள அனிஷ்மா அனில் குமார் துறுதுறு தோற்றம், எப்போதும் அழுது மூக்கு சிவந்து கண்ணீர் சொரியும் துயரத்தில் இயல்பான நடிப்பு என்று பாத்திரமாக வெளித் தெரிகிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக காதலும் கடமையும் கலந்த போலீஸ்காரர் பாத்திரத்தில் வரும் ஆனந்தா இயல்பாக வருகிறார். மூணாறு ரமேஷ் ஏற்றுள்ள காதர் பாஷா என்கிற பாத்திரத்தின் மூலம் முஸ்லிம்களைப் பார்க்கும் சமுதாயத்தின் பார்வையும் இதில் காட்டப்பட்டுள்ளது.
படத்தில் யாருமே கொடியவர்கள் இல்லை,ஆனாலும் அந்தந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படும் மன உணர்வுகள் தான் குணச் சித்திரத்தை வெளிப்படுத்துகிறது என்ற வகையில் பாத்திரங்களின் சித்தரிப்பு உள்ளது.படத்தில் நாயகன், வில்லன் என்கிற கட்டமைப்பு இல்லாத வகையில் தன் போக்கில் செல்லும் வகையில் திரைக்கதை உருவாகி உள்ளது. அந்த வகையில் படத்தில் உள்ள அனைத்து பாத்திரங்களுமே நேர்நிலை எதிர்மறை குணங்கள் வெளிப்படுத்தும் படி சந்தர்ப்பங்கள் அமைக்கப்பட்டு காட்சிகள் உள்ளன.
படத்தில் பின்புலக் காட்சிகளுடன் கதாபாத்திர உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாதேஷ் மாணிக்கம் செய்துள்ள ஒளிப்பதிவு காட்சிகளை உணர்வு நோக்கில் முன்னிறுத்துகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் படத்திற்கு உயிரூட்டிப் பலம் சேர்த்துள்ளார். பிலோமின் ராஜின் படத்தொகுப்பு சற்றும் தொய்வில்லாமல் படத்தைக் கொண்டு செல்கிறது.குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை வெளிப்படுத்தி உள்ள விதம் சுவாரசியம். இப்படி ஒரே காட்சியை முன்பின் வரிசை மாற்றிக் காட்டி சுவாரசியம் கூட்டி உள்ள இடங்கள் ரசிக்கத்தக்க வை.
பல முதிர்ந்த காட்சிகளின் மூலம் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி நம்பிக்கை தரும் இயக்குநராக வெளிப்பட்டுள்ளார்.
படத்தின் இறுதியில் காவலர் பயிற்சி நிலையத்தில் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் போது விக்ரம் பிரபு கூறுகிறார்,
“நீங்கள் பயிற்சிக் காலம் முடித்து பணி புரியும் காலங்களில் எளிய மக்கள் கவலையுடன் கண்ணீருடன் வந்து நின்றால்
ஒரு தோழராக சகோதரராக உங்களுக்குள்ள அதிகாரத்தின் மூலம் அவர்களது கண்ணீரைத் துடைக்க முடியும் என்றால் அதைச்செய்து பாருங்கள். அதில் கிடைக்கும் மன நிறைவு வேறு எதிலும் கிடைக்காது” என்கிற செய்தியைச் சொல்கிறார்.
இது இந்தச் சிறை திரைப்படத்தின் மூலம் அனைத்துத் துறை அதிகார வர்க்கத்துக்கு மட்டுமல்ல சக மனிதருக்கும் சொல்லப்படும் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் ’சிறை’ ஓர் உணர்ச்சிகரமான திரைச்சித்திரம் எனலாம்.


