த்ரிகுண், ஸ்ரீஜீத்தா கோஷ் , இனியா,ராதா ,ரவிமரியா தம்பி ராமைய்யா,சத்யன், ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் ,பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராஜசேகர். ஜி.ஒளிப்பதிவு – சி. விஜய ஸ்ரீ எம்.ஏ.டி.எஃப் டி,
இசை – அருணகிரி,எடிட்டிங் – கே. குமார் ,பாடல்கள் – சினேகன், பாஸ்கர் எஸ்.தேவ்,கலை இயக்குநர் – ஜெயகுமார்,
நடனம் – ஐ.ராதிகா. அருண் விஷுவல்ஸ் சார்பில் கோவை ரமேஷ் தயாரித்துள்ளார் .
கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தில் வார்டனும் கலந்துகொள்கிறார்.அப்போது ஒருவன் தற்கொலை முயற்சியில் தூக்கு போட்டுக் கொள்ள முயற்சி செய்கிறான் என்று தகவல் வந்து அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அவன் தான் சிவா. காப்பாற்றித் தூக்கிக்கொண்டு வந்து ஏண்டா சிவா உனக்கு என்ன பிரச்சினை என்கிறார்கள். சிவா பிளாஷ்பேக் கூறுவது போல் கதை விரிய ஆரம்பிக்கிறது.
அதன்படி அவன் கல்லூரியில் ஜூனியர் மாணவி அனிதாவைக் காதலிக்கிறான். அவர்களுக்குள் காதல் மோதல் என்று தொடர்ந்து ஒரு வழியாகத் தனியே ரூம் போட்டு தங்குகிறார்கள். அப்போது அவன், அவளிடம் தனது கதையைச் சொல்கிறான். தனது டியூஷன் ஆசிரியை மற்றும் ஒரு ஆன்ட்டி என்று அவன் ‘கரெக்ட்’ பண்ணிய அனுபவங்களைக் கூற ஆரம்பிக்கிறான்.கதையைக் கேட்ட அனிதா கோபமாகித் திட்டுகிறாள்.பிரிந்து போக நினைக்கிறாள். ஆனால் தோழிகள் எல்லாற்றையும் வெளிப்படையாகக் கூறுபவன் நல்லவனாக இருப்பான் என்று அவனை விட்டு விடாதே என்கிறார்கள்.அதற்குப் பிறகு அவர்கள் நட்பாகிறார்கள்.
அவன் தன் கதையைச் சொல்ல, அக்கதையைக் கேட்டு நண்பர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அவன் சொல்லச் சொல்ல அவர்கள் கேட்கக் கேட்க இப்படி முன்பின் என முன் கதையும் நிகழ் கதையும் என்று ஓட ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் அனிதாவுடன் அவனுக்குத் திருமணமும் திருமணம் ஆகி விடுகிறது. மாமியார் வீட்டுக்குச் சென்று போய்ப் பார்த்தால் அவனுக்கு அதிர்ச்சி. மாமியாரையும் காதல் மனைவியின் அக்காவையும் அவன் ஏற்கெனவே அவன் ‘கரெக்ட்’ செய்தது தெரிகிறது. அதற்குப் பிறகு நடக்கும் களேபரங்கள் தான் தான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
இந்த படத்தில் சிவாவாக த்ரிகுண் நடித்திருக்கிறார். கல்லூரி மாணவனாகத் தோற்றத்தில் பொருந்தி இருக்கிறார்.காதலி அனிதாவிடம் கொஞ்சும் போதும் கெஞ்சும் போதும் ரொமான்ஸ் செய்யும்போதும் காதல் மன்னனாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் தோற்றமும் அதற்கு ஈடு கொடுத்துள்ளது.
நாயகி அனிதாவாக ஸ்ரீஜித்தா கோஷ் நடித்திருக்கிறார்.கல்லூரி மாணவியாக சுமாரான தோற்றத்தில் அறிமுகமாகும் அவர், காதலிக்க ஆரம்பித்ததும் எப்போதும் கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு சிவாவைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் காதலியாக வருகிறார்.
டியூஷன் டீச்சராக இனியா வருகிறார். உடல் எடை கூடியது மட்டுமல்ல கவர்ச்சியையும் கூட்டிக் காட்டுகிறார்.
சுந்தரா டிராவல்ஸ் ராதா அனிதாவின் அம்மாவாக வருகிறார். உடல் எடை கூடினாலும் அந்த ஆண்டி தோற்றத்தில் கலகல கவர்ச்சி காட்டி இளைஞர்களை ஈர்க்கிறார்.படத்தில் கதாநாயகியை விட அந்த இருவரின் கவர்ச்சிக்காட்சிகள் தான் கொடி கட்டிப் பறக்கின்றன.வார்டனாக வரும் ரவிமரியா மலிவான ஜோக் அடித்தாலும் சிரிக்க வைக்கிறார்.
சிவாவின் நண்பர்களாக வரும் அந்தக் குழுவினரும் நக்கல் நையாண்டி என்று கலகலப்பூட்டுகிறார்கள்.
நாயகனின் மாமனார் தம்பி ராமைய்யா, சகலை சத்யன் அடிக்கும் லூட்டிகள் ஏ ரகம். ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் ,பிரபல தெலுங்கு நடிகர் ஆலி, ரகு பாபு ஆகியோரும் வருகின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ராஜசேகர். ஜி. படத்தை முழு நீள ‘காம’டிப் படமாக உருவாக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சி. விஜய ஸ்ரீயின் கேமரா, பின்புலக் காட்சிகளிலும் கவர்ச்சிக் காட்சிகளிலும் சரியாகக் குறிவைத்து ஆழமாகக் காட்டியுள்ளது. அவரது கேமரா வஞ்சகம் இல்லாமல் காட்சிகளை மேய்ந்துள்ளது.
கிளு கிளு படத்திற்கு ஏற்ற இசையை அருணகிரி அமைத்திருக்கிறார் .பரபரப்பு ஆக்ஷன் காட்சிகள் இல்லாததால் கிளுகிளுப்பு காட்சிகளைக் கலகலப்பாகத் தொடுத்துள்ளார் குமார்.
எந்தப் பாத்திரம் வாயைத் திறந்தாலும் காம நெடி வீசுகிறது,இரட்டை அர்த்த வசனங்கள் ஏராளம் உள்ளன.ரூம் போட்டு யோசித்து அனைத்துக் காட்சிகளையும் அடல்ஸ் ஒன்லி ரகத்தில் எடுத்து ‘ஏ’ ராளமான தாராள ஜாலி கலகலப்புக்கு ஏற்ற வகையில் இளைஞர்களைக் கவரும் வகையில் இந்தப் படம் கிளுகிளுப்பாக உருவாகி உள்ளது.
மொத்தத்தில் இது வயது வந்தவர்களுக்கு மட்டுமான ‘காம’டிப் படமாக உருவாகியுள்ளது.


