‘காந்தி டாக்ஸ்’ திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி,அதிதி ராவ் ஹைதாரி,  சித்தார்த் ஜாதவ் நடித்துள்ளனர்.கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு கரண்,இசை ஏ .ஆர் . ரகுமான்.தயாரிப்பு ஜீ ஸ்டுடியோஸ்,
வசனம் இல்லாமல் ‘பேசும் படம்’ ஒரு காலத்தில் வந்துள்ளது. இப்போது ‘காந்தி டாக்ஸ்’ வந்துள்ளது.
பசி வர அங்கே மாத்திரைகள், பட்டினியால் இங்கு யாத்திரைகள் என்று சொல்லும் அளவிற்கு இரு வேறு விதமான பொருளாதாரச் சூழல் கொண்ட பின்னணியில் ,ஒரு பக்கம் மும்பை குடிசைப் பகுதியில் சிறிய கோழிக்கூண்டு மாதிரியான ஒரு குடியிருப்பில் வயதான நோயாளி அம்மாவுடன் வாழ்பவர் விஜய் சேதுபதி.வறுமையும் அலுப்பும் சலிப்பும் என்று அவர் சிரமப்படுகிறார் ,வேலை தேடி அலைகிறார். இந்த நிலையில் எதிர்விட்டு ஜன்னல் அதிதிராவுடன் காதல் வேறு.இன்னொரு பக்கம் ஒரு தொழிலதிபராக இருக்கிறார் அரவிந்தசாமி .காலத்தின்கோலம் செய்த விபத்துகளால் குடும்பத்தையும்  சொத்துக்களையும் இழந்து தவிக்கிறார். அவரிடம் உள்ள பணத்தைக் கொள்ளை அடிக்க விஜய் சேதுபதி அவரது பங்களாவுக்குள் நுழைகிறார்.அரவிந்த் சாமியோ அந்த பங்களாவைக் கொளுத்த முயற்சி செய்கிறார். அதற்கு பின் வேறு ஒரு திட்டம் உள்ளது. அங்கே இன்னொரு திருடன் திருட வருகிறான் விஜய் சேதுபதி போல. அவர்களுக்கு என்ன ஆனது என்பது தான் ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் கதைக் கரு.
பணத்தில் வசனங்கள் இல்லை என்றாலும் காந்தி டாக்ஸ் என்பதில் காந்தி என்பது ரூபாய் நோட்டைக் குறிக்கும் விதமாகப் பணம் படுத்தும் பாட்டையே காந்தி பேசுகிறார், அதாவது பணம் பேசுகிறது. அது எந்த அளவிற்குச் செல்கிறது என்பதைக் கதையாக்கியிருக்கிறார்கள்.
வறுமையைச் சுமந்து கொண்டு நோயாளி அம்மாவுடன் வாழ்க்கைக்காகப் போராடும் பாத்திரத்தில் வருகிற விஜய் சேதுபதி தனது நடிப்பில் குறை வைக்கவில்லை. எதிர்வீட்டு அழகியைக் காதலிக்கும் தருணங்களிலும் அவரது நடிப்பு  வெளிப்படுகிறது. நேர்காணல்கள் சென்று உதாசீனங்களை சந்திக்கும் போதும், காதலியைப் பெண் பார்க்கும் போது, கத்தி வாங்க சந்தைக்குச் செல்வது, அம்மாவுக்காக பக்கத்து வீட்டு உணவைத் திருடுவது, அரசியல்வாதியிடம் ஆவேசமாக சினம் கொள்வது எனப் பல இடங்களில் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அரவிந்த்சாமி பங்களாவுக்குள் நுழைந்து அவர் திருட நினைக்கிற காட்சிகள் சுவாரஸ்யம்.சொந்தம் செல்வம் அனைத்தும் இழந்து கடனாளியாக நிற்கும் அவரது பாத்திரம் அவரது நடிப்பின் மூலம் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.
இந்த பிரதான இரு நடிகர்கள் தவிர பிற பத்திரங்களில் வருபவர்களும் மனதில் பதிகிறார்கள். இப்படிப் பக்கத்து வீட்டுக்காரர், அரவிந்தசாமியின் கார் ஓட்டுநர், போலீஸ்காரர், நேர்காணல் செய்பவர், விஜய் சேதுபதியின் தாயார் ஆகியோரும் அந்தந்த பாத்திரங்களில் அழுத்தமாகப் பதிகிறார்கள்.
நீதிமன்ற காட்சிகளும் பேரம் செய்யும் விதமும் இயக்குநரின் கதையில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளன. அடுத்து உச்சகட்ட காட்சியில் மனித வாழ்விற்கு பணம் முக்கியமா என்கிற கேள்விக்கு பதில் கூற முயன்று உள்ளார்.
கிரணின் கேமரா மும்பையை அதன் இரு வேறு முரண்பட்ட தளங்களை அழகாகக் காட்டியுள்ளது. திருடனாக வரும் மராட்டிய நடிகர் சித்தார்த் ,அவரது தோற்றம் நடிப்பு அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
மௌனப் படம் என்பதால் சில இடங்களில் வெளிப்படும் கருத்தைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கலாம். வசனங்கள் இல்லாத குறையைப் பின்னணி இசை மூலம் ஏ ஆர் ரகுமான் நிரப்பி நிறைவு செய்கிறார். அந்த வகையில் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. பாடல்கள் ஒலிப்பதால் மௌனப் படம் என்று கூற முடியுமா என்று தெரியவில்லை.
கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில் ஏழைகளும், பணக்காரர்களும் யார் ? என்பதை அப்பட்டமாக காட்டும் நகரமாக மும்பை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆடம்பர வாழ்க்கையை வெளிக்காட்டும் அரவிந்த் சாமியின் வீட்டையும், ஏழ்மையை பிரதிபலிக்கும் விஜய் சேதுபதியின் வீட்டையும் காட்சிப்படுத்திய விதம் கச்சிதம்.
 சினிமாவில் வழக்கமான சட்டகங்களை மீறி இந்த முயற்சி செய்ததற்கு படக்குழுவினரைப் பாராட்டலாம்.மாறுபட்ட கதை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.
படத்தில் வசனம் இல்லை என்றாலும், தன் இசையைப் பேச வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற வகையிலான பின்னணி இசை, படத்தின் காட்சிகளைப் போல் பார்வையாளர்களின் மனதிலும் பல வகையான மாற்றங்களை உண்டாக்குகிறது.
படத்தொகுப்பாளர் ஆசிஸ் மாத்ரே மற்றும் கலை இயக்குநர் துர்கபிரசாத் மஹாபத்ரா ஆகியோரது பணி படத்திற்குக் கூடுதல் பலம்.
எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் பாண்டுரங் பெலகர், வசனம் இல்லாமல் படத்தை இயக்கியிருந்தாலும்,  எந்த வகையிலும் பணத்தைத் தேடி அலையும் கூட்டத்தில் அனைத்து துறையிலினரும் சிக்கி களங்கப்பட்டுள்ள விதத்தை  எடுத்துக் கூறியுள்ளார்.தான் சொல்ல நினைத்த கருத்தை பார்வையாளர்களிடம் நேர்த்தியாகப் புரிய வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘காந்தி டாக்ஸ்’ மக்களிடம் பேசப்படும்.