லெனின், அஸ்மின், ஆர்.வி. உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.ஆர். வினோத் இயக்கியுள்ளார். இசை கைலாஷ் மேனன். தயாரிப்பு ரெவ் ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் -லெனின்.
லெனின் கல்லூரியில் படித்து முடித்தவர். அவர் தனது கல்லூரிக் காலங்களில் அடிதடி வம்பு வழக்கு என்று ரவுசு கட்டியவர் தான். பிறகு அதையெல்லாம் விட்டுவிட்டு சாந்தமான மாற்றம், சொந்த தொழில் என்று இருக்கிறார். அவர் ஒரு கல்லூரி மாணவியைக் காதலிக்கிறார். லெனின் படித்த அக்கல்லூரியில் மாணவர் தேர்தல் நடக்கிறது.மாணவர் தேர்தல் என்றால் அரசியல் புகுந்து விளையாடும் அல்லவா? வெளியே வந்தவர் ஒரு கட்டத்தில் உள்ளே நுழைய வேண்டியிருக்கிறது.சமாதானப் பாதையில் செல்லவே முடிவெடுத்தவர் ஒரு கட்டத்தில்,கல்லூரிக்குள்ளேயே ஒரு கொலை செய்யும் அளவிற்குச் சென்று விடுகிறார்.’நல்ல நாளிலேயே தில்லைநாயகம்’ ஆன அவர் மீது முன்பே பல வம்பு வழக்குகள் உள்ளன. இதில் இருந்து தப்பிக்க அவர் ஒரு திட்டம் போடுகிறார்.அதற்கு ஆதரவாகவும் துணையாகவும் தனது காதலியையும் பயன்படுத்த நினைக்கிறார்.கொலையாளியைத் தேடி போலிஸ் கல்லூரிக்குள் நுழைகிறது.ஏன் கொலை செய்தார் அதன் பின்னணி என்ன?போலீஸ் இடம் இருந்து இவர் தப்பித்தாரா? இவரது திட்டம் என்ன? அது பலித்ததா என்பதுதான் ‘ரெட்லேபில் ‘ படத்தின் மீதிக்கதை.
மலிவான படங்களுக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் வேறுபாடு தெரியாமல் பலரும் இருக்கிறார்கள்..தமிழ் திரை உலகில் வெளி வருகிற பலபடங்கள் மலிவான படங்களாக உள்ளன.சின்ன பட்ஜெட்தானே என்று அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது.ஆனாலும் இந்த சின்ன பட்ஜெட் முயற்சியில்தான் பல நல்ல முத்துக்கள் விளைந்திருக்கின்றன.அதனால் எல்லா பட்ஜெட் படங்களையும் புறந்தள்ளவும் முடியாது.
பொதுவாகத் தயாரிப்பாளர்கள் நடிக்கிறார்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை வந்து விடுகிறது. இயக்குநரைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் அவர்கள் தங்களது பாத்திரத்தை அமைத்துக் கொண்டு நடிக்கவும் தெரியாமல் நம்மை நெளிய வைத்து விடுவார்கள்.அதிலும் தயாரிப்பாளரே கதாநாயகன் என்றால் கேட்கவே வேண்டாம். இந்த பயத்தோடு ’ரெட் லேபில்’ படத்தைப் பார்ப்பதற்கு உட்கார்ந்தால் நம் பயம் சற்று நேரத்தில் கலைந்து விடுகிறது.
படத்தை தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் லெனின், ஒரு புதுமுக நடிகர் போல் தெரியாமல் நன்றாகவே நடித்திருக்கிறார். அப்பாடா என்று நமக்குப் பெருமூச்சு வந்து விடுகிறது .கல்லூரியில் படிக்கும்போது, பிறகான காலங்கள் என்று தனது தோற்றத்தில் அவர் வித்தியாசம் காட்டியுள்ளார். ஒரு தயாரிப்பாளராக லெனின் முதலீடு போட்டது மட்டுமல்லாமல், நடிகராக உழைப்பையும் போட்டுள்ளார் .
ஒரு பாடகியாக அறியப்பட்ட அஸ்மின் ஒரு கதாநாயகிக்கான தோற்றப் பொருத்தம் இல்லை என்றாலும் இந்தப் பாத்திரத்தில் அவரை நம்ப வைத்துள்ளார்கள். அவரும் தனது பாத்திரத்தை முடிந்த அளவிற்குச் சிறப்பாகச் செய்து பார்ப்பவர்கள் மனதில் பதிகிறார். அந்த அளவிற்கு அவரது பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.இயக்குநர் சங்கத் தலைவரும் பல நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்கள் இயக்கிய வருமாறு ஆர்.வி.உதயகுமார் இதில் சொல்லும் படியான நினைவில் நிற்கும் பாத்திரத்தில் வருகிறார்.
முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், பாதகம் இல்லை ரகம்.
குறைந்தபட்ச நிகழ்விடங்களில் கதை பயணித்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு நிறைவாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சதீஷ் மெய்யப்பன்.அதற்கேற்ற வகையில் காட்சிக் கோணங்களில் அவரது ஒளிப்பதிவுத்திறமை வெளிப்பட்டுள்ளது.
மலையாள இசை அமைப்பாளர் கைலாஷ் மேனனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையை உயர்த்திப் பிடிக்கின்றன.
சமரசமற்ற படத்தொகுப்பால் படத்தின் விறுவிறுப்புக்கு உதவி இருக்கிறார் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்.
கல்லூப்ரி பின்னணி, காதல், அடிதடி, அரசியல், கிரைம் என்கிற சேர்மானம் திரைக்குப் புதிது அல்ல. ஆனாலும் அந்த வகைப்பாட்டில் ஒரு சலிப்பூட்டாக கதையை எழுதியிருக்கிறார் பொன்.பார்த்திபன்.பல திருப்பங்களை அமைத்து திரைக்கதையில் சுவாரஸ்யம் காட்டியுள்ளார்.
ஒரு சிறிய பட்ஜெட்டில் ஒரு நிறைவான திருப்தியான பட அனுபவத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் கே.ஆர்.வினோத் . இந்தக் கதையில் இருக்கை நுனியில் நம்மை இருத்தி வைக்கும் காட்சிகளும் உள்ளன.
கல்லூரி காதல் என்கிற அந்த கதையில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தால் அந்த நினைப்பை மாற்றி தனது திரைக்கதையால் படத்தை சுவாரசியப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். குறிப்பாக இரண்டாம் பாதியில் அவர் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.ஆகவே படம் பார்த்து முடியும்போது சின்ன பட்ஜெட் படம், புதுமுக நடிகர்கள், தயாரிப்பாளரே நடிகர்,அதுவும் கதாநாயகன் தாங்குமா என்கிற நமது கவலைகளை எல்லாம் மாற்றி திருப்தியுடன் அனுப்பி வைக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில், ‘ரெட் லேபில்’ திருப்தியான முத்திரை.


