‘ஜாக்கி’ திரைப்பட விமர்சனம்

யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி,  மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி , பாத்மென், யோகி , சாய்தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் பிரகபல்.இவர் ஏற்கெனவே ‘மட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்றுப் புகழ்பெற்றவர். ஒளிப்பதிவு -என் எஸ் உதயகுமார்,படத்தொகுப்பு என் பி ஸ்ரீகாந்த், இசை சக்தி பாலாஜி, பி கே 7 ஸ்டுடியோ எல்எல் பி தயாரித்துள்ளது. தயாரிப்பு பிரேமா கிருஷ்ணதாஸ், சி. தேவதாஸ், ஜெயா தேவதாஸ்.

ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு எல்லாம் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஆட்டுக் கிடா சண்டை பற்றிய கதையை பின்புலமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

மதுரையில் கிடா சண்டை நாயகர்களுக்கு இடையே நடக்கும் மோதல்தான்  கதையின் பிரதான  மையம். அப்படி கிடா சண்டை நடந்த பிறகு போட்டியில் வெற்றி பெற்ற கிடா உரிமையாளருக்கு ஜாக்கி என்கிற பட்டம் கிடைக்கும்.தங்கள் ஆட்டுக்கிடாக்களை மோத விட்டு அந்த பட்டத்தைப் பெறுவதற்கு நாயகன் யுவன் கிருஷ்ணாவும் எதிர்மறை குணம் கொண்ட ரிதன் கிருஷ்ணாசும் முயற்சி செய்கிறார்கள்.போட்டி என்று வந்து விட்டால் யாராவது ஒருவர் தானே வெற்றி பெற முடியும் ?ஆனால் தோல்வி அடைந்தவர் இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில்லை இருவருக்குள்ளும் பகைமை தான் வளரும்.அப்படித்தான் கதையிலும் பகை வளர்கிறது. இதை விளையாட்டாகக் கருதாமல் பெரிய கெளரவப் பிரச்சினையாக ஆணவப் போட்டியாகக் கருதுவதால் தான் பகைமையும் குரூரமும் வெளிப்படுகின்றன.

போட்டி சண்டை என்று வளர்க்கப்படும் ஆட்டுக் கிடாக்கள், அதன் பின்னணியில் இருக்கும் மனிதர்களின் குரூரம், வக்கிரம், வன்மம், பழிவாங்கும் உணர்ச்சி போன்றவற்றை உணர்ச்சிமிக்க காட்சிகள் ஆக்கி இந்த 145 நிமிடங்கள் கொண்ட ‘ஜாக்கி’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கதை பேசும் பாத்திரங்களாக ராமர் பாத்திரத்தில் யுவன் கிருஷ்ணாவும் ,கார்த்தியாக ரிதன் கிருஷ்ணாசும், மீனாட்சியாக அம்மு அபிராமி யும் காளியாக காளியும் வாஸ்தவியாக மதுசூதன் ராவும் நடித்துள்ளனர். யுவன் கிருஷ்ணாவுக்கும் ரிதன் கிருஷ்ணாசுக்கும் இடையில்தான் பகைமையும் மோதலும் என்றாலும் நடுவில் மத்தியஸ்தம் செய்பவராக மதுசூதன் ராவ் வருகிறார்.பல படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களில் வந்துள்ளவர் இதில் கம்பீரமான பெரிய மனிதராக வருகிறார்.

போட்டியில் தோற்றுப் போன ரிதன் கிருஷ்ணா சின் ஆட்டை யுவன் கிருஷ்ணா கேட்கும் போது அவர் செய்யும் செயல் அதிர்ச்சியைத் தருகிறது. அது அவரது மனக்குரூரத்தையும் வெளிப்படுத்துகிறது. ஷேர் ஆட்டோ ஓட்டுநராக வரும் யுவன் கிருஷ்ணாவுக்கும் அம்மு அபிராமிக்கும் இடையில் காதல் மலர்கிறது. இருவருக்குள்ளும் நிலவும் பொருத்தம் காட்சிகளில் தெரிகின்றன.இவர்கள் தவிர காளி, சித்தன் மோகன், சரண்யா ரவி, பாத் மென்,யோகி , சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா என்று பிற பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிப்புக் கலைஞர்களும் தங்கள் வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.

 

கிடா சண்டையை விளையாட்டாகக் கருதாமல் வெறியாக நினைத்து பழக்கி வளர்க்கும் இருவர் இடையே நடக்கும் மோதல் தீப்பறக்கும் காட்சிகளில் தெரிகின்றன.அதன் விளைவாக நடக்கும் வன்முறையும் ரவுடியிசமும் படத்தை ரணகளமாக்குகின்றன.
படத்தில் கிடாக்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் பொறி பறக்கின்றன என்றால் அது சார்ந்து தனது ஆணவத்தை தூக்கி நிறுத்த இருதரப்பு மோதிக்கொள்ளும் காட்சிகளில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. இரண்டு ஆடுகள் சண்டை போடும்போது எழுப்புகிற ஒலி நம் நெஞ்சில் முட்டுகிறது.
ஆடு சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுப்பதற்கு நிறையவே மெனக்கட்டிருக்கிறார்கள்.ஆடுகளுக்குப் பயிற்சி தரும் காட்சிகள் படம் பார்க்கும் ரசிகர்களுக்குப்புதிய அனுபவம்.

தமிழகத்தைச் சேராத வேறொரு மொழியை சார்ந்த படக் குழு இந்தப் படத்தை உருவாக்கி இருந்தாலும் மதுரை மண்ணின் மணமும் வட்டார வழக்கும் இயல்பாக இருக்கும்படி செய்துள்ளனர்.
பொதுவாகக் கிராமியம் சார்ந்த கதைகளில் காட்சிகளில் ஒரு சிக்கனம் தெரியும் .அதில் நாடகீயத் தருணங்களும் வெளிப்படும்.ஆனால் இதில் முதிர்ச்சியான திரை உருவாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவும் இசையும் கைகோர்த்துப் பயணம் செய்துள்ளன. ஒளிப்பதிவாளர் என் எஸ் உதயகுமார்,மற்றும் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி இருவருமே இணைந்து பயணித்துள்ளார்கள்.

தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் காட்சிகளை தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் என் பி ஸ்ரீகாந்த்.

சினிமா ஜோடனையின்றிக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது இப்படத்தின் நிறத்தை வேறு விதமாகக் காட்டுகிறது. மொத்தத்தில் எளிய கதையை எடுத்துக் கொண்டு பார்க்கும் விதத்தில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.’

‘ஜாக்கி’ போரடிக்காத சினிமா அனுபவம்.